தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

23.6.11

சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் இலவச சீருடை சற்று தாமதமாகும்

தமிழகம் முழுவதும், பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, இலவச சீருடை வழங்குவதற்காக, துணி தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கான சீருடை தயாரிக்கும் பணி துவங்கும். இந்த ஆண்டு தேர்தல் காரணமாக, துணிகள் தயாரிக்கும் பணி இம்மாதம் தான் துவக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் சீருடை தைக்கத் தேவையான துணிகளை தயாரிப்பதற்காக, நெசவாளர்களுக்கு நூல் வழங்கும் பணி, தற்போது நடந்து வருகிறது.

திருச்செங்கோடு, கரூர், சேலம், ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களிடம், துணி தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீருடைக்காக 105 லட்சத்து 93 ஆயிரம் மீட்டர் துணி தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துணி தயாரிக்கும் பணியை, செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த வாரம், சென்னை குறளகத்தில், கைத்தறி துணி நூல் துறை, துணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி அமலாக்க அலுவலர்களின் பணித்திறனாய்வு கூட்டம் நடந்தது. கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ரமணா தலைமை தாங்கினார். துறைச் செயலர் முத்துகுமாரசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், "உண்மையில் நெசவுத் தொழில் செய்யும் நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ள சங்கங்களிடம், சீருடை தைப்பதற்குத் தேவையான துணியை தயார் செய்யும் பணியை ஒப்படைக்க வேண்டும். சீருடைத் துணிகளை, எவ்விதத் தொய்வுமின்றி, உரிய காலத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச வேட்டி சேலை உற்பத்தியை துவக்க, கைத்தறி, விசைத்தறி கூட்டுறவு சங்கங்களில், இப்பணியில் ஈடுபடும் தறிகளைக் கண்டறிந்து, ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், முதல் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், சத்துணவு சாப்பிடுவோருக்கு, ஆண்டுதோறும் அரசு சார்பில் இலவச சீருடை வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு, அரைக்கால் சட்டை மற்றும் சட்டை வழங்கப்படுகிறது.

முதல் வகுப்பிலிருந்து, 6ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, பாவாடை, சட்டை, 6ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரையிலான மாணவியருக்கு, தாவணி, ஜாக்கெட் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 50 லட்சம் மாணவர்களுக்கு, தலா ஒரு சீருடை இலவசமாக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு காக்கி அல்லது நீல நிற டவுசர், மாணவியருக்கு நீலநிறப் பாவாடை அல்லது தாவணி வழங்கப்படுகிறது. இலவச சீருடைக்கு தேவையான துணிகளை தயாரிக்கும் பணி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் தமிழ்நாடு துணி நூல் கழகத்திடம் ஒப்படைக்கப்படும். அவை, துணி தயாரிப்பதற்கு தேவையான நூல்களை, டெண்டர் மூலம் கொள்முதல் செய்கின்றன. பின்னர் நூல்களை, கைத்தறி துணி நூல் துறையின் கீழ் செயல்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு பிரித்து கொடுக்கின்றன.

கூட்டுறவு சங்க அதிகாரிகள், சங்கத்தில் உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கு நூல்களை வழங்குவர். அதைக் கொண்டு நெசவாளர்கள் துணிகளை தயார் செய்வர். அதற்குரிய கூலி அவர்களுக்கு வழங்கப்படும். நெசவாளர்கள் நெய்து தரும் துணிகள், தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் பதப்படுத்தப்படும். சமூக நலத்துறையினர் பதப்படுத்தப்பட்ட துணிகளை வாங்கி, மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் சீருடை தயாரிப்பர். பின்னர் பள்ளிக் கல்வித்துறை மூலம், மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படும். தற்போது மாணவ, மாணவியருக்கு சற்று தாமதமாக சீருடை கிடைத்தாலும், சீரான அளவில் தைக்கப்பட்டதாக, முறையாக ஒரே நேரத்தில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.


நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்