தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.12.11

கடலூர்: ஜனவரி 4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தானே புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 4ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மீட்பு பணிகளை செய்வதற்கு வசதியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

பள்ளி மேலாண்மைக் குழு - அமைப்பு விதிகள்; அரசாணை

Constitution of School Management Committee

30.12.11

குமரி மாவட்ட தஇஆச நிர்வாகிகள் முதன்மைக் கல்வி அலுவலருடன் சந்திப்பு


கன்னியாகுமரி மாவட்ட தஇஆச நிர்வாகிகள் முதன்மைக் கல்வி அலுவலரைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின்  பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு முதன்மைக் கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டது.

கோரிக்கைகள்:
  • 1990, 1991, 1992ஆண்டுகளில் ஓப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களை அரசாணை 336ன்படி தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் கொண்டு பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வுநிலை சிறப்புநிலை போன்றவற்றில் உரிய திருத்தம் செய்து நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுகிறோம்.
  • ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறுவதில் உள்ள இடர்பாடுகளினால் தேர்வுநிலை சிறப்பு நிலை போன்ற கருத்துருக்கள் மீது உரிய ஆணை வழங்காமல் உள்ளது. பல்கலைக்கழகங்களில் நடத்தப்படுகின்ற பட்டங்களுக்கு உண்மைத்தன்மை அறியப்பட்டு பணிபதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிவதில் அரசு தேர்வுத்துறையால் காலதாமதம் ஏற்படுகிறது. இது பொருள் குறித்து தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் (மேல்நிலைக் கல்வி), சென்னை – 6 அவர்களின் செயல்முறைகள் (ந. க. எண். 91662/டபிள்யு2/இ2/2010 நாள். 29.9.2010) மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை – 6 அவர்களின் செயல்முறைகள் (ந. க. எண். 60039/சி5/சி19/2004 நாள். 05.11.2004)-இன் படி தேர்வுநிலை சிறப்பு நிலை போன்ற கருத்துருக்கள் மீது உரிய ஆணை வழங்க வேண்டுகிறோம்.
  • அரசு பள்ளி ஆசிரியர்களைப் போன்றே அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கூட்டு அமர்வின் மூலம் பணிவரன்முறை தகுதிகாண் பருவம், தேர்வு நிலை சிறப்பு நிலை போன்ற கருத்துருக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
  • கல்வி உரிமைச் சட்டம் – 2009இன் படி 6,7மற்றும் 8 வகுப்புகளுக்கு ஒவ்வொரு 35 மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் மாணவர் எண்ணிக்கை 35க்கு அதிகமாகும் போது இரண்டாவது ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் பணியிட நிர்ணயத்தின் போது கல்வி உரிமைச் சட்டம் – 2009இன் அடிப்படையில் ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்யப்படாமையால் இடைநிலை ஆசிரியர் பணியிடம் உபரி பணியிடமாக மாற்றப்பட்டுள்ளது. இது பொருள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாதம்தோறும் குறுவள மையங்களில் நடைபெறும் பயிற்சிகளில் கலந்துகொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் மறு பயிற்சியை அந்தந்த வட்டார வள மையங்களில் நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

27.12.11

இளமை குன்றாத ஜன கன மன... தேசிய கீதத்திற்கு இன்று வயது 100

ஜன..கன..மன என்று இந்திய தேசீய கீதம் நம்நாட்டில் முதன் முதலாக முழங்கியதன் 100-ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் ஆன போதும் இந்தியரை ஒற்றுமைப்படுத்த நாட்டின் தேசிய கீதம் முக்கியத்துவம் பெறுகிறது. 

