தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

15.4.11

நாங்குநேரி தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சம்பளத்தில் முறைகேடு

நான்குநேரி சட்டசபைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கியதில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

தமிழக சட்டசபைத் தேர்தல் கடந்த 13ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய தேர்தல் கமிஷன் ஆசிரியர்களை நியமனம் செய்தது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும் ஒரு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரும், மூன்று அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டனர். ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். 

 இதில் தேர்தல் கமிஷன் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு சம்பளமாக ஆயிரத்து 450 ரூபாயும், அலுவர்களுக்கு ஆயிரத்து 75 ரூபாய் வழங்குவதாக அறிவித்து இருந்தது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் நான்குநேரி தவிர்த்த 9 சட்டசபைத் தொகுதிகளிலும் தேர்தல் கமிஷன் அறிவித்தபடி ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு ஆயிரத்து 450 ரூபாயும், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஆயிரத்து 75 ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டது. 

ஆனால் நான்குநேரி சட்டசபைத் தொகுதியில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் அறிவித்தபடி ஆயிரத்து 450 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஆயிரத்து 75 ரூபாய்க்கு பதிலாக 175 ரூபாய் குறைத்து 900 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தவர்கள் 900 ரூபாய் சம்பளத்தை வாங்க மறுத்து நள்ளிரவில் போராட்டம் நடத்த துவங்கி விட்டனர். 

இதுகுறித்து நேற்று முன்தினம் நள்ளிரவில் சம்பளம் வாங்க மறுத்த ஆசிரியர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஜெயராமனிடம் செல்போனில் புகார் செய்தனர். கலெக்டர் ஜெயராமன் தேர்தல் கமிஷன் அறிவித்தபடி ஆயிரத்து 75 ரூபாயை உடனடியாக வழங்க நான்குநேரி தொகுதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் புகார் செய்த ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மட்டும் மீதமுள்ள 175 ரூபாய் வழங்கினர். ஆனால் புகார் செய்யாத மற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 900 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று தேர்தல் பணி முடிந்து வீட்டிற்கு வந்த நான்குநேரி தொகுதியில் தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்ற தொகுதிகளை விட தங்களுக்கு சம்பளம் குறைத்து வழங்கி இருப்பது தெரிந்து அதிருப்தி அடைந்துள்ளனர். 

ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றி இருக்கின்றனர். இதில் நான்குநேரி தொகுதியில் உத்தேசமாக ஆயிரம் ஆசிரியர்களிடம் இருந்து தலா 175 ரூபாய் வீதம் குறைத்து வழங்கப்பட்டதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதற்காக கடந்த பல நாட்களாக அதிரடி சோதனை, வீடியோ பதிவு என்று தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் நான்குநேரி தொகுதியில் தேர்தல் பணிகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் "வேலியே பயிரை மேய்ந்த' கதையாகஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சம்பளம் வழங்குவதில் செய்துள்ள முறைகேடு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுதொடர்பாக மாநில மற்றும் மாவட்ட தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நான்குநேரி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்