தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.10.12

அனைவருக்கும் கல்வித் திட்ட பள்ளி வளர்ச்சி நிதி - கர்நாடகாவிற்கு தாரை வார்க்கும் நடவடிக்கை நிறுத்திவைப்பு?

 கற்பித்தலுக்கான உபகரணங்கள் வாங்குவது என்ற பெயரில், தமிழகத்தின், அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளின் வளர்ச்சி நிதியை, கர்நாடகாவிற்கு தாரை வார்க்கும் நடவடிக்கை, நிறுத்தி வைக்கப்பட்டது.

"டிடி'' வேண்டும்
:
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் ஒவ்வொரு பள்ளிக்கும், பராமரிப்பு நிதியாக, 7,500 ரூபாய், வளர்ச்சி நிதியாக, 8,000 ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதில், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். கடந்த மாதத்தில், மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட அலுவலகத்தில் இருந்து, எந்த காரணமும் தெரிவிக்காமல், அனைத்து பள்ளிகளும் வளர்ச்சி நிதியில் இருந்து, கர்நாடக மாநிலம் மைசூரில் மெட்டீரியல்ஸ் பேங்க் என்ற பெயருக்கு, தலா, 2,000 ரூபாய், "டிடி'' எடுத்து அனுப்ப வேண்டும் என்று அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடும் எதிர்ப்பு:
இதனால், 35 ஆயிரம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், "டிடி'' எடுத்து, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், மாநில திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். எந்த தகவலும் கூறாமல், "டிடி'' அனுப்ப சொன்னதால், தலைமை ஆசிரியர்கள், கிராம கல்வி குழுவினரிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

மேலும், "கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தமிழகத்திலேயே கிடைக்கும்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள நிறுவனத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?'' என்றும், எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, "மைசூரு நிறுவனத்துக்கு வழங்க எடுத்த, "டிடி''யை அனுப்ப வேண்டாம்; நிறுத்தி வையுங்கள்'' என, தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "பணம் அனுப்பியிருந்தால், அது திரும்ப உங்களுக்கே அனுப்பி வைக்கப்படும் என, மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து, தகவல் தெரிவிக்கப்பட்டது'' என்றார்.

 நன்றி:


26.10.12

பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பான அரசாணை வெளியீடு

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

பள்ளிகள், பள்ளி வாகனங்களில் ஏற்படும் விபத்துகள், அசம்பாவித சம்பவங்கள் அண்மையில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து, இந்தச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தார்.

அதனையேற்று, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்:

அரசு அதிகாரிகள் தவிர, தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து பள்ளியின் நுகர்வோரான பெற்றோரே நேரில் சென்று சமூக ஆய்வு(Community Inspection) நடத்த அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில், மாணவ, மாணவியரின் தாய்மார்கள், வாரத்தில் ஒரு நாள், 5 பேர் கொண்ட குழுவாகச் சென்று பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பள்ளி வேலை நாள்களில் பார்வையிட அனுமதிக்க வேண்டும். இவர்களின் பார்வைக் குறிப்புகள் ஒரு பார்வைப் புத்தகத்தில் தொடர்ந்து பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்தக் குழுவின் பார்வைக் குறிப்புகளை ஒவ்வொரு வாரமும் பார்வையிட்டு குறைபாடுகள் உள்ள இடங்களில் அதனைச் சரி செய்ய தாளாளர், செயலர், முதல்வர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் நடவடிக்கைகள் குறித்த குறிப்பு எழுதப்பட்டு, அதில் தாளாளர், செயலர் ஒப்பமிட வேண்டும்.

மாணவ, மாணவியரின் நலனைக் காக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டிய பிற நடைமுறைகள் விவரம்:

* பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 1,500-க்கும் அதிகமாக இருந்தால் முறையான முழுநேர மருத்துவ சேவை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

* பள்ளிகளில் முதலுதவி பெட்டிகள் அனைத்து மருந்துப் பொருள்களுடன் அமைக்கப்பட வேண்டும்.

* பள்ளி மாணவர்களின் ரத்தவகை, நீண்ட நாள் நோய் சார்ந்த குறிப்புகள், மருந்து ஒவ்வாமை மற்றும் குடும்ப மருத்துவர் போன்ற உடல் நலம் சார்ந்த தகவல்களை வைத்திருக்க வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள திறந்தவெளி கிணறு, கீழ்நிலை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கழிவுநீர்த் தொட்டி ஆகியன நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு மூடப்பட்டிருக்க வேண்டும்.

* 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம், 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை என்ற அளவில் போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம், போதிய வெளிச்சத்துடன் இருக்க வேண்டும். அவை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

* அனைத்து இடங்களிலும் மின் இணைப்புகள், ஸ்விட்ச் போன்றவை பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மின் சாதனங்களில் உள்ள பழுதை நீக்கி பாதுகாப்புத் தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட மின் அலுவலரின் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

* உடைந்த கட்டடங்கள், சுவர்கள், அறுந்த, துண்டித்த நிலையில் உள்ள மின்சார ஒயர்கள் போன்றவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.

* வீர விளையாட்டுகள் பள்ளி நிலையில் அவசியம் இல்லை. பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட விளையாட்டுகள் விளையாடும் சமயம் தகுந்த பாதுகாப்பு மற்றும் முதலுதவி வசதியுடன் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்.

* வகுப்பில் உள்ள வருகை புரிந்த மாணவர்கள் அனைவரும் பள்ளியைவிட்டுச் சென்றுள்ளனர் என்பதை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் உறுதிசெய்த பிறகே பள்ளியைவிட்டுச் செல்ல வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசாணை எண்: 270 நாள்: 22-10-2012  

பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்ய அன்னையர் குழு

தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் என்னென்ன வசதிகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன என்பதை தாய்மார்களே இனி நேரடியாக ஆய்வு செய்யலாம். இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் 5 பேர் கொண்ட அன்னையர் குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பெற்றோரை வாயிலோடு வெளியே அனுப்பும் அவலமும், அரசுப் பள்ளிகளில் உள்ள வசதி குறைவுகள் குறித்து பெற்றோர் கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் நேரத்தில் மிக முக்கியமான இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

வாரத்தில் ஒரு நாள் பள்ளியில் உள்ள அனைத்து வசதிகளையும் பள்ளி வேலை நேரத்தில் இந்தக் குழுவைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும். இவர்களுக்கான பார்வைப் புத்தகம் ஒன்றையும் பள்ளிகள் பராமரிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: அரசு அதிகாரிகள் தவிர, தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து பள்ளியின் நுகர்வோரான பெற்றோரே நேரில் சென்று சமூக ஆய்வு(Community Inspection) நடத்த அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆய்வின் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வது அதிகபட்ச நலம் பயக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்த வகையில், மாணவ, மாணவியரின் தாய்மார்கள், வாரத்தில் ஒரு நாள், 5 பேர் கொண்ட குழுவாகச் சென்று பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பள்ளி வேலை நாள்களில் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.

இவர்களின் பார்வைக் குறிப்புகள் ஒரு பார்வைப் புத்தகத்தில் தொடர்ந்து பதிவு செய்யப்பட வேண்டும். தாய்மார்களைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவாறு பல்வேறு வகுப்புகளில் இருந்து பிரதிநிதிகள் உள்ளடக்கியவாறு அமைதல் வேண்டும்.

வகுப்புகள்

1. மழலையர் வகுப்பு - 1 நபர்

2. 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை - 1 நபர்

3. 4-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை - 1 நபர்

4. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை - 1 நபர்

5. 11-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை - 1 நபர்

1. ஒருமுறை பார்வையிட்ட குழுவைச் சேர்ந்தவர்களே திரும்பவும் பார்வையிடும் வண்ணம் இருத்தல் கூடாது. பிரதிநிதிகள் குலுக்கல் முறையில்(Random Method) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

2. பள்ளியில் உள்ள கழிப்பறை, குடிநீர் வசதி, ஆய்வக வசதி, கணினி வசதி, நூலக வசதி, விளையாட்டு வசதிகள், வகுப்பறை வசதிகள் போன்ற எல்லா வசதிகளையும், பள்ளியின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு இவர்கள் தங்களது பார்வைக் குறிப்பைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்தக் குழுவின் பார்வைக் குறிப்புகளை ஒவ்வொரு வாரமும் பார்வையிட்டு குறைபாடுகள் உள்ள இடங்களில் அதனைச் சரி செய்ய தாளாளர், செயலர், முதல்வர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் நடவடிக்கைகள் குறித்த குறிப்பு எழுதப்பட்டு, அதில் தாளாளர், செயலர் ஒப்பமிட வேண்டும்.

இந்தக் குழுவினர் பார்வையிடும்போது பள்ளியின் முதல்வரோ அல்லது அவரின் பிரதிநிதியோ உடன் இருக்கலாம்.

நன்றி:

 

மன்மோகனுக்கு பகதூர்ஷாவின் கடிதம்

அசோகச் சக்கரவர்த்தியோ அல்லது அக்பர் சக்கரவர்த்தியோகூட இந்தியா முழுமையும் செங்கோல் செலுத்தியதில்லை. ஆனால், காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக அன்னிய ஆட்சி அகற்றப்பட்டு முதன் முதலாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்தியா ஒரே குடையின்கீழ் வந்தது. முதலாவது பிரதமராகப் பதவி வகித்த ஜவஹர்லால் நேரு உண்மையில் "முடிசூடாத மன்னராக' மக்களால் போற்றப்பட்டார். அவர் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிற தங்களிடமும் அவரிடம் குடிகொண்டிருந்த நாட்டுப்பற்று, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சமதர்மச் சிந்தனை போன்ற பண்புகள் நிறைந்திருக்கும் என நம்புவதே தவறுதான். ஆனால், அப்படி சில உணர்வுகள் ஒட்டிக் கொண்டிருக்காதா என்கிற நம்பிக்கையும்கூட இப்போது அடியோடு தகர்ந்து போய்விட்டது.

சுயதேவை பூர்த்தியின் மூலம் மட்டுமே நமது நாடு முன்னேற முடியும் என நம்பிக்கைக் கொண்ட நேரு, மூலாதாரப் பெருந்தொழில்களை அரசுத்துறையில் அமைத்தார். ரயில்வே, விமானப் போக்குவரத்து, பொதுக்காப்பீட்டுக் கழகம், சுரங்கங்கள், பெட்ரோலியப் பொருள்கள் எடுத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை அரசுடைமை ஆயின. அப்போது விட்டுப்போன வங்கிகள் தேசிய மயம் போன்றவற்றை அவரது மகள் இந்திரா நிறைவேற்றினார். அவ்விருவர் காலத்தில் நாட்டில் அரசுத்துறை (பொதுத்துறை) செழித்து வளர்ந்தது. அதனால், சமச்சீரான தொழில்வளர்ச்சி ஏற்பட்டதுடன், பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளம் பலமாக அமைக்கப்பட்டது.

2008-ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அவ்வளவாக இந்தியாவைப் பாதிக்காமல் போனதற்கு பொதுத்துறை, நிதித்துறை நிறுவனங்கள் அரசுடைமையாக இருந்ததுதான் காரணம் என்பதைச் சிறந்த பொருளாதார நிபுணரான நீங்கள் அறிந்திருந்தும் லாபம் ஈட்டி வருகின்ற "நவரத்தின' பொதுத்துறைப் பங்குகளை விற்கவும் அவற்றில் 49% அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் உங்கள் ஆட்சியில் முடிவு எடுத்தது எதனால்?

