தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.6.11

காலாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

சமச்சீர் கல்வி விவகாரத்தில், சென்னை ஐகோர்ட் வழங்கும் தீர்ப்புக்குப் பின், பாடப் புத்தகங்களை வினியோகித்து, வகுப்புகளை ஆரம்பிப்பதற்குள் ஜூலை முடிந்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், செப்டம்பர் மாதம் நடத்த வேண்டிய காலாண்டுத் தேர்வு பாடப் பகுதிகளை, ஆகஸ்ட் ஒரு மாதத்தில் நடத்தி முடிக்க முடியாது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னைகள் காரணமாக, காலாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி தொடரலாம் என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கும் பிரச்னையில்லை. இதர வகுப்புகளுக்கு, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து, நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அடுத்த ஒரு வாரத்தில் ஐகோர்ட் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது. 

அதன்படி, ஜூலை முதல் வாரத்தில் தான், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை வினியோகிக்க வேண்டும். இந்தப் பணிகள் முடிந்து, வகுப்புகள் ஆரம்பிப்பதற்குள், ஜூலை கரைந்துவிடும் என, ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதன்பின், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து நடத்த வேண்டிய காலாண்டுத் தேர்வுக்கான பாடப் பகுதிகளை, ஆகஸ்ட், ஒரு மாதத்தில் எப்படி நடத்தி முடிக்க முடியும் என்று, ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்கள் கூறியதாவது
சமச்சீர் கல்வி திட்டத்தை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்யவில்லை. இதர வகுப்புகளுக்கும் அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளது. எனவே, தற்போதுள்ள சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் தேவையான மாற்றங்களை செய்து, பாடத் திட்டங்களை அமல்படுத்த உத்தரவிடப்பட்டால், அச்சிடப்பட்ட ஒன்பது கோடி பாடப் புத்தகங்களில் மாற்றங்கள் செய்து, மாணவர்களுக்கு வழங்குவது என்பது சவாலான பணியாக இருக்கும். செம்மொழி மாநாட்டு இலச்சினை மற்றும் அந்த மாநாடு தொடர்பாக பல பகுதிகள், பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றையெல்லாம் அகற்றிய பிறகே, மாணவர்களுக்கு வழங்க வேண்டிவரும். இது மிகப்பெரும் பணி, குறுகிய காலத்திற்குள், அப்பணியை முடிக்க முடியாது.

தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களில் உள்ள செம்மொழி மாநாடு இலச்சினையை மறைத்து வழங்குவதே பெரும் பணியாக உள்ளது. இதில், ஒன்பது கோடி பாடப் புத்தகங்களையும் மறைத்து, கிழித்து வழங்குவது என்பது சாதாரண பணி கிடையாது. எனவே, என்ன நடக்கப்போகிறது என்பது, ஐகோர்ட் வழங்கும் தீர்ப்புக்குப் பிறகுதான் தெரியும். 

எப்படியிருந்தாலும், ஜூலை இறுதியில் பாடங்களை நடத்தத் துவங்கி, ஆகஸ்ட் ஒரு மாதத்தில், காலாண்டுத் தேர்வுக்கான பாடப் பகுதிகளை நடத்தி முடிக்க முடியாது. சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தினாலும், பாடங்களை முடிக்க முடியாது. என்ன செய்யப் போகிறோம் என்று, எங்களுக்கு தெரியவில்லை. காலாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா என்பது தெரியவில்லை.

வழக்கமாக, ஜூலை முதல் வாரத்தில் முதல் இடைப் பருவத் தேர்வுகள் நடைபெறும். 1, 6, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளைத் தவிர, இதர வகுப்பு மாணவர்களுக்கு, இடைப் பருவத் தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்