தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.4.10

திரிசங்கு நிலையில் இருபத்தெட்டாயிரம் இடைநிலை ஆசிரியர்கள்

 தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 28 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், திரிசங்கு நிலையில் பதவி உயர்வு இல்லாமல் பரிதவிக்கின்றனர். 

தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது 2002ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், ஏற்கனவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு இல்லை: உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், இன்றும், பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் 6 முதல் 10ம் வகுப்பு வரை அதே பாடங்களைத் தான் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இருந்தும் இவர்களுக்கு பதவி உயர்வு, மற்ற சலுகைகள் வழங்கப்படவில்லை. 2002ம் ஆண்டு முதல் இன்று வரை இடைநிலை ஆசிரியர்கள் நிலையிலேயே பணியாற்றி வருகின்றனர்.

தரம் உயர்த்த வேண்டும்: உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் பலர் பட்டதாரிகளாகவும், முதுநிலை பட்டதாரிகளாகவும் பட்டம் பெற்றுள்ளனர். இருந்தும் அரசு, இடைநிலை ஆசிரியர்களை இன்று வரை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க முன் வரவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு சிறப்பு பயிற்சிகள் வழங்கி பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்தி பணி நியமனம் செய்திட வேண்டும்.

பல போராட்டங்கள்: 28 ஆயிரம் ஆசிரியர்கள் தங்களை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டங்கள், முதல்வர் முதல் பள்ளிக்கல்வி அமைச்சர் வரை பல முறை கோரிக்கைகள் விடுத்தும், இன்று வரை அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. 28 ஆயிரம் ஆசிரியர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

திரிசங்கு நிலையில் இடைநிலை ஆசிரியர்கள்: பாதிக்கப்பட்டுள்ள 28 ஆயிரம் ஆசிரியர்களில் பலர் ஓய்வு பெற்று வருகின்றனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களைப் பற்றி கண்டு கொள்ளாததால் பல ஆண்டுகளாக பதவி உயர்வு, சம்பள உயர்வு இல்லாமல் ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். சம்பள விதியும் குறைவாகக் கிடைப்பதால், திரிசங்கு நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர். அரசும், பள்ளிக் கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


நன்றி: தினமலர் 06-04-2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்