1991-இல் இந்திய நிதியமைச்சராக நீங்கள் பொறுப்பேற்று புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி 20 ஆண்டு காலத்திற்கு மேலாகிவிட்டது. இப்போது நீங்கள் சகல அதிகாரமும் படைத்த பிரதமர் பதவியிலும் இருந்து வருகிறீர்கள். உங்களது பொருளாதாரக் கொள்கையின் விளைவாக, இந்திய மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைந்துள்ளதா என்ற கேள்விக்கு உரிய விடையை மனசாட்சியைத் தொட்டு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்குநாள் நலிந்து தேய்ந்து போனதன் விளைவாக, இந்த 20 ஆண்டுக் காலத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதுதானே உண்மை?

உலகளாவிய ரீதியில் நேரடி அன்னிய முதலீட்டிற்கான சிறந்த நாடுகளில் இரண்டாம் இடத்தை இந்தியா வகிக்கிறது என ஐ.நா. வணிக மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு அதனுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதைப்போல ஜப்பானிய வங்கியும் கூறியுள்ளது.

2012-2014 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க வணிகத் தொழில் முதலீடுகளுக்கு ஏற்ற மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என லீட்ஸ் பல்கலைக்கழக வணிகப் பள்ளி குறிப்பிட்டுள்ளது.

2005-ஆம் ஆண்டில் இந்தியாவில் 8% ஆக இருந்த கனடிய நிறுவனங்களின் முதலீடு 2010-இல் 13.4 % ஆக உயர்ந்துள்ளது. 2010-இல் இந்தியாவில் அமெரிக்கா 2014 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. இந்தப் பட்டியல் இன்னமும் நீளுகிறது. அன்னிய நிறுவனங்கள் நமது நாட்டைச் சுரண்டுவதற்கு எந்த அளவு நீங்கள் அனுமதித்திருக்கிறீர்கள் என்பதைத்தான் மேற்கண்ட விவரங்கள் அப்பட்டமாகத் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய தொடர்சங்கிலி நிறுவனங்களான வால்மார்ட், செயின்ட்ஸ்பெரி, டெஸ்கோ ஆகியவை இந்தியாவில் தங்கள் கிளைகளைத் திறக்க அனுமதி அளித்ததின் மூலம், சிறு, குறு தொழில் அதிபர்கள், சிறு வணிகர்கள் ஆகியோர்களின் வாழ்க்கையை அடியோடு அழித்துவிட கங்கணம் கட்டியிருக்கிற நீங்கள் ஏழை மக்களுக்காக அளிக்கப்பட்டு வரும் மானியங்களைக் குறைத்துவிடவும் முடிவுசெய்திருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு அளிக்கப்படும் டீசல், ரசாயன உரம் ஆகியவற்றுக்கான மானியம், மக்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்கள், சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் மானியம் ஆண்டிற்கு 3.25 லட்சம் கோடி ரூபாய்களாகும். இந்த இழப்பை எப்படி அரசினால் தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியும் என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 1.76 லட்சம் கோடி ரூபாய்களாகும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ரூ. 1.86 லட்சம் கோடியாகும். ஆக மொத்தம் 3.62 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வரவேண்டிய பணம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த ஊழல்களை மட்டுமல்ல, காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல் போன்ற பல்வேறு ஊழல்களையும் அரசு தடுத்து நிறுத்துமானால், அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டே, மக்களுக்குத் தேவையானவற்றை மானிய விலையில் அளிக்க முடியும்.

புள்ளிவிவரங்களை மேலும் அடுக்கிக்கொண்டே போக நான் விரும்பவில்லை. அன்னிய நிறுவனங்களின் வரவு நமது நாட்டின் சுதந்திரத்திற்கே ஆபத்தாக முடியும் என்பதை உணராமல் செயற்படுகிறீர்கள். மறக்கப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனியாதிக்கம் உலகெங்கிலுமுள்ள பின்தங்கிய நாடுகளின் மீது திரும்பியது. அந்த நாடுகளில் வாழும் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடிப்பது, தங்களுடைய உற்பத்திப் பொருள்களை விற்பதற்குரிய சந்தையாக அந்த நாடுகளை மாற்றுவது என முடிவு செய்தன.

அன்னியர் காலடி படாத நம் மண்மீது அன்னியர்கள் வரிசையாகக் கால் பதித்தார்கள். கி.பி. 1500-இல் கோழிக் கோட்டிலும், கி.பி.1506-இல் கோவாவிலும் போர்த்துகீசிய வணிகர்கள், ஜமோரின் மன்னனின் அனுமதியைப் பெற்று வணிகக் கோட்டைகளை அமைத்துக்கொண்டார்கள். கி.பி. 1600-இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரிலும், கி.பி.1602-இல் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரிலும், கி.பி.1661-இல் பிரெஞ்சு இந்தியக் கம்பெனி என்ற பெயரிலும் இந்திய மண்ணில் வர்த்தகம் செய்வதற்காக இந்நாடுகள் வந்திறங்கின.

தென்னாட்டில் ஆற்காடு நவாபின் முன் மண்டியிட்டு அனுமதி பெற்று ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் வணிகம் புரியத் தொடங்கினார்கள். வங்காளத்தில் நவாப் நசீம் முன் மண்டியிட்டு வணிக அனுமதி பெற்றனர்.

எனது மூதாதையும் புகழ்பெற்ற முகலாய மன்னருமான ஜஹாங்கீரின் முன் கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் என்ற ஆங்கிலேயர் 1609-இல் மண்டியிட்டு வணிகத்திற்கான அனுமதி கோரினார். ஆனால், 1611-ஆம் ஆண்டு வரை ஜஹாங்கீர் அனுமதி தரவில்லை. 1611-இல் சூரத் நகரில் கிழக்கிந்திய கம்பெனியின் கிட்டங்கியைத் திறப்பதற்கு ஜஹாங்கீர் அனுமதி கொடுத்தார். இதற்குக் காரணம் சர். தாமஸ் ரோ என்னும் ஆங்கிலேயப் பிரமுகரும், கேப்டன் மிடில்டன் என்ற ஆங்கிலேய தளபதியும் ஆவார்.

இதற்குப் பிறகு கல்கத்தாவிலும், சென்னையிலும் அவர்கள் வணிகக் கோட்டைகள் கட்டிக்கொள்ள முகலாய மன்னர் அனுமதித்தார். எனது மூதாதையரான ஜஹாங்கீர் மன்னர் செய்த இந்தத் தவறு இந்தியாவின் எதிர்காலத்தையே பாழாக்கிவிட்டது.

வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் படிப்படியாக ஆட்சியைக் கைப்பற்றி, இறுதியில் இந்தியாவில் தங்களது ஆட்சியை நிறுவி, 300 ஆண்டுகள் ஆண்டபோது அவர்களை வெளியேற்ற நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு போராட வேண்டியிருந்தது, அளப்பரிய தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது என்பதை அடியோடு மறந்து நாட்டை மீண்டும் அன்னியரிடம் அடிமைப்படுத்தும் வகையில் உங்களுடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

தென்னாட்டில் ஆற்காடு நவாபின் அனுமதியைப் பெற்று தங்களின் வணிகத்தைத் தொடங்கிய ஆங்கிலேயர்கள் நாளடைவில் பல்வேறு பகுதிகளில் சுதந்திரமாக ஆண்ட சிற்றரசர்களை ஒடுக்கத் தொடங்கினார்கள். அவர்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் ஈவுஇரக்கமின்றி அழித்தார்கள்.

பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ராணி வேலு நாச்சியார், திப்பு சுல்தான் போன்ற வீரமிக்க மன்னர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி இறுதியாக தூக்குக் கயிற்றில் தொங்கினார்கள். திப்புவின் புதல்வர்களும் அவரது படை வீரர்களும் கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டார்கள்.

1906-ஆம் ஆண்டில் வேலூரில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் புரட்சி வெடித்தது. அந்தப் புரட்சி ஈவுஇரக்கமின்றி ஒடுக்கப்பட்டது. அதன் பின் தென்னாடு ஆங்கிலேயர் வசமாயிற்று.

வங்காள நவாபான சிராஜ் உத்தெüலாவுக்கு எதிராக அவருடைய படைத் தளபதி மீர் ஜாபரை தங்கள் வசமாக்கிக் கொண்டு, ஆங்கிலேயர்கள் அவரைத் தோற்கடித்தனர். அதன் பின் வங்காளம், பிகார், ஒரிசா, ஆகியவை அவர்கள் வசமாயின. இப்படி ஒவ்வொரு பகுதியிலும் ஆண்ட மன்னர்களை ஒழித்துக்கட்டி நாட்டைக் கைப்பற்றினார்கள். இந்த வரலாற்று உண்மைகளை மன்மோகன் அவர்களே மறந்துவிடாமல் எண்ணிப் பாருங்கள்.

எங்கள் மூதாதையரான ஜஹாங்கீர் முன் மண்டியிட்டு வணங்கி வணிகத்திற்கு அனுமதி பெற்ற ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் வஞ்சகக் குணத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.

மாட்சிமை தங்கிய முகலாயச் சக்கரவர்த்தியின் விசுவாசமிக்க ஊழியன் என அவருக்கும் அவருக்குப்பின் அரியணை ஏறிய அனைவருக்கும் பணிவாகக் கடிதம் எழுதியவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்கினார்கள்.

ஆண்டுதோறும் சக்கரவர்த்திக்கு அளித்து வந்த கப்பத்தை நிறுத்தினார்கள். அவருக்குக் கீழிருந்த சிற்றரசர்களை சுதந்திர மன்னர்களாக ஆகும்படி தூண்டிவிட்டனர். 1835ஆம் ஆண்டு முகலாயச் சக்கரவர்த்தியின் படமோ பெயரோ இல்லாத நாணயங்களை கம்பெனியின் பெயரில் வெளியிட்டார்கள். இதன் மூலம் ஆட்சி அதிகாரம் தங்களிடமே இருக்கிறது என்பதை மக்களுக்கு மறைமுகமாக உணர்த்தினார்கள்.

நீதிமன்றங்களிலும் அரசு அலுவலகங்களிலும், பாரசீக மொழிக்குப் பதில் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்கினார்கள். அடுத்ததாக நாடெங்கும் இருந்த சுதேசி மன்னர்கள் வாரிசு இல்லாமல் இறந்துபோனால் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஆங்கிலேய ஆட்சியுடன் இணைக்கப்படும் என வைசிராயாக இருந்த டல்ஹெளசி அறிவித்தார்.

முகலாய பாதுஷாவாக நான் பொறுப்பேற்றபோது மராட்டிய பேஷ்வா, ஐதராபாத் நிஜாம், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆகியவற்றின் மீதுள்ள மேலாதிக்கத்தை என்னிடமிருந்து ஆங்கிலேயர்கள் பறித்தார்கள்.

