சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் தமிழக அரசின் சட்டத் திருத்த  மசோதாவுக்கு, சென்னை ஐகோர்ட் நேற்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ள  நிலையில், இடைக்கால தடையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்  முறையீடு செய்யுமா அல்லது, சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துமா என  தெரியவில்லை. இந்த பிரச்னைகள் காரணமாக, பள்ளி திறப்பு தேதி, மேலும் 10  நாட்கள் வரை தள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய தி.மு.க., அரசு, சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. மாநில  பாடத்திட்டம் (ஸ்டேட் போர்டு), மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும்  ஓரியண்டல் என, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை, நான்கு வகையாக உள்ள கல்வி  முறைகளை ஒருங்கிணைத்து, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வகையான, ஒரே தரத்திலான  கல்வி திட்டத்தை வழங்கும் வகையில், சமச்சீர் கல்வி திட்டத்தை  அறிமுகப்படுத்தியது. "சமச்சீர் கல்வி திட்டம் தரமானதாக இல்லை; மாணவர்களின்  கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை. சமச்சீர் கல்வி திட்டத்தை  வலுப்படுத்தி, தரத்தை உயர்த்தி அமல்படுத்தப்படும். அதுவரை, இந்த ஆண்டு,  பழைய கல்வி திட்டம் அமலில் இருக்கும். பழைய பாடப் புத்தகங்களை  அச்சடிப்பதற்கு வசதியாக, பள்ளிகள் திறக்கும் தேதி, ஜூன் 15க்கு தள்ளி  வைக்கப்படுகிறது' என, புதிய அமைச்சரவை கூட்டத்திற்குப்பின், தமிழக அரசு  அறிவித்தது.
கடந்த 7ம் தேதி, சட்டசபையில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் தமிழக  அரசின் சட்டத் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, அன்றே விவாதம்  நடத்தி, நிறைவேற்றப்பட்டது. அதே நாளில், சட்டத் திருத்த மசோதா, கவர்னருக்கு  அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு, அரசு கெஜட்டிலும் வெளியிடப்பட்டது. சமச்சீர்  கல்வி திட்டத்தை நிறுத்தும் முடிவை எதிர்த்து, சிலர், சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சமச்சீர்  கல்வி திட்டத்தை நிறுத்தும், தமிழக அரசின் சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால  தடை விதித்து, சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பு கூறியது. "சமச்சீர் கல்வி  திட்டத்தை, நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை  அமல்படுத்த வேண்டும்' என்று, நீதிபதிகள் தீர்ப்பு கூறியுள்ளனர். இன்னும்  நான்கு நாட்களில், பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், இந்த தீர்ப்பு  வெளியாகி உள்ளது.
ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்  முறையீடு செய்யுமா அல்லது, சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துமா என்ற  கேள்வி எழுந்துள்ளது. மேல் முறையீடு செய்தால், அதன் மீது தீர்ப்பு பெற, கால  அவகாசம் தேவைப்படும். சுப்ரீம் கோர்ட்டுக்கு தற்போது கோடை விடுமுறை அமலில்  உள்ள நிலையில், நான்கு நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து, தீர்ப்பு  பெறுவது என்பது சாத்தியமில்லை. அதே நேரத்தில், சமச்சீர் கல்வி திட்டத்தை  அமல்படுத்தவும், தமிழக அரசு தயாரில்லை என, கல்வித்துறை வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு  செய்யும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக, பள்ளிகள் திறப்பு  தேதி, மேலும் 10 நாட்கள் வரை தள்ளி வைக்கப்படலாம் என,  எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக