"சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக அரசு விரும்புகிறது. சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைவதற்காக, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல்படுத்துவதை நிறுத்தி வைத்து, தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த ஐகோர்ட், சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்தது. பின், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பாடத்திட்டங்களை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும், அக்குழு தனது அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன்பின் ஒரு வாரத்துக்குள் பிரதான வழக்கை ஐகோர்ட் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஐகோர்ட்டில் பள்ளி கல்வித் துறை செயலர் சபிதா தாக்கல் செய்த பதில் மனு:
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள குழுவானது, இரவு பகலாக பணியாற்றி வருகிறது. பாடத்திட்டங்களை இக்குழு ஆய்வு செய்கிறது. ஜூலை 5ம் தேதிக்கு முன் அறிக்கையை குழு தாக்கல் செய்த பின், மனுவில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு அவசியம் இருக்காது. சமச்சீர் கல்வியை அரசு கைவிடவில்லை. பாடத்திட்டங்களை ஆய்வு செய்து, தரமான கல்வியைத் தர வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நியமிக்கப்பட்டுள்ள குழுவானது, பாடத்திட்டங்கள், பாடப் புத்தகங்களை விரிவாக ஆய்வு செய்கிறது.
திருத்தச் சட்டமானது, சமச்சீர் கல்வியை எப்போது அமல்படுத்துவது என்பதை முடிவு செய்ய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது. முந்தைய அரசு நியமித்த மாநில குழுவானது, சட்டத்தில் கூறியுள்ளபடி அமைக்கப்படவில்லை. எனவே, இது சட்டத்தை மீறியதாகும். மத்திய சட்டத்துக்கு இணையாக மாநில அரசு சட்டம் இருக்க வேண்டும். ஆனால், முந்தைய அரசு அமைத்த குழுவானது, மத்திய சட்டப்படி இல்லை. எனவே, இந்தச் சட்டத்தை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த முடியாது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டிய தேவை உள்ளது.
பாடத்திட்டங்கள், பாடப் புத்தகங்கள் தரமாக இல்லை என்கிறபோது, சமச்சீர் கல்விச் சட்டத்தை அமல்படுத்துவதை தள்ளி வைப்பது தவிர, அமைச்சரவைக்கு வேறு வழியில்லை. அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. பாடத்திட்டம் குறித்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. எனவே, அரசு எடுத்த முடிவில் அடிப்படையில்லை என்கிற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. பல்வேறு குறைபாடுகள் இருந்ததால், சமச்சீர் கல்விச் சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை.
அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்களை அரசு அழித்து விடவில்லை. சமச்சீர் கல்வித் திட்டத்தின்படி, ஆறு கோடியே 50 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விட்டதாகக் கூறுவது தவறு. மாணவர்களின் நலன்களை இந்த அரசு முக்கியமான கவனத்தில் கொண்டுள்ளது. சமச்சீர் கல்வியை அமல்படுத்த அரசு விரும்புகிறது. சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைவதற்காக, அதை அமல்படுத்துவதை தள்ளி வைத்துள்ளோம். சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். அதில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: