தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

7.7.12

அரசு ஊழியர்கள் விடுதலை ஆனாலும் துறை ரீதியாக நடவடிக்கை உண்டு

விஜிலென்ஸ் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கும், அரசு ஊழியர்களை, கோர்ட் விடுதலை செய்தாலும், சரியான காரணங்கள் இருப்பின், அவர் மீது துறைத் தலைவர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் முதல், அதிகாரிகள் வரையில், சில நேரங்களில் பல்வேறு முறைகேடுகளில் சிக்கி, லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைகளுக்கு உள்ளாவதுண்டு. அவ்வாறு வழக்குகளில் சிக்குபவர்கள், சில நேரங்களில் தண்டனை அல்லது விடுதலை அடைகின்றனர். இவ்வாறு தண்டனை, விடுதலை விஷயத்தில், அந்த அரசு ஊழியர் சார்ந்த துறை, சில நேரங்களில் நடவடிக்கை எடுக்கிறது. இவ்வாறு, அரசு ஊழியர் தொடர்பான வழக்குகளில், தண்டனை அல்லது விடுதலை பெறும் நேரத்தில், துறையின் தொடர் நடவடிக்கை குறித்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இது தொடர்பான, சென்னை ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டியுள்ளது.

அவசியம்: கோர்ட் தீர்ப்புகளில், தண்டனை பெற்ற அரசு ஊழியர், சேவையில் தொடர அனுமதிக்கக் கூடாது. தண்டனை பெற்றவர், மேல்முறையீடு செய்திருந்தாலும், அதற்கான தீர்ப்பு வரும் வரையில், பணியாற்றுவதை அனுமதிக்கக் கூடாது. மேல் முறையீடு உள்ளிட்டவற்றிற்காக, சம்பந்தப்பட்டவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தண்டனை பெற்ற அரசு ஊழியர்களை ,பணி நீக்கம் செய்ய வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, அரசுத் துறைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சில அறிவுரைகளை அரசுக்கு பரிந்துரைத்தது.

இதனை ஏற்ற தமிழக அரசு, அரசு ஊழியர் ஒருவர், வழக்கில் சிக்கி, கோர்ட் மூலம் விடுவிக்கப்பட்டாலும், சரியான தகுதி மற்றும் தொழில் நுட்ப காரணங்கள் அடிப்படையில், அந்த ஊழியர் சார்ந்த துறையின் தலைவர், அந்த ஊழியர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம். அந்த நடவடிக்கைக்கான தேவையான ஆதாரங்கள் இருக்க வேண்டும். மேலும், அவ்வாறு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், விடுதலை குறித்த கோர்ட் உத்தரவு பெற்ற ஒரு மாதத்திற்குள், நடவடிக்கை எடுக்கப்படாததற்கான காரணம், அதிகாரியின் நிலைப்பாடு குறித்த அறிக்கையை, உத்தரவு நகலுடன் இணைத்து அரசிற்கு அனுப்ப வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்