தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

25.7.12

தேர்வு வாரியம் வெளியிட்ட தகுதித் தேர்வு "கீ" ஆன்சரில் பிழைகள்

‘ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக தேர்வு வாரியம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட "கீ" ஆன்சரில் தவறான விடைகள் உள்ளன’ என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த 12ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்தியது. சுமார் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை வெளியிடும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில் தேர்வுக்கான "கீ"ஆன்சர் நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. கேள்வித்தாள்கள் 4 பிரிவுகளாக அச்சிட்டு வழங்கப்பட்டன. அதன் படி ஏ,பி,சி,டி என்று வகைப்படுத்தி அதற்கு கீழே விடைகளையும் குறிப்பிட்டுள்ளது. இதில் பல விடைகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

94வது பொருத்துக கேள்விக்கான விடை 'ஏ' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது. 8ம் வகுப்பு சமூக அறிவியல் (தமிழ்வழி) பாடப்புத்தகம் 28 மற்றும் 29ம் பக்கங்களில் இடம் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்கண்ட 94ம் கேள்விக்கான விடை 'சி' என்று வருகிறது.

பார்த்தலோமியா டயஸ் என்பவர் இந்தியாவின் முதல் போர்ச்சுக்கல் அரசு பிரதிநிதி என்று ஆசிரியர் தேர்வு வாரிய விடையின் அடிப்படையில் வருகிறது. ஆனால், பாடப்புத்தகத்தில், 'போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பார்த்த லோமியா டயஸ் என்பவர் கிபி 1487ம் ஆண்டு முதன்முதலில் கடல் பயணத்தை மேற்கொண்டார். அவர் ஆப்ரிக்காவின் தென்கோடி முனையை வந்தடைந்தார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேகேள்வியில் இடம் பெறும் (சி) பிரான்சிஸ் டிஅல்மெய்டா என்பவர் இந்தியாவின் இரண்டாவது போர்ச்சுக்கல் அரசு பிரதிநிதி என்றும், அல்போன்சே டி அல்புகர்க் தென் ஆப்ரிக்காவின் தென்முனையை அடைந்தவர் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய விடை கூறுகிறது. ஆனால் பாடப்புத்தகத்தில் பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா என்பவர் போர்ச்சுக்கல் நாட்டு வாணிபத்தை கவனிக்க முதல் ஆளுநராக இந்தியாவில் நியமிக்கப்பட்டார் என்றும், இரண்டாவது ஆளுநர் அல்போன்சே டிஅல்புகர்க் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல தமிழ்(தாள்&2) மொழி கேள்விகளில் 45வது கேள்வியில் கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கீடு குறித்து கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி தொடர்பான பதில்கள் 6, 7, 8 பாடப்புத்தங்களிலேயே இல்லை. இது வெளியில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி.

கேள்வி எண்& 38ல் 'திரைக்கவித் திலகம் என்ற சிறப்பை பெற்றவர்' என்று கேட்டு, குருவிக்கரம்பை சண்முகம், மருதகாசி, வாலி, புலமைப்பித்தன் என்று நான்கு விடைகள் வாய்ப்பாக அளிக்கப்பட்டு இருந்தன. இதற்கான விடை 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் உள்ளது. அதில் திரைக்கவித் திலகம் என்ற சிறப்பு பெற்றவர் மருதகாசி என்று பக்கம் 87ல் உள்ளது. ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள விடையில் மேற்கண்ட கேள்விக்கு விடை, 'குருவிக்கரம்பை சண்முகம்’ என்று கொடுத்துள்ளனர்.

இதுபோல பல்வேறு பிழைகள், குழப்பங்கள், அவுட் ஆப் சிலபஸ் காரணமாக இதனால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

‘பிழைகள் குறித்து தேர்வு எழுதியவர்கள் 30ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தெரிவித்தால் அது குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

‘ஆசிரியர்களின் அறிவை பரிசோதிக்க நடத்தப்படுகிறது என்று கூறும் தேர்வுக்கான கேள்வித்தாளையே சரியாக தயாரிக்க தகுதியான நபர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நியமிக்கவில்லையா?’ என்று பட்டதாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்