தங்களின் சம்மதம் பெறாமல் எனது படையில் யாரையும் சேர்க்கக்கூடாது என கூறினார்கள். தில்லியில் என்னைக் கண்காணிப்பதற்காக "ரெசிடன்ட்' என்ற பெயரில் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். பெயரளவில் மட்டுமே நான் சக்கரவர்த்தியாக இருந்தேன். உண்மையைச் சொல்லப்போனால் செங்கோட்டையில் நான் ஒரு கைதிபோல மட்டுமே வாழ முடிந்தது. எனக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே உதவித்தொகை அளித்தார்கள். அரண்மனையைத் தாண்டி யார் மீதும் எத்தகைய அதிகாரத்தையும் செலுத்த இயலாதவனாக நான் ஆக்கப்பட்டேன்.

இந்தச் சூழ்நிலையில் ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் பெரும் புரட்சி 1857-ஆம் ஆண்டு வெடித்தது. புரட்சியில் ஈடுபட்ட வீரர்கள் டில்லியைக் கைப்பற்றியதோடு செங்கோட்டையைச் சூழ்ந்துகொண்டு தங்களுக்குத் தலைமை வகிக்கும்படி என்னை வேண்டிக்கொண்டார்கள். அந்தச் சூழ்நிலையில் நானும் அதை ஏற்றுக்கொண்டேன். இப்புரட்சியில் ஜான்சி ராணி இலட்சுமிபாய், தந்தியாதோபே, நானாசாகிப் பேஷ்வா, துன்வர்சிங், பேகம் ஹசரத் மஹால் போன்ற பலரும் சேர்ந்து கொண்டனர். ஆனால், ஆங்கிலேயரின் படைவலிமைக்கு முன்னால் தொடர்ந்து போராட முடியவில்லை.

புரட்சி தோல்வியுற்றதும் முகலாய மன்னரான என்னை ஆங்கிலேயர் கைது செய்து "நீதி விசாரணை' என்ற பெயரில் போலியான விசாரணை நடத்தி பர்மாவில் உள்ள மாண்டலாய்க்குக் கொண்டுசென்று சிறை வைத்தார்கள். மீண்டும் எனது தாய் மண்ணையும் எனது மக்களையும் பார்க்காமலேயே அந்தச் சிறையிலேயே 1862ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி மண்ணுலக வாழ்வை நீத்தேன். அங்கேயே எனக்குக் கல்லறை கட்டப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் "இந்திய தேசிய ராணுவம்' (ஐ.என்.ஏ.) அமைக்கப்பட்டு பர்மா வழியாக அவர்கள் இந்தியாவை நோக்கி முன்னேறி வந்த காலத்தில் 1944-ஆம் ஆண்டு சூலை 11-இல் எனது கல்லறையில் மலர் வளையம் வைத்து வீர வணக்கத்தை நேதாஜி செலுத்தியபோதுதான் எனது ஆன்மா குளிர்ந்தது.

வீர சீக்கிய குலத்தில் தோன்றிய உங்களுக்கு உங்களுடைய மூதாதையரான மகாராஜா ரஞ்சித் சிங் வெள்ளையருக்கு எப்படி சிம்மசொப்பனமாக விளங்கினார் என்ற வரலாறு தெரிந்திருக்கும் என நம்புகிறேன். இந்தியாவின் பிறபகுதிகளில் எல்லாம் தங்கள் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயர் பாஞ்சாலத்தைக் கொண்டுவர முடியாமல் தவித்தார்கள். ஆனாலும் ரஞ்சித்சிங்கை எதிர்த்து அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. இந்தியாவின் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவிய காலத்தில் ஆங்கிலேயர் ரஞ்சித்சிங்கை பகைத்துக்கொள்ள துணியவில்லை. ரஷியாவை எதிர்த்து நிற்க அவரோடு உடன்பாடு செய்துகொண்டார்கள்.

கி.பி. 1839-இல் மகாராஜா ரஞ்சித் சிங் மாண்ட பிறகே அவர்களால் பாஞ்சாலத்தில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. தனது மண்ணில் ஆங்கிலேயரின் ஆதிக்கக் காலடி பதிய அனுமதிக்காத பாஞ்சால சிங்கம் ரஞ்சித் சிங்கின் வழிவந்த நீங்கள் இன்றைக்கு பாஞ்சாலம் உள்பட இந்திய நாடு முழுமையிலுமே ஆங்கிலேயர் மற்றும் அன்னியர்களின் ஆதிக்கம் படர வழிவகுத்துவிட்டீர்கள் என்பதைப் பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது.

எனது மூதாதையர்கள் வணிகம் செய்ய ஒரேயொரு கிழக்கிந்திய கம்பெனியை அனுமதித்தார்கள். அதன் விளைவாக நாட்டையே இழந்தார்கள். ஆனால், நீங்களோ ஆயிரக்கணக்கான அன்னிய நிறுவனங்களுக்கு நமது நாட்டின் கதவுகளைத் திறந்துவிட்டீர்கள். பொருளாதார ரீதியில் இந்திய நாடு அன்னியருக்கு அடிமைப்படுவதோடு அரசியல் ரீதியிலும் அடிமைப்படப் போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை என எச்சரிக்கிறேன்.

இறுதியாக ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஆங்கிலேயரை விரட்டியடிக்க தீரமுடன் போராடி துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் ஏற்றும் தூக்குக் கயிற்றை முத்தமிட்டும் மாண்டு மடிந்துபோன நம்முடைய மூதாதையர்களின் கல்லறைகளைத் தோண்டி அவர்களின் எலும்புகளை எடுத்து ஆழ்கடலில் அமிழ்த்துங்கள். வணிகம், தொழில் என்ற பெயரில் அன்னியர்கள் படைபடையாகக் குவிந்து சுரண்டும் இந்த மண்ணின் கல்லறையில்கூட வாழ அவர்கள் விரும்பமாட்டார்கள். நல்ல வேளையாக என்னை அன்னிய மண்ணில் புதைத்தார்களே என நான் மகிழ்ச்சியடைகிறேன்.

- அன்புள்ள பாதுஷா பகதூர் ஷா.

(25-10-2012 தினமணி நாளிதழில் பழ. நெடுமாறன் எழுதிய கட்டுரை)

நன்றி:


25.10.12

நவம்பர் 25இல் புதிய மாநில நிர்வாகிகள் தேர்தல்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க புதிய மாநில நிர்வாகிகள் தேர்தல் நவம்பர் 25இல் திருச்சியில் நடைபெறும் என மாநில பொதுச்செயலாளர் மா. குமரேசன் அறிவித்துள்ளார்.

நமது அமைப்பிற்கு 24 நவம்பர் 2007ல் மாநில தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இப்பொறுப்பில் உள்ளவர்கள் பட்டதாரி மற்றும் தமிழாசிரியராக பதவி உயர்வு பெற்றுவிட்டனர். தற்போது பொதுச் செயலாளரும் பதவி உயர்வில் சென்று விட்டார். ஆறுபேர் கொண்ட மாநில அமைப்பில் மாநில அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் மட்டுமே இடைநிலை ஆசிரியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.

23.10.12

ஊதிய முரண்பாடுகள் களைதல் குழுவின் பதவிக்காலம் 31-10-2012 வரை நீட்டிப்பு

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் 31-10-2012 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது ஆசிரியர், அரசு ஊழியர், மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6வது ஊதியக்குழு 1.1.2006 முதல் அமல்படுத்தப்பட்டது. இதில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி மூலம் ஒரு சில முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டாலும் பல முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் இருந்து வந்தன.

இந்த முரண்பாடுகளை களைவதற்காக அரசு செயலாளர் (செலவுகள்) கிருஷ்ணன் தலைமையில் உறுப்பினர்கள் அரசு கூடுதல் செயலாளர் (நிதித்துறை) பத்மநாபன், இணை செயலாளர் (நிதித்துறை) உமாநாத் ஆகியோர் அடங்கிய மூன்று நபர் குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்தக் குழு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களிடம் ஊதிய முரண்பாடு தொடர்பான கோரிக்கைகளை பெற்றது. இக்குழுவின் பதவிக் காலம் 3 மாதம் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் உறுப்பினர் பத்மநாபன் ஓய்வு பெற்றதால் அரசு கூடுதல் செயலாளர் (நிதி) சாந்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். குழுவின் பதவிக்காலமும் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஜூலை 9, 10, 11 மற்றும் 16ஆகிய தேதிகளில் ஊதிய முரண்பாடு தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், தனி நபர்களிடம் குழு ஆலோசனை நடத்தியது.

இந்தக் குழுவின் பதவிக்காலம் அக்டோபர் 8ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது குழுவின் பதவிக்காலத்தை 31-10-2012 வரை நீட்டிப்பு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.


அரசாணை எண்: 376 நாள்: 19-10-2012
.

ஒரு லட்சம் நூல்கள் கொண்ட அரிய தமிழ் நூலகம்

உலகளவில் குறிப்பிடத்தக்க நூலகங்களுள் ஒன்றாக திகழ்கிறது, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள நூலகம். இங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.ஆய்வாளர்கள், மாணவர்கள் என, பல தரப்பினருக்கும் உதவி வரும் இந்த நூலகத்திற்கு, தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர்.

பொதுவாக, ஆய்வு நூலகங்களில் நூல்களை நேரடியாக தேட முடியாது. இந்த நூலகத்தில், ஆய்வாளர்கள் தங்களுக்கு தேவையான நூல்களை தாங்களே தேடி எடுத்துக் கொள்ள முடியும்.

அரிய நூல்கள்:தமிழகத்தின் மிக அரிய, ஒரு முறை பதிப்பில் வெளிவந்து பின்னர் வெளிவராத பல நூல்கள், இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களின் முதல் பதிப்புகள், எங்கும் காண கிடைக்காத, 1927ல் பொன்னுசாமி பிள்ளை என்பவர் எழுதி வெளிவந்த பூர்வீக சங்கீத உண்மை, அபிதான கோசத்தின் 1092ல் வெளிவந்த பதிப்பு, 1911ல் வெளிவந்த ஆரியர் சத்திய வேதம், 1893ல் வெளியான நாகூர் புராணம், 1887ல் வெளியான திருவேங்கட தலபுராணம் போன்ற நூல்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.இலக்கியங்கள் மட்டுமல்லாமல், 1889ல் வெளியான முத்துவீரியம், 1869ல் பதிப்பு கண்ட 11ம் திருமுறை ஆகிய நூல்களும் இங்கு உள்ளன.

நூலகர் பெருமாள்சாமி கூறுகையில், ""எங்கும் காண கிடைக்காத அரிய நூல்கள், இந்த நூலகத்தில் உள்ளன. இங்கு, 1 லட்சத்து 300 நூல்கள் உள்ளன. சமீபத்தில் போதிய நூலக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதால், நூலகம் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது,'' என்றார்.

இணை பேராசிரியர் செல்வகுமார் இதுகுறித்து கூறியதாவது: உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலம், தமிழ் இலக்கியம் மற்றும் சுவடி புலம், சமூக அறிவியல் மற்றும் பண்பாட்டு புலம், அயல்நாட்டு தமிழர் புலம் என, நான்கு புலங்கள் செயல்படுகின்றன.தமிழ் இலக்கியம் மற்றும் சுவடி புலத்தின் சார்பில், இலக்கிய ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

பழங்கால சுவடிகள்: பழங்காலத்து சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இந்த சுவடிகளை படிப்பது, ஆய்வு செய்வது, பாதுகாப்பது குறித்த பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. ஜோதிடம் முதல், மருத்துவம் வரையிலான சுவடிகள் இங்கு உள்ளன. சுவடி ஆவணக் காப்பகத்தில் அவை பாதுகாக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:

 

தடுக்க முடியுமா டெங்கு காய்ச்சலை?

