தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.4.10

இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு தரம் உயர்த்தி பதவி உயர்வு வழங்கிடுக


கடித எண்: 06/2010, நாள் 17-04-2010.

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை.

ஐயா,
        

பொருள்:

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் 2010-ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அளிக்கும் போது அவர்கள்  பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலேயே பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அளித்தல் சார்பு.

பார்வை:  

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) மற்றும் தகவல் வழங்கும் அலுவலரின் செயல் முறைகள், ஓ.மு.எண். 11996,0சி3,இ1   நாள் 18-12-2009.

வணக்கம்.

உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 28,000 இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசாணை எண் 100, நாள் 27-06-2003க்கு பிறகு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் கிடையாது. ஆனால் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால்; அரசாணை 100ன் படி 27-06-2003க்குப் பிறகு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிரந்தர காலிப்பணியிடம் ஏற்படும் போது அவை பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக மாற்றப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
      
ஆனால் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று செல்லும் போது அனேகமாக வட மாவட்டங்களுக்கு பதவி உயர்வு பெற வேண்டிய நிலை உள்ளது. கலந்ததாய்வின் போது தென் மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் காட்டப்படுவது இல்லை. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள்  அனேகர் பதவி உயர்வுக்கு செல்ல முடியாமல் பணித்துறப்பு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதிலும் அனேக இடைநிலை ஆசிரியர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாத காரணத்தால் நிரந்தர பணித்துறப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

 மேலும் சில மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் திருத்திய ஆணை மூலமாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலேயே பட்டதாரி  ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
                      
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 72 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வெளிமாவட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.                           
                                                               
எனவே 2010ல் நடைபெறுகின்ற பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வின் போது அந்தந்த மாவட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் சொந்த மாவட்டங்களிலேயே அவர்கள் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு தரம் உயர்த்தி பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிட பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இவண்,

(ஒப்பம்)
மாவட்ட நிர்வாகிகள்,
கன்னியாகுமரி.

நகல்:

  1. மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை, சென்னை.
  2. உயர்திரு பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தலைமைச்செயலகம், சென்னை.
  3. இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை.
  4. இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி), சென்னை.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்