தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.4.11

சட்டப் பேரவைத் தேர்தல் 2011 - சில தகவல்கள்

வாக்குப் பதிவுக்கான நடைமுறைகளில் தேர்தல் ஆணையம் என்னென்ன செயல்வழி முறைகளை அமல்படுத்துகிறது என்பதை அறியும் வண்ணம் சில தகவல்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. அவை:  

மைசூரில் தயாராகும் அடையாள மை:  
கள்ள வாக்கைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுவது அடையாள மை. ஆள் காட்டி விரலில் வைக்கப்படும் இந்த மையை அதற்கு முன்பு எல்லாம் கலைத்துவிட்டு அதே நபர் வேறு ஒருவரின் வாக்கைப் போட்ட காலம் எல்லாம் இருந்தது. இப்போது வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் அடையாள மையை அழிக்கவே முடியாது.  மைசூரிலுள்ள கர்நாடக அரசின் வார்னிஷ், பெயிண்ட் லிமிடெட் நிறுவனம் தான் இதைத் தயாரித்துக் கொடுக்கிறது. இந்த நிறுவனத்தின் மை தான் நாடு முழுவதும் எங்கு தேர்தல் நடந்தாலும் செல்கிறது.  இந்த மை வெளியில் கிடைக்காது. தேர்தல் துறைக்கு மட்டும்தான் சப்ளை செய்யப்படும். அதனால் போலி என்பதற்கே பேச்சு இல்லை.  

கிரீன் பேப்பர்
முத்திரைத் தாள், ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள அரசு நிறுவனத்தில்தான் கிரீன் பேப்பர் சீல், ஸ்டிப் சீல் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. வாக்குப் பதிவு நாளில் மாதிரி வாக்குப் பதிவு முடிந்தப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அந்தத் தகவல்கள் எல்லாம் அழிக்கப்பட்டு இந்த சீல் வைக்கப்படும். இந்த கிரீன் பேப்பரில் போலி வராது.  

இதெல்லாம் புதுமை:  
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் 2 கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கொண்டது. ஒன்று கன்ட்ரோல் யூனிட் (கட்டுப்பாட்டுப் பிரிவு) மற்றொன்று பேலட் யூனிட் (வாக்களிப்புப் பிரிவு). இந்த முறை புதுமையாக வாக்களிப்பு பொத்தானுக்குக் கீழ் பகுதியில் ரிப்பன் அளவுக்கு உள்ள பிங்க் பேப்பரில் ஆன ஒரு சீல் பேலட் யூனிட் இயந்திரத்தைச் சுற்றி ஒட்டப்படுகிறது. இயந்திரத்தில் உள்ள தகவல்களை மாற்றாமல் இருக்க இது ஒரு பாதுகாப்பு சீல்.  

மாதிரி வாக்குப் பதிவு சான்றிதழ்:  
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இந்த முறை வேட்பாளர்கள் அல்லது ஏஜெண்ட்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவாகக் குறைந்தப்பட்சம் 100 வாக்குகளைப் பதிவு செய்து காட்ட வேண்டும். அதற்கு முன்பு 10, 15 வாக்குகளைப் பதிவு செய்து காட்டிவிட்டு வாக்குப் பதிவைத் தொடங்கி விடுவர். பல்வேறு தரப்பிலிருந்தும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது விமர்சனங்கள் ஏற்கெனவே வந்துள்ளதால் இந்திய தேர்தல் ஆணையம் இந்த முறை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குறைந்தபட்சம் 100 வாக்குகளை மாதிரி வாக்குப் பதிவாகப் பதிவு செய்ய வேண்டும்.  சுயேச்சை வேட்பாளர் இருந்தாலும் அவருக்கும் இந்த மாதிரி வாக்குப் பதிவில் சமமான வாக்கு எண்ணிக்கை வருமாறு இந்த மாதிரி வாக்குப் பதிவு நடக்க வேண்டும். அதை விட முக்கியம் வாக்குச் சாவடி அதிகாரி இந்த மாதிரி வாக்குப் பதிவு நடந்தது என்பதை ஏஜெண்டிடம் சான்றிதழ் வாங்க வேண்டும்.  