டெங்கு காய்ச்சலை பரப்புவதே கொசுக்கள் தான். பகல் நேரத்தில் மட்டுமே மனிதர்களை கடிக்கும், "ஏடிஸ்' வகை கொசுக்கள் மூலமே இக்காய்ச்சல் பரவுகிறது. பருவமழை காலத்தில் அதிகம் பரவும் இக்காய்ச்சல், ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.

அறிகுறிகள்: இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல் எலும்பு மூட்டுகள், இணைப்புகளில் கடும் வலியுடன் தொடர் காய்ச்சல் இருக்கும். தலைவலியும் சேர்ந்து இருக்கும்.உடல் வலியுடன் காய்ச்சல் இருந்தால், தாங்களாகவே மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக டாக்டரை ஆலோசிக்க வேண்டும்.

பரிசோதனைகள் என்ன: டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை செய்யப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், வயதிற்கேற்ப 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை தட்டணுக்கள் இருக்க வேண்டும்.இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், சம்மந்தப்பட்டவருக்கு டெங்கு காய்ச்சல் இருக்க அதிக வாய்ப்பு இருக்கும். பின், காயச்சலை உறுதி செய்யும் மற்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான மற்ற சிகிச்சைகள் தரப்படும்.

டெங்குவின் நிலைகள்
: டெங்குவில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். இதைத் தவிர, பெரிய பாதிப்பு இருக்காது.

காய்ச்சல் குணமாகி, சில நாட்கள் கழித்து, மீண்டும் ஏற்பட்டால் அது இரண்டாவது நிலை டெங்கு என கருதப்படும். ரத்தம் உறைவதற்கான தட்டணுக்களின் எண்ணிக்கை இவர்களுக்கு குறைந்து விடும். வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தப்போக்கு ஏற்படும்.

இதே நிலை முற்றினால், டெங்குவின் மூன்றாம் நிலை என கருதப்படும். இவர்களுக்கு ரத்தப் போக்கின் காரணமாக, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும். ரத்த அழுத்தம் மாறும். நாடித்துடிப்பு குறையும். மயக்க நிலையை அடையும் அபாயம் ஏற்படும். தோலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தோன்றும். டெங்கு தாக்கி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டவர்களுக்கு தான் பாதிப்பு அதிகம். உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும்.

தற்போது பாதிக்கப்பட்டோருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை.

முன்னெச்சரிக்கைக்கு என்ன செய்ய வேண்டும்:

* நாட்கணக்கில் தண்ணீரை சேமிப்பு வைத்து, பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* சேமிக்கும் தண்ணீரை, முறையாக மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

* தண்ணீர் சேமிக்கும் தொட்டி, பாத்திரங்கள், ஆறு நாட்களுக்கு ஒரு முறை மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.

* வீடுகளைச் சுற்றி, மழை நீர் சேமிக்க வாய்ப்புள்ள பிளாஸ்டிக், டயர்கள், சிரட்டை போன்றவற்றை அகற்ற வேண்டும்.

* வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.
.

தீபாவளி முன்பணம் சொற்பம்: அரசு ஊழியர் தயக்கம்

அரசிடம் இருந்து தீபாவளி முன் பணமாக 2 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ள அரசு ஊழியர்களும், போலீசாரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்கு, அரசு ஊழியர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை மாதம் 200 ரூபாய் வீதம் 10 தவணைகளில் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்கின்றனர். வழக்கம் போல் நடப்பு ஆண்டும் தீபாவளி முன்பணம் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு ஊழியர்களும், போலீசாரும் முன்பணம் பெற தயாராக இல்லை.

 போலீசார் 5 சதவீதம் பேர் கூட தீபாவளி முன்பணம் பெற விண்ணப்பிக்கவில்லை. கலெக்டர் அலுவலக ஊழியர்களும் முன்பணம் கேட்டு விண்ணப்பிக்காமல் உள்ளனர்.

போலீசார் கூறியதாவது: கடந்த 1994 ம் ஆண்டு தீபாவளி முன்பணம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என அரசு உத்தரவு வெளியானது. தற்போது அனைத்து பொருட்களும், ஜவுளிகளும் விலை உயர்ந்துள்ள நிலையில் 2 ஆயிரம் ரூபாயில் குடும்பத்தில் ஒருவருக்கு கூட ஜவுளி எடுக்க வாய்ப்பில்லை. இந்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். தீபாவளிக்கு ஒரு மாதம் சம்பளத்தையாவது முன்பணமாக வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளோம்,என்றனர்.

நன்றி:

 

22.10.12

தனி தாசில்தாராக மாறிவிட்ட தலைமை ஆசிரியர்கள்

மாணவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் 16 நலத்திட்ட உதவிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதால் தலைமை ஆசிரியர்கள் தனி தாசில்தாராக மாறிவிட்டனர். பணியாளர் பற்றாக்குறை காரணமாக இந்த வேலையில் ஆசிரியர்களையும் பயன்படுத்துவதால் படிப்பு பாதிப்படைகிறது.

பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை முன்னாள், இந்நாள் அரசுகள் வாரி வழங்கியுள்ளன. விலையில்லா பாடநூல், நோட்டு, மடிக்கணினி, மிதிவண்டி போன்ற விலையில்லா திட்டங்கள் 12, மற்றும் இடைநிற்றலை தடுக்க மாணவர்களுக்கு வைப்புத்தொகை பத்திரம், குடும்பத்தலைவரை இழந்த குடும்பத்துக்கு அரசின் நிதியுதவி, மாணவர்களுக்கு சாதி, வருவாய், இருப்பிட சான்று, ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகளையும் பள்ளிகள் மூலம் செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் ஆய்வக உதவியாளர், எழுத்தர் போன்ற ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 75 சதவீதம் காலியாக உள்ளன. சம்பள பில் தயாரித்தல், அதை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்தல், நூலக பதிவேடு பராமரித்தல் போன்ற வேலைகளை ஆசிரியர்களே இப்போது கவனித்து வருகின்றனர். கூடுதலாக தொடர் மதிப்பீட்டு திட்டத்துக்கும் பல பதிவேடுகளை பராமரிக்கின்றனர். இந்நிலையில் 16 நலத்திட்டங்கள் அவர்களை பெரிதும் பயமுறுத்துகின்றன.

இது குறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இலவச பொருட்கள் வழங்குவதற்கு முன் பும், பின்பும் பட்டியல் தயாரிப்பது, விநியோகித்த விவரத்தை பதிவது போன்ற எழுத்து வேலைகள் உள்ளன. மடிக்கணினி வழங்கும் முன்பு மாணவரின் பெயர், முகவரி, வகுப்பு, பதிவெண், கணினி சீரியல் எண் போன்றவற்றை எழுதி தனி படிவம் தயாரிக்கவேண்டியுள்ளது. சாதி, வருவாய் சான்றிதழ்களுக்காக விண்ணப்பங்களை நிரப்பி, பெற்றோரிடம் அளித்து கையொப்பம் வாங்கி துணைத்தாசில்தாரிடம் பட்டியலில் கையொப்பம் பெற்று கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர்கள் கையொப்பமிடுவதை பார்த்து பின்தொடர்ந்து சான்றிதழ் வாங்கி கொடுக்கவேண்டும்.

இதுநாள்வரை இச்சான்றிதழ்களுக்கு அன்பளிப்பு பெற்றுவந்த அதிகாரிகள் சிலர் வேண்டுமென்றே சுணக்கம் ஏற்படுத்துகின்றனர். வங்கிகளில் மாணவர்கள் பெயரில் கணக்கு தொடங்குவதும் கஷ்டமாக உள்ளது
மாணவர்களின் போட்டோ, குடும்ப அட்டைகளை சேகரித்து, விண்ணப்பங்களை நிரப்பி, விவரங்களை பதிவேட்டில் எழுதிக்கொண்டு சென்றால் பல வங்கி கிளைகளில் அலைக்கழிக்கின்றனர். இதே போல் ஆன்லைன் வேலை வாய்ப்பு பதிவிற்கும் அதிக சிரமப்பட வேண்டியுள்ளது. இது தவிர, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தொழிலாளர் கல்வி உதவித்தொகைகள் வழங்குவது தனி வேலை. மொத்தத்தில் பெற்றோர் பாரத்தை அரசு எங்கள் தோள்களில் ஏற்றியுள்ளது" என்றார்.

காலத்துக்கு உதவாதவை:
அறுசுவை உணவுக்கு பலவகை கூட்டுகள் போல் 16 நலத்திட்ட உதவிகள் பரவசப்படுத்தினாலும், இதுவரை பாடப்புத்தகம், நோட்டுகள், சீருடைகள் மட்டுமே அதுவும் முதல் பருவம் முடியும் தருவாயில் வந்து சேர்ந்துள்ளன. மிதிவண்டிகள் வந்தும் அரசியல் பிரமுகர்களை முன்னிறுத்தி வழங்கவேண்டியிருப்பதால் இன்னமும் விநியோகிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மாணவர்களுக்கான மடிக்கணினிகளே இன்னமும் கை சேரவில்லை. படிப்புக்கு பயன்படவேண்டிய பை, வண்ண பென்சில்கள், உலக வரைபடம், கணித உபகரணங்கள் மற்றும் செருப்பு இன்னமும் வந்து சேரவில்லை. காலத்தில் உதவாத பொருட்களால் மாணவர்களுக்கு பயனில்லை. தேவையை கருதி பெற்றோர்கள் இப்பொருட்களை ஏற்கனவே வாங்கி விட்டனர்.

விலையுள்ள பொருட்கள்
:
அரசு விலையில்லா பொருட் கள் என அறிவித்தாலும், மாணவர்கள் சிறிய விலை கொடுத்தே புத்தகம், சீருடை போன்றவற்றை வாங்குகின்றனர். இப்பொருட் களை கல்வி அலுவலகங்களிலி ருந்து எடுத்துவரும்போது சில அலுவலர்கள் ரூ.300 முதல் 500 வரை வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது மட்டுமின்றி, அங்கிருந்து எடுத்துவர ஆகும் செலவை மாணவர்களிடம் சில பள்ளிகள் வசூலித்து ஈடுகட்டுகின்றன.

