தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.5.12

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 5 வது அகில இந்திய மாநாடு இன்று துவங்கியது

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 5 வது அகில இந்திய மாநாடு கன்னியாகுமரி அஜித் பாக் நகரில் 17, 18, 19 தியதிகளில் நடைபெறுகிறது.

துவக்க நாளான இன்று காலையில் கொடியேற்றுதலுடன் நிகழ்ச்சி துவங்கியது. காலை 10 மணிக்கு கூட்டமைப்பின் தலைவர் கார்த்திக் மண்டல், வெண்கொடியில் எ. டி. எப் ஐ என சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்ததோடு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவரும் நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி முன்னாள் முதல்வருமான ஜேம்ஸ் ஆர். டேனியல் வரவேற்புரையாற்றினார். கல்வியாளரும் கேரளாவில் உள்ள காலடி ஸ்ரீ சங்காராச்சாரியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர். கே. என். பணிக்கர் துவக்கவுரையாற்றினார்.

அவர் பேசுகையில்:
ஆசிரியர்கள் என்பவர்கள் சமுதாய மாற்றத்தை உருவாக்கும் சக்தி படைத்தவர்கள். அவ்வாறு சக்தி படைத்தவர்கள் கூடியிருக்கும் 5 வது மாநாடு இது. எனக்கு கிடைத்த அனுபவத்தின் வாயிலாக பல்வேறு நிகழ்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

நமது கல்வியின் வாயிலாக நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க முயல வேண்டும். கல்வி என்பது பரிணாமத்தின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய கல்வி முறை நம் சமுதாயத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது. கல்வி உரிமைச் சட்டம் பெரிய சமுதாய மாற்றத்தை நிகழ்த்தக் கூடியது அல்ல. அதைத் தொடர்ச்சியாக செயல்படுத்தினால் சில மாற்றம் வரலாம். அதற்கு கல்வி திட்டத்திலும் பல மாற்றங்களை உருவாக்க வேண்டும். கல்வி தரமானதாக இருக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனையை தூண்டுவதாக புதிய படைப்புகளை, கண்டுபிடிப்புகளை உருவாக்கத் தக்கதாக இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு பயிற்சிகளை அரசு வழங்கி வருகிறது. அது எந்த அளவிற்கு மாணவர்களின் வளர்ச்சிக்கு பயன்பட்டிருக்கிறது என்பது கேள்விக் குறியே. தேசிய கல்வித் திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அவ்வாறான மாற்றங்கள் நிகழும் போது மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். சிறந்த ஆய்வுகளை மாணவர்கள் செய்து முடிக்க உதவும். ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்களை ஆய்வுக்கு தயார் படுத்தும் வகையில் அவர்களுக்கு கல்வியை கொடுக்க வேண்டும். ஏழை எளிய நடுத்தர வர்க்க மாணவர்கள் கல்வி பெற அரசு முழுமையாக வழிவகை செய்யவில்லை.
   
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் புத்தகத்தில் உள்ள குறைபாடு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறான தவறுகள் நடைபெறாத வண்ணம் அரச கண்காணிக்க வேண்டும். மாணவர்களிடம் ஆசிரியர்கள் கண்டிப்பாக நடந்து கொள்வதும் அவர்களை பேசவிடாமல் ஆளுமையை செலுத்துகிறோம். இதை மாற்றி புதிய பார்வையோடு நாம் அணுக வேண்டும். மாணவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதற்கான சிறப்பு பயிற்சிகளை நாம் பெறவேண்டும். இதற்கு ஆளும் அரசுகள் முயற்சிக்க வேண்டும்.
   
புத்தகங்கள், ஊடகம், தொடர்பியல் சாதனங்களை பயன்படுத்தி சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். கல்வி நிலையம் ஜனநாயக முறையில் இயங்க வேண்டும். உலகமயம், தாராளமயம், தனியார்மயம் காரணமாக கல்வி நிலையம் தொழிற்சாலையாக மாறி வருகிறது. பணம் தயாரிக்கும் இயந்திரமாக மாணவர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது.
   
ஒரு காலத்தில் கிராமத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் குறைவாக இருந்தது. ஆனால், மரியாதை அதிகமாக இருந்தது. அந்நிலை இன்று முற்றிலம் மாறி விட்டது. ஆசிரியர், மாணவர்,  பெற்றோர் உறவு முறையில் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது.

தினசரி பத்திரிகைகளைத் திறந்தால் வன்முறை என செய்தி வருகிறது. எதற்கும் வன்முறை, தீவிரவாதம் என மாறி வருகிறது. அதை மாற்ற ஆசிரியராகிய உங்களால் மட்டுமே முடியும்.
   
 மாணவர்களின் கைகளில் இருக்கும் புத்தகங்கள் அனைத்தும் மத, சாதிகளின் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் வண்ணமே உள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
   
இவை மாற்றப்பட்டு மனிதநேயம், பொருளாதாரம், அரசியல், ஜனநாயகம் போன்றவற்றை போதிக்கின்றவர்களாக இருக்க வேண்டும். இதற்காக அரசு ஒரு புத்தகக்குழுவை உருவாக்க வேண்டும். தவறு செய்யும் நபர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். அப்போது தான் சிறந்த புத்தகங்கள் மாணவர்களின் கைகளில் கிடைக்கும். அவ்வாறான புத்தகமே சிறந்த மாணவர்களை உருவாக்கும். அதை உருவாக்க இம்மாநாடு முயற்சிக்க வேண்டும். மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன். என்றார்.

அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அசோக் பர்மன் வாழ்த்திப் பேசுகையில்:   
   
குறைந்தபட்சக் கல்வித் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். மத்திய அரசின் கல்வித் திட்டங்களை மாநில அரசுகள் சரியாக கண்காணித்து செயல்படுத்த வேண்டும். அதற்கான போராட்டத்தை துவங்க வேண்டும். போராட்டம் என்பது நமக்கு புதிதல்ல. 2006 ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தம் உலகமே அறியும். இதுபோன்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். சிறைக்கு அனுப்பப்பட்டாலும் நாம் பயம் கொள்ளக் கூடாது.
ஆசிரியர் மாணவர் உறவை மேம்படுத்த வேண்டும். நாம் யாவரும் இணைந்து தாராளமயம், தனியார்மயத்தை எதிர்த்து போராட வேண்டும். நம் மாணவர்களை தயார்படுத்த வேண்டும். ஊதிய விகிதத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்க அரசை நிர்பந்திக்க வேண்டும்.

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். முத்துசுந்தரம் வாழ்த்திப் பேசுகையில்:

உலக அரசியலில் முதலாளித்துவத்தின் தாக்கம் குறைந்துள்ளது. உலக அரங்கில் ஏற்படும் பொருளாதார பின்னடைவுக்கு அமெரிக்காவே காரணமாக இருக்கிறது. தொழிலாளர்களின் வியர்வையில் பெற்ற பணத்தை முதலாளிகளும் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகளும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். ஆனால், தொழிலாளர்களை அவர்களை கண்டு கொள்வதில்லை. அவர்களின் ஊதியம் குறைக்கப்படுகிறது. மேலும், தொழிலாளர் குறைப்பினால் வேலையிழப்பும் ஏற்படுகிறது. முதலானித்துவ நாடுகளில் இதுபோன்ற வேலைகளை செயல்படுத்தி வருகின்றன. அதையே இந்திய அரசும் பின்பற்றுகிறது. இதற்கு உடன்பட மறுக்கும் நாடுகளில் ஆட்சி தூக்கியெறியப்படுகிறது. இவற்றை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஏனெனில் இது நம் கல்வி திட்டத்தையும் சிதைக்க முயலுகிறது.
   
கல்விக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி குறைவாக உள்ளது. 60 ஆண்டுகளுக்கு மேலாக அதற்கு தேவையான பொருளாதார தேவைகளை அரசு ஏற்படுத்த மறுக்கிறது. அந்நிய கல்வி நிறுவனங்களுக்கு வெஞ்சாமரம் வீசி வரவேற்கிறது. இது நம் கல்வியின் தரத்தையும் தனித்தன்மையையும் சிதைத்து விடும்.
   
முகேஷ் அம்பானி போன்ற பெரும்பணக்காரர்களின் கைப்பாவையாக ஆளும் அரசுகள் செயல்படுகிறது. மக்களுக்கு வழங்கும் சலுகைகளை குறைத்துக் கொள்ளும் மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது. ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில்  நியமிக்கப்படுவது வேதனையளிக்கிறது. மேற்கு வங்க இடதுசாரி அரசு பல்வேறு சலுகைகளையும் உரிமைகளையும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கியுள்ளது. ஆனால், இப்போது ஆளும் மமதா அரசு இதற்கு எதிராக செயல்படுகிறது. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தத்தில் ஆளும் கட்சியைச் சார்புடைய ஐஎன்டியுசி முக்கிய எதிர்கட்சி சார்புடைய பிஎம்எ° போன்ற தொழிற்சங்கங்களே தொழிலாளர் நலன் கருதி இடதுசாரி சங்கங்களோடு இணைந்து பேராட்டத்தை சந்தித்தன. இது ஆட்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது. இதை நாம் கவனத்தில் கொண்டு உரிமைகளை காக்க நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
   
தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வாழ வழியின்றி தவிக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். இவற்றை மாற்ற நாம் திட்டமிட வேண்டும். இது போன்ற கொடுமைகளை எதிர்த்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போர்க்களம் காண வேண்டும்.
   
இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ரித்த பிரதா பானர்ஜி வாழ்த்தி பேசுகையில்:
   
மாணவர்களின் சார்பாக ஆசிரியர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இடதுசாரிகளின் தூண்டுதல் காரணமாக முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கல்வியில் பல மாற்றங்களை நிகழ்த்தியது. ஆனால் தற்போதைய இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் சூழ்நிலை அவ்வாறு இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது கொள்கை. அது நமது கல்வியிலும் இருக்க வேண்டும். அதற்கான மாற்றங்கள் கல்வித் திட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் பல்வேறு போராட்டங்களில் 43 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.    
   
முதலாளித்துவ சிந்தனை கொண்ட எதிர்கட்சிகளால் இடதுசாரிகளின் உயிர்களை வேண்டுமானால் பறிக்கலாமே தவிர கொள்கைகளை அல்ல. இதுபோன்ற அடக்குமுறைகளை ஒடுக்க இந்தியா முழுவதும் இருக்கின்ற இடதுசாரி இயக்கங்களை இணைத்து ஒரு யுத்தத்திற்கு தயாராக வேண்டும். அதற்கு இந்த மாநாடு வழிவகை செய்யும் என நான் நம்புகிறேன். ஆசிரியர் மாணவர் ஒற்றுமை ஓங்குக. இவ்வாறு பேசினார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்