தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.12.12

பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

பள்ளியில் பணி புரியாத ஆசிரியரை, மற்றொரு பள்ளிக்கு இடமாறுதல் செய்து "சாதனை' புரிந்துள்ளது, கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள இந்த தகவல், கோவை பள்ளிக் கல்வித்துறையில் இடமாறுதலுக்கு பணப்பட்டுவாடா நடந்து வருவதை அம்பலமாக்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆசிரியராக நியமனம் பெற, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க வசதியில்லாத ஆசிரியர்கள், வால்பாறை, ஆனைமலை, காடம்பாறை, ரொட்டிக்கடை உள்ளிட்ட மலைப்பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். இப்பகுதிகளில் புலி, யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதே காரணம். ஆனாலும் வேறு வழியில்லாமல் இங்கு பணி புரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் ஏழை ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும் போது, எப்படியாவது சமவெளிக்கு வந்து விடலாம் என்றால், அதற்கும் பேரம் உண்டு. சென்னை சென்று கவனிக்க வேண்டியவர்களை "கவனித்து' இடமாறுதல் உத்தரவு பெற்று திரும்பும் வரை, குறிப்பிட்ட காலிப் பணியிடத்தை மறைத்து வைத்திருக்க, கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கணிசமான தொகை வழங்கப்படுகிறது.

இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்றாலும், மலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் அங்கேயே தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குழந்தைகள் ஓரிடத்திலும், கணவர் வேறிடத்திலும் ஆண்டு கணக்கில் குடும்பமே பிரிந்து கிடக்க வேண்டிய பரிதாப நிலைக்கு பெண் ஆசிரியைகள் தள்ளப்படுகின்றனர்.

கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் இடமாறுதல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட சங்கனூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், மாவட்டத்தில் உள்ள கணித காலிப் பணியிட விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த செப்., 17ல் பெற்றார். அதில், 23.7.2012ல் பொதுமாறுதல் ஆணை வழங்கப்பட்டவர்கள் பட்டியலில், "எம்.பானு சரஸ்வதி' எனும் ஆசிரியையின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காடம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியை ஆக உள்ளார்.

ஆனால், இவர் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிவதாகவும், அங்கிருந்து காரமடை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வால்பாறை மற்றும் காரமடை பள்ளிகளில் விசாரித்தபோது, பானு சரஸ்வதி எனும் பெயரில் எந்த ஆசிரியையும் இல்லை என தெரிய வந்துள்ளது. காடம்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை எம்.பானுசரஸ்வதியிடம் கேட்டதற்கு, ""பட்டதாரி ஆசிரியை ஆக பதவி உயர்வு மூலம் காடம்பாறையில் நியமிக்கப்பட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடியும் இடமாறுதல் கிடைக்கவில்லை. கணவர் ஓரிடத்திலும் குழந்தைகள் பெற்றோரிடமும் உள்ளதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்,'' என்றார்.

ஆனால் புதிதாக சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சிலருக்கு, கோவை பள்ளிகளில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மலைப்பள்ளி ஆசிரியருக்கு இடமாறுதல் வழங்கியது போல் ஆவணங்களில் காண்பித்து விடுவதும், பணம் பெற்றுக் கொண்டு அந்த இடங்களில் தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை நியமித்து வந்துள்ளதும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. எனவே, தகுதி இருந்தும் இடமாறுதல் வழங்காமல் ஏமாற்றப்பட்ட ஆசிரியர்களும், கோர்ட்டில் வழக்கு தொடர ஆயத்தமாகி வருகின்றனர்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்