நன்றி

 

21.10.12

மாணவர் தகவல் படிவம் பூர்த்தி செய்தல் - விளக்கங்கள்

Student Data Capture Format Filled Details

மறு சீரமைப்பு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான செலவின கணக்குத் தலைப்பு - பகஇஇ(ப.தொ.) செயல்முறைகள்

BT Deployment

டி.இ.டி., மறுதேர்வு 'கீ-ஆன்சர்' வெளியீடு

டி.இ.டி., மறுதேர்வுக்கான, 'கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது. கடந்த 14ம் தேதி நடந்த டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வை, 5 லட்சம் பேர் எழுதினர். இரு தேர்வுகளுக்குமான விடைகளை, டி.ஆர்.பி., நேற்று இணையதளத்தில் (http://trb.tn.nic.in) வெளியிட்டது. கேள்வித்தாள், ஏ,பி,சி,டி என, நான்கு வரிசைகளில் வழங்கப்பட்டன. அதேபோல், நான்கு கேள்வித்தாள் வரிசைகளுக்கும், தனித்தனியே, விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய சிறுபான்மை மொழிகளுக்கான கீ-ஆன்சர் மட்டும், வெளியிடப்படவில்லை. இவை, நாளையோ அல்லது அதற்கு மறுநாளோ வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. விடைகளில், ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அது குறித்து, தேர்வர்கள், ஒரு வாரத்திற்குள், டி.ஆர்.பி.,க்கு, எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். ஆட்சேபணைகள் இருந்தால், அது குறித்து, பாட வல்லுனர்களிடம் ஆலோசித்து, இறுதி விடைகள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.










 .

19.10.12

மழை காலங்களில் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பதில் தொடருது குழப்பம் : சிறுவர், சிறுமியர் அவதியோ அவதி

மழை காலங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் குழப்பமான நடைமுறை பின்பற்றப்படுவதால், மாணவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், நேற்று முன்தினம் முதல், மழை பெய்து வருகிறது. இதர மாவட்டங்களிலும், கடந்த இரு நாட்களாக மழை வலுத்துள்ளது.

பெரும் குழப்பம்: தொடர்மழை காலங்களில், மாணவர்கள் பள்ளிக்கு வருவது பாதுகாப்பானதாக இல்லை என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. ஆனால், சமீப காலமாக, மழை காலங்களில், பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து முடிவெடுப்பதில், அதிகாரிகள் மத்தியில், பெரும் குழப்பம்
ஏற்படுகிறது. தொடர் மழையையும் பொருட்படுத்தாமல், மாணவர்கள் பள்ளிக்கு வந்த பின், அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், பலத்த மழையின் போது பள்ளி இயங்குவதும், விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில், மழை ஓய்ந்திருப்பதும் தொடர்கிறது. பள்ளி விடுமுறை தொடர்பான அறிவிப்பு, முதற்கட்டமாக, "டிவி' மற்றும் இணையத்தில் வெளியாகும் என்பதால், காலையில் பள்ளிக்கு கிளம்பும் முன், அனைத்து, "சேனல்'களையும், "செக்' செய்துவிட்டு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்புவதும் தொடர்கிறது.

"லீவு விட்டா, மழை நின்னுடும்': சென்னையில் நேற்று மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதற்கேற்ப, நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை, மழை, விட்டுவிட்டு பெய்தது. இதனால், சாலையெங்கும் வெள்ளம் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.
வழக்கம் போல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுமா என்று எதிர்பார்த்து, எவ்வித அறிவிப்பும் வராததால், பிள்ளைகளை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பினர். ஆனால், பள்ளிக்கு சென்ற பின், காலை, 9:30 மணியளவில், மழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை என, சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்தார்.

இதனால், பள்ளி நிர்வாகத்தினரும் குழப்பமடைந்தனர். பெரும்பாலான மாணவர்கள், ஆட்டோ, வேன் போன்ற வாகனங்கள் மூலம் பள்ளிக்கு வருகின்றனர். பணிக்கு செல்லும் பெற்றோர், பள்ளிகளில் குழந்தைகளை விட்டுச் செல்லும் நடைமுறையும் உண்டு. இதில் குளறுபடிகள் ஏற்பட்டன. இதனால், குழந்தைகள், பள்ளி வளாகத்தில், பரிதாபமாக காத்திருக்க வேண்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்யும் காலம் வந்ததால், இப்பிரச்னைக்கு நிரந்தர அணுகுமுறை தேவைப்படுகிறது.

குழப்பம் ஏன்?: இந்த குழப்பத்திற்கு காரணம் குறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொடர் மழை காலங்களில், பள்ளிக்கு விடுமுறை விடுவதற்கான அதிகாரம், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசம் இருந்து வந்தது. கல்வி மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளிடம், மழை நிலவரம் குறித்து, அவர்கள் கேட்டறிந்து, அதற்கேற்ப, உள்ளூர் விடுமுறையை அறிவித்து வந்தனர். விடுமுறையை ஈடுகட்ட, மாற்றாக, எப்போது பள்ளிகளை நடத்ததலாம் என்பதை, அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப அவர்கள், அறிவித்ததும் உண்டு.

கடந்த, தி.மு.க., ஆட்சியில், பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அதிகாரம், மாவட்ட கலெக்டர்களுக்கு மாற்றப்பட்டது. பல்வேறு பணிகளுக்கு இடையே, மாவட்ட கலெக்டர்கள் பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து, உடனடி முடிவெடுக்க முடியாததால் தான் இத்தகைய குழப்பம் ஏற்படுகிறது. சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இந்த குழப்பம் தொடர்கிறது. எனவே, முன்பு இருந்தது போல், விடுமுறை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, முதன்மை கல்வி அலுவலர் வசமே ஒப்படைத்தால், நிலைமைக்கேற்ப, அவர் முடிவெடுக்க வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி:

 

தேசிய திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு

மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வுத் தேர்வு, வரும், டிசம்பர் 30ல் நடக்கிறது.

தேர்வுத்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திறனாய்வுத்  தேர்வு, அனைத்து கல்வி மாவட்ட தலைநகரங்களில் நடக்கும். இதற்கான விண்ணப்பங்களை, நவ., 1 முதல், 9ம் தேதி வரை, www.dge.tn.nic.in என்ற, தேர்வு துறையின் இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், இத்தேர்வில் பங்கேற்கலாம்.

மாணவரின் பெற்றோர் ஆண்டு வருவாய், 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தேர்வெழுத தகுதி வாய்ந்த மாணவ, மாணவியர், கடந்த ஆண்டு, ஏழாம் வகுப்பு, முழு ஆண்டு தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர், 50 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவு மாணவ, மாணவியர், 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

பதிவிறக்கம் செய்யும் விண்ணப்பத்தில், புகைப்படத்தை ஒட்டி, தேர்வு கட்டணம், 50 ரூபாய் உடன், பள்ளி தலைமை ஆசிரியரிடம், விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு, இரு பகுதிகளை கொண்டது. பகுதி ஒன்றில், மனத்திறன் தேர்வு; பகுதி இரண்டில், படிப்பறிவு தேர்வு. ஒவ்வொரு பகுதிக்கும், தலா, 90 நிமிடங்கள் வழங்கப்படும். படிப்பறிவு தேர்வில், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் இருந்து, கேள்விகள் கேட்கப்படும்.

அறிவியலில், 35 கேள்விகள், கணிதத்தில், 20, சமூக அறிவியலில், 35 என, 90 கேள்விகள் கேட்கப்படும். தலா, 1 மதிப்பெண்கள். மனத்திறன் தேர்வுக்கு, பாடப் பகுதி கிடையாது. இப்பகுதியிலும், 90 கேள்விகள் கேட்கப்படும்.

இவ்வாறு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

நன்றி:

 

அரசு பள்ளி மாணவர்களுக்கு 30 தகவலுடன் "ஸ்மார்ட் கார்டு'

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முகவரி உட்பட 30 தகவல்கள் அடங்கிய "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கான பணி நடக்கிறது.

ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு மாணவருக்கும் அடையாள அட்டையை போன்று போட்டோவுடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு' வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவர்களின் பெயர், முகவரி, வகுப்பு, ஜாதி, குடும்ப வருமானம், உடன் பிறந்தவர்களின் விவரம் உட்பட 30 தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்குரிய படிவம் அனைத்து அரசு பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலுள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மாணவர்களின் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அக்.,30க்குள் இப்பணியை முடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதன்பின், முதன்மை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு "ஸ்மார்ட் கார்டு' வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ""அடையாள அட்டைக்கு பதிலாக "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு ரகசிய எண் வழங்கப்படுகிறது. இந்த எண்ணை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் அனைத்து விவரங்களும் தெரியவரும். இது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இக்கார்டுகளை தவறான நோக்கில் பயன்படுத்த முயற்சிக்கக்கூடாது,'' என்றார்.

நன்றி:

 

18.10.12

அக்.26-ம் தேதி அரபா நாள்; 27-ம் தேதி பக்ரீத்: அரசு ஹாஜி அறிவிப்பு

ஷரீஅத் முறைப்படி சனிக்கிழமை (அக். 27) புனித ஹஜ்பெருநாள் (பக்ரீத்) நிச்சயிக்கப்பட்டிருப்பதாக அரசு ஹாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கடையநல்லூர் ஏ.ஒய்.முஹ்யித்தீன் அப்துல்காதிர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அக். 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை துல்ஹஜ் பிறை தென்படாததால், அக். 18-ம் தேதி வியாழக்கிழமை துல்ஹஜ் மாத முதல் பிறை என்றும், அக்.26-ம் தேதி வெள்ளிக்கிழமை புனிதமிகு அரபாவுடைய நாள் என்றும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நோன்பு வைப்பது சுன்னத் ஆகும்.

அக். 27-ம் தேதி சனிக்கிழமை புனிதமிகு ஹஜ் பெருநாள் (பக்ரீத்) ஷரீஅத் முறைப்டி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.

நன்றி:

மாற்றுத் திறனாளிகளை கையாள்வது குறித்து அக்.20-ம் தேதி ஆசிரியர்களுக்கு பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளை கையாள்வது குறித்து அக்.20-ம் தேதி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தொடக்க நிலை ஆசிரியர்கள், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
.

ஒவ்வொரு வகுப்பிலும் புகார் பெட்டி: தேசிய ஆணையம் உத்தரவு

"அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர், சாந்தா சின்கா உத்தரவிட்டார்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிகழ்ந்த குழந்தை உரிமை மீறல்கள் குறித்த, இரண்டு நாள் பொது விசாரணை, சென்னையில் நேற்று துவங்கியது. இதற்காக, குழந்தை உரிமை மீறல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர், விசாரணை செய்த போலீசார், கல்வித்துறை அதி காரிகள் உள்ளிட்ட பலதுறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொது விசாரணையில் ஆஜராக வேண்டும் என, தேசிய கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், விசாரணைக்கு வந்தனர்.

62 உரிமை மீறல்கள்
: இரு மாநிலங்களிலும் நிகழ்ந்த, 62 உரிமை மீறல்கள் குறித்த சம்பவங்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், கல்வி உரிமை மறுத்தல், குழந்தை தொழிலாளர், உடல் ரீதியான தண்டனை அளித்தது, குழந்தை கடத்தல், பாலியல் கொடுமைகள் என, பல்வேறு உரிமை மீறல் சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, செத்தவரை கிராமத்தைச் சேர்ந்த, 13 வயது சிறுமி, கடந்த ஏப்ரல் மாதம், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து, விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி, பேச முடியாமல் அழுததைக் கண்டு, பார்வையாளர்கள் கடும் வேதனை அடைந்தனர்.

மிரட்டல் புகார்
: "போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை; உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை' என, சிறுமியின் தாய் குற்றம் சாட்டினார்; மேலும், தங்களுக்கு, தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு டி.எஸ்.பி., அளித்த பதில் திருப்தி அளிக்காததால், "பாதிக்கப்பட்ட சிறுமிக்கென தனியாக வக்கீலை நியமித்து, அவருக்கு உரிய நீதி கிடைக்க, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சாந்தா சின்கா உத்தரவிட்டார்.

