தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.7.12

பள்ளிச் சீருடை போட்டிருக்கீங்களா? பஸ் கட்டணம் கிடையாது!

"இலவச கையடக்க பேருந்து பயண அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், மாற்று ஏற்படாக, மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தாலோ அல்லது பழைய பஸ்பாஸ் வைத்திருந்தாலோ, கட்டணம் வசூலிக்க வேண்டாம்" என, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல், பழைய முறை மாற்றப்பட்டு, சென்னை மாநகரில் வழங்கப்படுவது போன்று, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும், கையடக்கப் பேருந்து பயண அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த மாதம், 19ம் தேதி, 30 லட்சம் மாணவ, மாணவியருக்கு, முதல் முறையாக கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார்.ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், மாணவர்களுக்கு பயண அட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால், தினமும் கட்டணம் செலுத்தி, பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.புதிய முறையில் பேருந்து பயண அட்டைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பள்ளி நிர்வாகம் வழங்குவதில் காலதாமதம் போன்ற காரணங்களால், மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால், பேருந்து பயண அட்டை கிடைக்காததால், கிராமப்புற ஏழை மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். தினமும், 20 ரூபாய் வரை பேருந்துக்கு கட்டணம் செலுத்தி, பள்ளிகளுக்கு வந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக, பேருந்து பயண அட்டைக்கு பதில், சீருடை அணிந்து வந்தாலே, கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும் போது, "பேருந்து பயண அட்டை வழங்கும் வரை, பழைய பேருந்து பயண அட்டையைக் கொண்டு மாணவர்கள் பயணிக்கலாம்; அல்லது பள்ளி சீருடையுடன் வந்தால் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என, அறிவுறுத்தி உள்ளோம். இதுகுறித்து, அந்த கழக அதிகாரிகள் நடத்துனர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர்,'' என்றனர்.

தாமதத்திற்கு காரணம் என்ன?
புதிய முறையில் வழங்கப்படும் பேருந்து பயண அட்டைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் அனுப்பியுள்ளன. கடந்தாண்டு, இந்த விண்ணப்பத்திற்கு, 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்தாண்டு, விண்ணப்பத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கட்டணம் ஏதுமில்லாததால், பள்ளி நிர்வாகத்தினர், இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரும் பணியை மேற்கொள்வதில் அலட்சியம் காட்டியுள்ளனர். அதனால், மாணவர்களே தங்களுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பள்ளி நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்.

மேலும், விண்ணப்பங்கள் சரிபார்க்கப் படாமலேயே பள்ளி நிர்வாகங்கள் சார்பில், பயண அட்டை வழங்கும் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் உள்ள விவரங்களின் படி, பயண அட்டைகள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பெரும்பாலான பயண அட்டையில் தவறான விவரங்கள் அச்சடிக்கப்பட்டிருப்பதை கண்ட மாணவர்கள், அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இது போன்ற காரணங்களாலேயே பயண அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என, போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதிய முறையில் ஒரு பயண அட்டையை அச்சடிக்க, 10 ரூபாய் வரை செலவாகிறது. பள்ளி நிர்வாகங்கள் காட்டிய அலட்சியத்தால், பயண அட்டை வழங்குவதில் காலதாமதமும், கூடுதல் செலவும் ஏற்பட்டுள்ளன எனவும் அவர்கள் கூறினர்.இப்பிரச்னை தொடர்பாக, அனைத்து பள்ளிகளுக்கும் பயண அட்டை பெறுவதில் உரிய முறையை பின்பற்ற வேண்டும் என, போக்குவரத்துத் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்