தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.6.11

எதிர்பார்ப்பு: 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக அந்தஸ்து

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக தங்களுக்கு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தமிழகத்தில் 1-8ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பெற்று வந்தனர். தொடர்ந்து அரசாணை 100ன்படி 6-8 வகுப்புகளுக்கு இளநிலை பட்டதாரி ஆசிரியர்களை 2004ம் ஆண்டு 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மாதம் 4 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். 5 ஆண்டுகள் கழித்து இந்த ஆசிரியர்கள் 4,625 - 175 - 7,00 என்ற ஊதிய விகிதத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் இந்த ஆசிரியர்களை 5,500-175-9,000 என்ற ஊதிய விகிதத்தில் 1.6.2006 முதல் காலமுறை ஊதியத்தில் மாற்றி ஆணையிடப்பட்டது. இதனால் ஒரே பணி, இரு வேறு ஊதிய விகிதம் என்ற அவல நிலைக்கு 6,7 மற்றும் 8ம் வகுப்பு கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தள்ளப்பட்டனர். 

கடந்த திமுக ஆட்சியில் ஏற்கனவே பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தப்பட்ட பின்னர் இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர். அவ்வாறு செய்யாததால் இடைநிலை ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாவும் புகார் தெரிவிக்கின்றனர். 

தொடக்க கல்வித் துறையில் 6,7 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பெறும் போது அதில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 1-5 வகுப்புகளுக்கு கீழிறக்கம் செய்ய வாய்ப்புண்டு. ஆனால் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் இந்த வாய்ப்பு இல்லை. 

தமிழகத்தில் தற்போது உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களில் 75 சதவீதம் பேர் தமிழாசிரியர்கள் தகுதியுடனும், 20 சதவீதம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதியுடனும் உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பேர் மட்டுமே தங்களது கல்வித் தகுதியை உயர்த்தி கொள்ளாதவர்கள். இவர்கள் பணியாற்றிய சீனியாரிட்டியை கருத்தில் கொண்டு குறுகிய கால பயிற்சி அளித்து முன் உதாரணங்கள் பலவற்றின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தலாம். 

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன் கூறியதாவது
அரசு, அரசு உதவி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த கோரி கடந்த திமுக ஆட்சியில் பல முறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. கல்வி மாநாட்டில் முன்னாள் கல்வி அமைச்சர் அளித்த உறுதியும் நிறைவேற்றவில்லை. இதனால் இந்த ஆசிரியர்கள் விரக்தி அடைந்தனர். 

உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணித் தொகுதி, முடிவுறு பணி தொகுதி ஆகிவிட்டது. பல்வேறு அரசாணைகளின்படி மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், இரண்டாம் நிலை தமிழாசிரியர்கள் முதல் நிலை தமிழாசிரியர்களாகவும், இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதம் பெற்ற தொழிற் கல்வி ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் நிலைக்கும் உயர்த்தப்பட்டுள்ளனர். எனவே, இந்த முன் உதாரணங்களின் அடிப்படையில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அரசு, அரசு உதவி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் 1.6.2006க்கு முன்பிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த 20 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் சார்பில் அரசிடம் வலியுறுத்துகிறோம். 

இவ்வாறு மாநில அமைப்பு செயலாளர் கூறினார்.

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்