மேலும், "சிறுமி விரும்பும் பள்ளியில், கல்வியைத் தொடர, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, அவர் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பேசுகையில், "சிறுமி, எந்தப் பள்ளியில் சேர விரும்பினாலும், அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

புகார் பெட்டி: இரண்டாவதாக, சென்னை, வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த, 11 வயது சிறுமி, அருகில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் (அரசு உதவிபெறும் பள்ளி) படித்து, பள்ளி ஆசிரியையின் கொடுமைக்கு ஆளாகி, ஜூனில், "கெரசின்'' ஊற்றி தீ வைத்து, தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகளை, சாந்தா சின்காவும், முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியும், கடுமையாக கண்டித்தனர். மாணவியரை ஆசிரியை கொடுமைப்படுத்தியது குறித்து, தங்களுக்கு எதுவும் தெரியாது என, பள்ளி தாளாளர் தெரிவித்தார்.

இதற்கு, "பள்ளியில் நடப்பது எதுவுமே தெரியாமல், எப்படி ஒரு நிர்வாகம் இருக்க முடியும்? மாணவியரிடம், குறைகளை கேட்டறியும் வழக்கத்தை கடைபிடித்தீர்களா?" என, பல்வேறு கேள்விகளை, வசந்திதேவி கேட்டார்.

இதையடுத்து, ஆணைய தலைவர் சாந்தா சின்கா கூறியதாவது: சம்பந்தபட்ட பள்ளி மட்டுமில்லாமல், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைப்பதற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ, மாணவியரிடம், முறையாக குறைகளை கேட்டறிந்து, அதை நிவர்த்தி செய்ய, பள்ளி நிர்வாகங்களும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சாந்தா சின்கா தெரிவித்தார்.

நன்றி:

 

அனைத்து வகை பள்ளிகளிலும் கழிப்பறை வசதி: ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்ற முடியுமா?

"அனைத்து வகை பள்ளிகளிலும், ஆறு மாதங்களில், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்" என, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, தமிழகத்தில், ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்ற முடியுமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் என்ற, தன்னார்வ அமைப்பு, தொடர்ந்த வழக்கில், "அனைத்து வகை பள்ளிகளிலும், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, ஆறு மாதங்களில் ஏற்படுத்திட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, இம்மாதம், 3ம் தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

தமிழகத்தில், தற்போது, பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள், நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் முதல் வாரத்திலோ முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு தகவல்கள் கிடைத்தபிறகே, எத்தனை பள்ளிகளில், அடிப்படை வசதிகள் உள்ளன; எத்தனை பள்ளிகளில், போதிய அளவிற்கு, அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டியுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில், தேவை உள்ள பள்ளிகளுக்கு, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, திட்டங்கள் தீட்டி, அரசின் அனுமதிபெற வேண்டும். அதன்பின், டெண்டர் விட்டு, பணிகளை நிறைவேற்ற, நடவடிக்கைஎடுக்க வேண்டும். பட்ஜெட் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், கடைசி நேரத்தில் தனியாக வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, புள்ளி விவரங்கள் அடிப்படையில், தீட்டப்படும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், வரும் பட்ஜெட்டிலோ அல்லது பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையிலோ வெளியாகலாம். அதனால், ஆறு மாதங்களுக்குள், திட்டப் பணிகளை முடிப்பதற்கு, நடைமுறையில் சாத்தியமில்லை என, கல்வித்துறை கை விரிக்கிறது.

இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளில், 3,769 குடிநீர் வசதிகள், 4,373 மாணவர் கழிப்பறை வசதிகள், மாணவியருக்கென, 7,262 கழிப்பறை வசதிகள், 7,907 கூடுதல் வகுப்பறைகள், 3.81 லட்சம் மீட்டரில், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புதிட்டங்கள், 1,507 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்படது.

இப்பணிகளில், 90 சதவீதத்திற்கும் அதிகமான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த திட்டங்களை உள்ளடக்கிய பள்ளிகள் போக, மேலும் அடிப்படை வசதிகள் தேவைப்படும் பள்ளிகள் எண்ணிக்கை, குறைவாகவே இருக்கும் என, கல்வித்துறை எதிர்பார்க்கிறது. இந்தப் பள்ளிகளுக்கு, வரும் கல்வியாண்டில், தேவையான அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி:

 

12.10.12

ஊதிய முரண்பாடு களைதல் குழு அறிக்கை எப்போது?

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் முடிந்தது. இந்தக் குழு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6வது ஊதியக்குழு 1.1.2006 முதல் அமல்படுத்தப்பட்டது. இதில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி மூலம் ஒரு சில முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டாலும் பல முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் இருந்து வந்தன.

இந்த முரண்பாடுகளை களைவதற்காக அரசு செயலாளர் (செலவுகள்) கிருஷ்ணன் தலைமையில் உறுப்பினர்கள் அரசு கூடுதல் செயலாளர் (நிதித்துறை) பத்மநாபன், இணை செயலாளர் (நிதித்துறை) உமாநாத் ஆகியோர் அடங்கிய மூன்று நபர் குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்தக் குழு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களிடம் ஊதிய முரண்பாடு தொடர்பான கோரிக்கைகளை பெற்றது. இக்குழுவின் பதவிக் காலம் 3 மாதம் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் உறுப்பினர் பத்மநாபன் ஓய்வு பெற்றதால் அரசு கூடுதல் செயலாளர் (நிதி) சாந்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். குழுவின் பதவிக்காலமும் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஜூலை 9, 10, 11 ஆகிய தேதிகளில் ஊதிய முரண்பாடு தொடர்பாக 240க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், தனி நபர்களிடம் குழு ஆலோசனை நடத்தியது. இதில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றன.

இந்த ஆலோசனையின் போது, இடைநிலை ஆசிரியர்களின் சாதாரண நிலை ஊதியம் 5200 - 20200, தர ஊதியம் 2800 என "பே பாண்ட் 1" ஆக உள்ளது. இதை "பே பாண்ட் 2" ஆக மாற்றி 9300 - 34,800 தர ஊதியம் 4,200 வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் குழுவின் பதவிக்காலம் கடந்த 9ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. எனவே மூவர் கமிட்டி உடனே அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அரசும் ஊதிய முரண்பாடுகளை களைந்து விரைந்து ஆணைகளை வெளியிட வேண்டுமென்று அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

நன்றி:

 

10.10.12

ஆசிரியர் தகுதித் தேர்வு - தேர்வு நடத்துவது தொடர்பான அறிவுரைகள்

ஆசிரியர் நியமனத்திற்கு புதிய விதிமுறைகள்: "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அறிமுகம்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, புதிய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 முதல், பட்டப் படிப்பு வரையில் பெற்ற மதிப்பெண் மற்றும் டி.இ.டி., தேர்வில் பெற்ற மதிப்பெண்களை, "வெயிட்டேஜ்' அடிப்படையில் கணக்கிட்டு, இனி பணி நியமனம் நடக்கும்.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டப்படி, 1 முதல், 8 வகுப்பு வரை, பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூலையில், டி.இ.டி., தேர்வை, டி.ஆர்.பி., நடத்தியது. 6.5 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தோற்றவர்களுக்கு, மறுதேர்வு அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதில் வெற்றி பெறுபவரை, பணி நியமனம் செய்ய, தனி வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், நான்கு பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, இரண்டு முறை கூடி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, புதிய விதிமுறைகளை, அரசுக்கு பரிந்துரை செய்தது. இதை ஏற்று, புதிய நியமன வழிமுறைகள் தொடர்பாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இடைநிலை ஆசிரியர்:
பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், "வெயிட்டேஜ்' மதிப்பெண்களாக, 15ம்; ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், "வெயிட்டேஜ்' மதிப்பெண்களாக, 25ம் கணக்கிட்டு வழங்கப்படும். இத்துடன், டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், அதிகபட்சமாக, 60க்கு கணக்கிட்டு வழங்கப்படும். இந்த வகையில், 100 மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.


பட்டதாரி ஆசிரியர்:
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண், 10; பட்டப் படிப்பிற்கு, 15; பி.எட்.,டுக்கு, 15 மற்றும் டி.இ.டி., தேர்வுக்கு, 60 மதிப்பெண் என, 100 மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில் தேர்ச்சி பெறுபவர், பணி நியமனம் செய்யப்படுவர்.

இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அரசாணை எண்: 252 நாள்: 05-10-2012
.

உலக விண்வெளி வார விழா - மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி

9.10.12

'நமது முழக்கம்' மின்னிதழ் - ஆகஸ்ட் 2012

N-M Aug 2012

அறிவியல் கண்காட்சி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Science Exbition DSE Pro

EMIS மாணவர் விவரங்கள் கோரும் படிவம் பூர்த்தி செய்தல் சார்ந்த அறிவுரைகள்

Emis Ins. Dse Pro

மாணவர் விவரங்கள் கோரும் படிவம்

Student DCF

7.10.12

ஓய்வூதிய திட்டத்தில் அன்னிய முதலீடு அதிகரிப்பு: மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என ஜெ., பாய்ச்சல்

"காப்பீடு, ஓய்வூதியத் திட்டத்தில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது, மக்களை ஏமாற்றும் நடவடிக்கை' என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் எழுதியுள்ள கடித விவரம்:
பொதுமக்கள், சிறு வியாபாரிகள் மற்றும் சிறு விவசாயிகளின் வேதனைகளைப் பற்றி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கவலைப்படாமல் உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது, வெளியாகி வரும், மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை, மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காக, நேரடி அன்னிய முதலீடு விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில், நேரடி அன்னிய முதலீட்டை, 26லிருந்து, 49 சதவீதமாக உயர்த்தவும், ஓய்வூதியத் திட்டத்தில், அன்னிய முதலீட்டுத் திட்டத்திற்கு, 26 சதவீதம் வரையில் இடம் அளிக்கவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தெடர்பாக, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா மற்றும் காப்பீட்டுத் திட்ட மசோதா ஆகியவற்றை, பார்லிமென்ட்டின், இரண்டு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். ஆனால், நிறைவேற்றத் தேவையான அளவிற்கு, எம்.பி.,க்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இல்லை.காப்பீட்டுத் துறையில், ஏற்கனவே, 26 சதவீத அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிடத்தக்க எந்த முதலீடும் இதுவரை வரவில்லை.காப்பீட்டு நிறுவனங்கள், 50 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டிருந்தால் போதுமானது என்று கூறப்பட்டுள்ள விதியானது, இந்த துறையில் அனுபவமும், ஆற்றலும் இல்லாத, சிறு சிறு நிறுவனங்களை, காளான்களைப் போல முளைக்கச் செய்யும்; இது மிகவும் அபாயகரமானது.