வாக்குச் சாவடி சிலிப்:  
இதற்கு முன்பெல்லாம் எந்த வாக்குச் சாவடிக்குச் செல்ல வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண் என்ன போன்ற விவரங்களை எழுதி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வாக்குச் சாவடிக்கு வழிகாட்டும் வகையில் வாக்குச் சாவடி சிலிப் வழங்கி வந்தார்கள். தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்கு இதைத் தடை செய்ய வேண்டும் என்ற யோசனையில் இப்போது தேர்தல் துறையே இந்த சிலிப்பை முதல் முறையாக வழங்குகிறது. புதுச்சேரியைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குச் சாவடி சிலிப் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.  

முதல்முறையாக... 
முதல்முறையாக வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்கெனவே வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் நேரில் வந்து வாக்களிக்கலாம்.  

திருநங்கைகள்:  
இதுவரை வாக்காளர் பட்டியலில் ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு மட்டும் இருந்தது. இப்போது முதல்முறையாக இதர பாலினம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த திருநங்கைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 5 திருநங்கைகள் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.  

புதுச்சேரியில் மட்டும்:  
இந்தத் தேர்தலில் புதுச்சேரியில் மட்டும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைத் தவிர வேறு ஆவணங்களுக்கு அனுமதியில்லை. இங்கு 100 சதவீதம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அட்டையை தொலைத்த சுமார் 25 ஆயிரம் பேருக்கும் கடந்த 10 நாளில் புதிய அட்டை வழங்கப்பட்டுள்ளது.  

வெப் கேமிரா மூலம் ரியல் டைம் வாக்குப் பதிவு:  
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில உள்ள 851 வாக்குச் சாவடிகளிலும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் இணைப்பு, வெப் கேமரா இருக்கும். இதன் மூலம் ரியல் டைம் வாக்குப் பதிவு முறை அமல் செய்யப்படுகிறது. தில்லியில் இருக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி உள்பட தேர்தல் தொடர்பான பணியில் உள்ள அதிகாரிகள் புதுச்சேரியில் நடைபெறும் வாக்குப் பதிவை நேரடியாக உடனுக்குடன் பார்க்க முடியும். வாக்குச் சாவடி அதிகாரியிடம் தொடர்பு கொள்ள முடியும். பேச முடியும்.  மேலும் வாக்குப் பதிவு உள்ளிட்ட புள்ளிவிவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். எதாவது அசம்பாவிதம் நேரிட்டாலும் படம் பிடித்துவிடும். 

எந்த மாநிலத்திலும் எல்லா வாக்குச் சாவடிகளிலும் இந்த வசதியை இதுவரை செய்து கொடுத்தது இல்லை. புதுச்சேரியில்தான் முதல் முறை. இதிலும் 100 சதவீதம் பெறுகிறது புதுச்சேரி. ÷இந்த வசதிக்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இப்போது கூடுதலாக ஒரு கம்ப்யூட்டர் நிபுணர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வாக்குச் சாவடி நிகழ்ச்சிகள் எல்லாம் சி.டி.யில் ரைட் செய்யப்பட்டு ஆவணமாகப் பாதுகாக்கப்பட உள்ளன. 

தமிழகத்தில் 54,016 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. இதில் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ள சுமார் 28 ஆயிரம் வாக்குச் சாவடிகளில்தான் வெப் கேமரா வசதி செய்து கொடுக்கப்படுகிறது.  

மணி காட்டும் பேட்டரி:  
புதுச்சேரியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரி பொருத்தப்படுகிறது. வாக்குப் பதிவின் போது பொத்தானை அழுத்தும்போது இது வேலை செய்து ஒவ்வொரு வாக்குப் பதிவும் எந்த நேரத்தில் பதிவாகியுள்ளது என்பதை துல்லியமாகக் கூறிவிடும். இதில் மணி, நிமிடம், நொடி போன்ற எல்லா விஷயங்களையும் இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். வாக்குச் சாவடி அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வாக்குப் பதிவைத் தொடங்காவிட்டாலும் இந்தப் பேட்டரி காட்டிக் கொடுத்துவிடும். இது சுமார் 50 பைசா அளவுக்குதான் இருக்கும்.

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்