இது, மக்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும். அதே நேரத்தில், எல்.ஐ.சி., போன்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதன் மூலம், நாட்டின் வளர்ச்சியும் குறையும்.மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வணிகத் தந்திரம் மிக்கது; மோசமானது என்பதுடன் அவசியமும் இல்லாதது. மோசமான நடவடிக்கைகளை, சீர்திருத்தம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்த நினைப்பது, மக்களை ஏமாற்றுவதாகும். பொதுமக்களின் எதிர்காலத்திற்கு,பேராபத்து விளைவிக்கும் இந்த நடவடிக்கைகளை, நான் வன்மையாக எதிர்க்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:

புதிய ஆசிரிய பணியிடங்களுக்கு சம்பளம் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

புதிய ஆசிரிய பணியிடங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாளையில் நடந்த ஆசிரியர், அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நெல்லை மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், அலுவலர் சங்கங்களின் மாவட்ட கூட்டம் பாளையில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார். இணை அமைப்பாளர் பஸ்லுல்ஹக் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் கழக இணை செயலாளர் சுரேஷ் வரவேற்றார்.இதில் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள் சார்பில் விக்டர் ஜான்சன், தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் பாஸ்கர், பொற்செழியன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் சத்திய நாராயணன், மூக்கையா, பஞ்சராஜ், கார்த்திகேயன், சுந்தர குமார், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் ராஜமார்த்தாண்டன், சரவணன், ஜோசப் ராஜாசிங், ரைமண்ட், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆசீர் சார்லஸ் நீல் உட்பட பலர் பேசினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ம் தேதி சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலகம் முன்பு நடக்கும் முற்றுகை போராட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும். இதுவரை சம்பளம் வழங்கப்படாத புதிய ஆசிரியர் பணியிடங்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆசிரியர், அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் இசக்கியப்பன் நன்றி கூறினார்.

நன்றி:

 

6.10.12

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1.7.2012 முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்தி வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 1.7.2012 முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,443 கோடியே 52 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை எண்: 362 நாள்: 05-10-2012 
.

5.10.12

'கரன்ட் என்பது மின்சாரம் ஆவதற்கு 24 ஆண்டுகள் ஆனது'

"தமிழ் கலைச் சொல்லாக்கத்தை வளர்ப்பது நம் கையில் தான் உள்ளது. அதை அடுத்த தலைமுறைகளுக்கு நேர்மையாக, பிழையில்லாமல் கொண்டு செல்ல வேண்டும்,'' என, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் சேகர் பேசினார்.

தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ்க் கலைச்சொல்லாக்கம் குறித்த தேசிய கருத்தரங்கம் நேற்று துவங்கியது. விழாவில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் சேகர் பேசியதாவது: காலையில் இருந்து மாலை வரை நாம் செய்யும் செயல்களைக் கூறும் போது, ஆங்கிலமும், தமிழும் கலந்து கூறுகிறோம். இப்படி பேசுவது படித்தவர்களாகிய நாம் தான். பாமர மக்கள் இப்படி பேசுவது கிடையாது. அதனால் தான் சொல் சிதைவு, மொழி சிதைவு ஏற்பட்டுவிட்டது. இதை மாற்றி அமைக்க இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. பேருந்து நிலையம் என்றால் பலருக்குத் தெரிவதில்லை. தமிழகத்தில் இருக்கிறோமா என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழில் சொல் பஞ்சம் என்பதே இல்லை. ஆனால், பயன்படுத்துவதில்லை. ஆங்கிலம் பேசினால் அறிவாளி என நினைப்பர் என்று கருதி ஆங்கிலம் பேசுகிறோம். ஆனால், முழுமையாக ஆங்கிலம், தமிழ் பேசுபவர்களை பார்த்ததில்லை.

ஆங்கில மோகம்: நாம் ஆங்கில மோகத்தில் விழுந்து விட்டோம். பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை. அதே நேரம், தமிழ் மொழியை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும்; எழுத வேண்டும். தமிழகத்தில் கரன்ட் என்பது மின்சாரம் ஆவதற்கு, 24 ஆண்டுகள் ஆகியுள்ளது. ரோம் நகரத்தில் சர்ச்சிற்கு வருபவர்களுக்கு, காலணிகளைத் துடைப்பது ஒருவரின் வேலை. அவர் யாரிடமும் ஊதியம் வாங்குவதில்லை. ஆனால், லத்தின் மொழி பேசுபவர்களிடம் மட்டும் ஊதியம் வாங்குவார். இது, அவருக்கு உள்ள மொழிப் பற்றைக் காட்டுகிறது.

தமிழ் பெயர் தவிர்ப்பு: நல்ல தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொள்வது கூட கிடையாது. காரணம், தயக்கம். உணவு விடுதிகளில் சோறு கேட்கும் போது, "ரைஸ்' கொடுங்கள் என்கிறோம். ஆங்கிலேயருக்கு சோறு, அரிசிக்கு "ரைஸ்' என்று ஒரே பெயர் தான். தமிழை நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, கலைச் சொல்லாக்கத்தை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். நாகர்கோவிலில் "இருக்கின்றது' என்ற சொல், மதுரை வரும் போது "இருக்கு' என, மாறுகிறது. அது, விழுப்புரம் வரும்போது "கீது' என்று மாறுகிறது. அதே சென்னைக்கு வரும்போது "தோ' என்று ஒரு எழுத்தாக மாறுகிறது. இது ஆவணமாக மாறிவிடும். இந்த பதிவிற்கு நாம் காரணமாக மாறிவிடக்கூடாது என்பது இந்த கருத்தரங்கின் நோக்கம். கம்பர், இராமாயணத்தில் ராமன் என்று கூறமாட்டார்; இராமன் என்று தான் கூறுகிறார். லட்சுமணனை இலக்குமணன் என்று தான் கூறுகிறார்.

கொரியாவில் 450 சொல்: பாரதிக்கு தமிழ் மேல் உணர்வு இருந்தது. தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ்ச் சங்கம் வேண்டும் என, கனவு கண்டார். தற்போது, மதுரையில் சங்கமும், தஞ்சையில் பல்கலைக் கழகமும் வந்துவிட்டது. இங்குள்ள மொழியை அங்கு கொண்டு சென்று ஆங்கிலத்தை பலப்படுத்திக் கொண்டனர். உலகில் உள்ள மொழிகளில், 20 சதவீதம் தமிழ் மொழி சொற்கள் உள்ளன. கொரிய மொழியில் 450 தமிழ் சொற்கள் உள்ளன. "தேர் இஸ் சம்திங்' என்று சொன்னால், உடலில் உள்ள எட்டு கலோரிகள் போகின்றன. அதே வார்த்தை, "அங்கு ஏதே உள்ளது' என்று தமிழில் கூறினால், ஒன்றரை "கலோரி' மட்டுமே செலவாகிறது. எனவே, தமிழ் என்பது இதயத்தில் இருந்து வருகிறது.

பிரித்து பேச வேண்டும்: எனவே, படித்தவர்கள் மத்தியில் கலைச் சொல்லாக்கம் வளர வேண்டும் என்பதற்காக இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் இல்லாத தமிழ் வார்த்தையா? பேசும்போது, பிரித்துப் பேசுவதை பிரித்துப் பேச வேண்டும். சேர்த்துப் பேச வேண்டியதை சேர்த்துப் பேச வேண்டும். இல்லாவிட்டால் பொருள் மாறிவிடும். எனவே, அடுத்த தலைமுறையிடம் தமிழ் மொழியை முறையாக, சரியாக, பிழையில்லாமல் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு சேகர் பேசினார்.

கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் குணசேகரன் பேசுகையில், "கலைச் சொல்லாக்கம் என்பது, மற்ற மொழிகளில் உள்ள சொற்களை தமிழில் பயன்படுத்த வேண்டும் என்பது தான். தமிழில் இல்லாத சொற்களே இல்லை. எனவே, பிறமொழி சொற்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த கருத்தரங்கம் மூலம் சிறந்த கலைச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்' என்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணை பேராசிரியர் செல்லகுமார் வரவேற்று பேசினார். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் நடராஜன் பிள்ளை துவக்கவுரை நிகழ்த்தினார். கருத்தரங்கம், மூன்று நாட்களுக்கு ஆறு அமர்வுகளாக நடத்தப்படுகிறது.

நன்றி:

 

புத்துயிர் பெறும் சிலம்பக்கலை: பாரம்பரியத்தை காக்கும் பள்ளி


உடுமலை அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் பாரம்பரிய மிக்க, சிலம்ப கலையினை, பள்ளி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் ஒத்துழைப்பால், மாணவர்கள் முறையாக பயின்று வருகின்றனர். அழிந்து வரும் கலையாக காணப்பட்ட சிலம்பம், இளைய சமுதாயத்திடம் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருவதால், மீண்டும் புத்துயிர் பெற்று வருவதாக, சிலம்ப பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றியது சிலம்ப கலை. தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்டு, போற்றி பாதுகாக்கப்பட்டு வந்த தற்காப்பு கலைகளில், ஒன்றாக இக்கலை இருந்துள்ளது. கடந்த காலங்களில், சிலம்பாட்டம், புலி விளையாட்டு, கரடி விளையாட்டு, சில்தா (கம்பு), பிச்சுவா (இரண்டு கத்தி) சோடு, வாள், குத்து வரிசை, தீபந்தம், சுருள் கத்தி, மகுடு என்ற மான் கொம்பு விளையாட்டு ஆகியவை தமிழகத்தில் பாரம்பரியமிக்க போர் கலையாகவும் இருந்துள்ளது.

இதில், சிலம்ப பயிற்சி பெற்றவர்கள், பயிற்சி பள்ளிகளை துவக்கி அதன் மூலம் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இக்கலையினை கற்றுத் தந்து வருகின்றனர். தேங்காயை தலையில் வைத்து உடைத்தல், தராசு தட்டில் முட்டை வைத்து சுற்றுதல், தராசு தட்டில் இரண்டு டம்ளரில் தண்ணீர் வைத்து சுற்றுதல் போன்ற பல்வேறு பயிற்சிகளும் சிலம்ப ஆசிரியர்களால் அளிக்கப்படுகிறது. திருவிழா மற்றும் பண்டிகை காலங்களிலும், சிலம்ப போட்டிகள் நடைபெறுகிறது; மாவட்ட அளவிலும் சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டு சிலம்ப கலைகளை இளைஞர்களிடம் வளர்க்கப்பட்டு வருகிறது.

உடுமலை அருகே பள்ளபாளையம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 225 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்கள் பாரம்பரிய மிக்க சிலம்ப கலை கற்க ஆர்வம் காட்டியதால், பள்ளி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகமும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

முதற்கட்டமாக தற்போது, ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரம்தோறும், வெள்ளிக்கிழமைகளில், மதிய நேரத்தில், 3.00 மணிக்கு மேல் மாணவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலில், குச்சிகளை சுற்ற கஷ்டமாக உணர்ந்த மாணவர்கள் தற்போது, லாவகமாக குச்சிகளை சுற்ற பழகிகொண்டுள்ளனர்.

"பெற்றோர்கள் ஒத்துழைப்பு, கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறப்பட்ட பின்னரே, சிலம்ப பயிற்சி வாரத்தில் ஒரு நாள் ஊராட்சி தலைவர் ஒத்துழைப்போடு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். உடற்பயிற்சி போன்றுள்ளதாலும், தற்காப்பு கலையாக உள்ள இக்கலையினை கற்க மாணவர் மட்டுமின்றி, மாணவியரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்,'' என்றார் இப்பள்ளி தலைமையாசிரியர் மகாலட்சுமி.

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சிலம்பம்
சிலம்ப ஆசான் சக்திவேல் மற்றும் பயிற்சியாளர் நந்தகோபால் கூறியதாவது:
ஆங்கிலேயர்களை விரட்ட வீரபாண்டிய கட்ட பொம்மன், புலித்தேவர், மருதபாண்டிசகோதர்கள் உள்ளிட்ட மன்னர்கள் காலத்தில் சிலம்பம் போர்க்கலையாக பயன்படுத்தப்பட்டதாக சிலம்ப வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலம்பம் வெறும் கலை மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இப்பயிற்சியின் மூலம் உடற்பயிற்சி, உளப்பயிற்சி, அதிர்வினை நிகழ்வு, உடல் தாங்கும் திறன் பயிற்சி, சமயோசிதமாக சிந்தித்தல், நிலை தடுமாறாமல் நிற்கும் பயிற்சி, சிலம்பத்தை கைகளினால், பயன்படுத்துவதால் விரல்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.உயிருக்கும் ஆரோக்கியம் தரும் சிலம்பம் மனித வாழ்க்கைக்கு கற்பக விருட்சமாக உள்ளது. தற்போது சிலம்பாட்டத்தை அரசு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்த்துள்ளனர். இதனால், அழிவின் விளிம்பில் இருந்த சிலம்ப போட்டி தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

பள்ளபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தற்போது மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. ஊராட்சி தலைவர் ஒத்துழைப்பால், இப்பயிற்சி மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறது. இதற்கான சம்பளமும் அவர் சொந்த செலவில் வழங்கி வருகிறார். தற்போது, விடுமுறை நாட்களிலும் தினசரி மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:

 

3.10.12

ஆறு லட்சம் சொற்களுடன் விரிவுபடுத்தப்பட்ட தமிழ்ப் பேரகராதி: வட்டார சொற்களுக்கு முக்கிய இடம்


சென்னை பல்கலைக்கழகத்தின் விரிவு படுத்தப்பட்ட தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதி, ஆறு லட்சம் சொற்களுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. வட்டார வழக்குச் சொற்களுக்கு, இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மொழியின் வளத்தை, எடுத்துரைக்கும் அளவு கோலாக, அகராதி உள்ளது. தமிழ் மொழியின் முதல் அகராதி, 96 ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இணைப்புத் தொகுதிகளையும் சேர்த்து, ஏழு தொகுதிகள் இதுவரை வெளியாகியுள்ளன. கடந்த, 1924 முதல், 1939ம் ஆண்டு வரை, ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 996 சொற்களைக் கொண்ட தமிழ் அகராதியை, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்திய மொழிகளில், முதன் முதலில் அகராதியை வெளியிட்டது தமிழ் மொழி தான். இந்த அகராதியின் சிறப்புகளுக்காக, அகராதியின் தலைமைப் பதிப்பாசிரியர், வையாபுரி பிள்ளைக்கு, "ராவ் பகதூர்' பட்டத்தை அரசு வழங்கியது. தமிழ் அகராதி வெளியாகி, 96 ஆண்டுகளில், அரசியல், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் பல துறைகளில், பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றின் தாக்கம், சமூக, பொருளாதார நிலைகளிலும் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, மொழியிலும் பதிவாகியுள்ளது. அகராதிகளும், இந்த தாக்கங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த பின்னணியில், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்ப் பேரகராதியை திருத்தியும், புதுமைப்படுத்தியும் உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கு, பல்கலைக்கழக மானியக் குழு, நிதியுதவி அளித்துள்ளது.

இது குறித்து, பேரகராதித் திட்டத் தலைவர் ஜெயதேவன் கூறியதாவது:
புதுப்பிக்கப்படும் தமிழ் அகராதி, 12 தொகுதிகள் கொண்டதாக இருக்கும். ஆறு லட்சம் சொற்களுக்கு மேல் உள்ள, தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என, இரு மொழி அகராதியாகவும், வரலாற்று முறையில் பொருள் தருவதாகவும் அமைகிறது. கிராமங்கள் நகரங்களாகி வருகின்றன. கிராம மக்கள் வாழ்க்கை முறையில், தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இச்சூழலில், வட்டார மொழிகள் மறைந்து வருகின்றன. வட்டார மொழிகளைக் காக்க, அவற்றை அகராதியில் பதிவு செய்ய வேண்டிய கடமை, இன்றியமையாததாக உள்ளது. வட்டாரச் சொற்களின் தொகுப்புகளை வைத்திருக்கும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் அவற்றை அனுப்பி வைக்கலாம். அவை, அகராதியில் சேர்க்கப்படும். அகராதி திருத்தும் பணி, 2003ம் ஆண்டு, மே, 1ம் தேதி துவங்கியது. அகராதியின் மாதிரி பதிவு, தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அகராதியியல் வல்லுனர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில், அகராதி திருத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆதார நூல்கள்: தொல்காப்பிய அகராதி, சட்டச் சொல் அகராதி, அணிகலன்கள் அகராதி, சித்திரகவிக் களஞ்சியம், உரிச்சொல் நிகண்டு அகராதியும் மூலமும், ஆசிரிய நிகண்டு அகராதியும் மூலமும், பிங்கல நிகண்டு அகராதியும், மூலமும், பாட்டியல் களஞ்சியம் ஆகிய ஆதார நூல்கள் பேரகராதிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. அகராதியின், முன்வடிவ நிலை, 10 தொகுதிகள், 5,385 பக்கங்கள் உள்ளதாக தொகுக்கப்பட்டுள்ளன. 11வது தொகுதி பணி, முடியும் நிலையில் உள்ளது. பேரகராதி திட்டத்துக்கு, "ஆற்றல்சால் பல்கலைக்கழகம்' திட்டத்தின் கீழ், பல்கலைக்கழக மானியக் குழு, 40 லட்சம் ரூபாயும், தமிழக அரசு, 10 லட்சம் ரூபாயும், முனைவர் ஆ.கந்தையா, 25 ஆயிரம் ரூபாயும் நிதியளித்தனர். இப்பணிக்கான, கூடுதல் நிதியை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் வழங்கியதோடு, பணியாளர்களையும் கூடுதலாக நியமித்தார். இவ்வாறு ஜெயதேவன் கூறினார்.

1905ம் ஆண்டில் துவங்கி...: தமிழ் அகராதித் திட்டம், 1905ம் ஆண்டில் துவங்கினாலும், 1913ம் ஆண்டில் தான், செயல்படத் துவங்கியது. முதல் பதிப்பு, 1924ம் ஆண்டு அக்., 8ம் தேதி, 7,511 சொற்களைக் கொண்டு, 266 பக்கங்களாக வெளியானது. 1936ம் ஆண்டு மார்ச், 20ல், 2,430 சொற்கள் கொண்ட, ஆறாம் தொகுதியின் நிறைவுப் பகுதி வெளிவந்தது. இதற்கான செலவு, 4.10 லட்ச ரூபாய். விடுபட்ட சொற்களை உள்ளடக்கி, இணைப்புத் தொகுதியை வெளியிட, சென்னை பல்கலை நடவடிக்கை எடுத்தது. இப்பணி, 1937ல் துவங்கியது. பின் இணைப்பின் முதல் பகுதி, 160 பக்கங்களில், 4,897 சொற்களை கொண்டு, 1938லும், இரண்டாம் பகுதி, 160 பக்கங்களில், 5,150 சொற்களை கொண்டு, 1939லும், நிறைவுப் பகுதி, 103 பக்கங்களில், 3,310 சொற்களை கொண்டு, 1939ம் ஆண்டும் வெளிவந்தன. 1924ம் ஆண்டு முதல், 1939ம் ஆண்டு வரை, மொத்தம், 7, 934 பக்கங்களில், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 762 சொற்களைக் கொண்டு, ஏழு தொகுதிகளாக உருவாக்கப்பட்டன. இத்தொகுதிகள், 1956 மற்றும் 1982ம் ஆண்டுகளில் மறுபதிப்பு செய்யப்பட்டன.

நன்றி:

 

2.10.12

அரசு பள்ளிகளில் வெப்சைட் துவங்க உத்தரவு

நெல்லை யில் நடந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் வெப்சைட் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில் சென்னையில் கடந்த 27ம் தேதி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் காலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பிற்பகலில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஆலோ சனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முதன்மை கல்வி அதிகாரி கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அதிகாரி கள் டோரா (நெல்லை), ஜேக்கப் அருள் மாணிக்க ராஜ் (தென்காசி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 148 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண் டனர்.

இதில் அனைத்து அரசு பள்ளிகளிலும் வெப்சைட் துவங்க கேட்டு கொள்ளப்பட் டது. ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக பாஸ்வேர்டு ஐடியும் வழங்கப்பட்டது. இந்த வெப்சைட்டில் ஒவ்வொரு பள்ளியும் மாணவர்கள் எண்ணிக்கை, வகுப்பறை கள், பள்ளிகளின் வசதிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களை யும் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டது.தொடர்ந்து பள்ளிகளில் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்து வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. லேப்டாப், ஜாதிசான்றிதழ், இலவச சைக்கிள்கள் உள்ளிட்ட அரசு திட்டங்களில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டுப் பெறப்பட்டது.

நிறைவேற்றப்படாத திட்டங்களை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் வலியுறுத்தினர். பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிட பட்டியலும் கேட்டு பெறப்பட்டது. பிற்பகலில் 182 தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.

நன்றி:

நெல்லை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் திடீர் சஸ்பெண்ட்

நெல்லை மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் ஜாய் எபனேசர் கிட்சி திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளராக பணியாற்றியவர் ஜாய் எபனேசர் கிட்சி. இந்த பணியிடம் மாவட்ட கல்வி அலுவலர் அந்தஸ்தை கொண்டது. இவரை மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் இயக்குனர் தமிழ்செல்வி திடீரென சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து நெல்லை மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளராக (பொறுப்பு) பர்கிட் மாநகர் பள்ளி தலைமையாசிரியர் ராஜபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் சஸ்பெண்ட் விவகாரம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:

நெல்லையில் அக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு

முதல் பருவ தேர்வு விடுமுறைக்கு பின்னர் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் முதல் பருவ தேர்வு செப். 12ம் தேதி தொடங்கியது. 6 முதல் 10 வகுப்புகளுக்கு 20ம் தேதி தேர்வு முடிந்தது. பிளஸ் 2விற்கு 25ம்தேதி தேர்வு முடிந்தது. பெரும்பாலான பள்ளிகளில் தேர்வு முடிந்த பின்னரும் கூடுதலாக 2 நாள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன. முதல் முறையாக எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 காலாண்டு தேர்வுகள் பொது தேர்வாக நடத்தப்பட்டன.

இந்நிலையில் முதல் பருவ தேர்வு (காலாண்டு) முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் அக்.3ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே செப். 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. இதனால் அக்.4ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று தகவல் பரவியதால் ஆசிரியர்கள் இடையே குழப்பம் நிலவியது.

இதையடுத்து நெல்லையில் நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிரேஸி சுலோச்சனா ரத்னாவதி தலைமையில் பள்ளி திறக்கும் தேதியை முடிவு செய்வதற்காக தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அக்.4ம் தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பெரும்பாலான மெட்ரிகுலேசன் பள்ளிகள் 3ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நன்றி:


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்