நூற்றாண்டு கண்ட தேசிய கீதம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இந்திய தேசிய கீதமாக, நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன.கன.மன கீதம் அங்கீகரிக்கப்பட்டது. 52 வினாடிகளில் இப்பாடலை பாடி முடிக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு முன்னரே இந்திய தேசிய கீதம் , ஓங்கி ஒலிக்கப்பட்டுவிட்டது. முதன்முதலாக கடந்த 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போதே ஜன.கன .மன ஹதி. நாயக. ஜேயஹே... என துவங்கும் தேசிய கீதம் பாடப்பட்டது. மொழி, இனத்தால் வேறுபட்டாலும் ஒற்றுமையில் நாம் இந்தியர் அதனை இப்பாடல் வலியுறுத்துகிறது. எனவே நாம் அனைவரும் ஒற்றுமையால் இந்தியர்கள் என அடை‌‌யாளம் காண , நாட்டில் எந்த அரசு மற்றும் தனியார் விழாக்களில் இந்திய தேசிய கீதம் இன்றளவும் ஒலிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாட்டிற்கும் அந்நாட்டு தேசிய கீதம் , ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் எப்போதும் ஒலிக்கும் ‌மந்திரம் ஆகும். அது போல் இந்தியர்களாகிய நாம் நமது தேசப்பற்றை ‌காண்பிக்க ஜன..கன.மன தேசிய கீதம் , ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நன்றி:

26.12.11

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2012

RHL-2012

19.12.11

பணிநிரவல் - பணி நியமன நாள் அடிப்படையில் இளையவர் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்

Junior - Senior Deployment

மாணவர்களை சந்தோஷப்படுத்துமா முப்பருவ கல்வித்திட்டம்?

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

சமச்சீர் கல்வி திட்டத்தின் மூலம், தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை, சமச்சீர் பாடத்திட்டமாக மாற்றப்பட்டதால், அனைத்து மாணவர்களும் ஏற்றத்தாழ்வின்றி, ஒரே பாடங்களை படிக்க முடிகிறது. ஜூனில் துவங்கும் முதல் பாடத்திலிருந்து, பொதுத்தேர்வு வரையான கடைசி பாடம் வரை,
அரையாண்டிலிருந்து அனைத்துப் பாடங்களையும் தொடர்ந்து படிக்க வேண்டும். ஓராண்டுக்கான பெரிய புத்தகங்களையும், ஒவ்வொரு பாடத்திற்கான நான்கு நோட்டுக்களையும், தேர்வு முடியும் வரை சுமக்க வேண்டும்.ஒவ்வொரு தேர்வுக்கும் சராசரியாக 20 பாடம் என்றால் கூட, கடைசி ஒரு மாதத்தில் 100 பாடங்களை மனப்பாடம் செய்வது, அனைத்து மாணவர்களுக்கும் இயலாது. மேலும் பள்ளி வளாகத்தில் படிப்பதும், எழுதுவதும் தவிர, மாணவர்களுக்கு சிந்தனை செய்வதற்கு நேரமும், வாய்ப்பும் இல்லை. இது தான் இப்போதுள்ள தேர்வு முறை.

இப்போது அறிவித்துள்ள முப்பருவ முறை, மாணவர்களின் உற்சாகத்தை இருமடங்காக்கி உள்ளது. முதுகில் பையை சுமந்து கொண்டு, கஷ்டப்பட்டு செல்லும் மாணவர்களின் நிலையில் இருந்து பார்த்தால், இது சந்தோஷமான விஷயம். பாடச்சுமையும், எடையும் ஒரே நேரத்தில் குறைவதால், மனதின் பாரமும் சட்டென்று குறைந்து விடும். 

ஜூன் முதல் செப்., வரையும், அக்., முதல் டிச., வரையும், ஜன., முதல் ஏப்., வரையும் மூன்று பருவங்களாக பிரித்து, புதுப்புது பாடங்களை படிக்கும் போது, ஆர்வம் அதிகரிக்கும். வெறும் வார்த்தைகளை கவனிப்பதை விட, காட்சிகளாக, செயல்விளக்கமாக இருந்தால், எளிதாக பாடங்கள் மனதில் பதிந்துவிடும். ஆக மொத்தம்... மாணவர்களின் அக்கறையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட, முப்பருவ கல்வி திட்டம்... கல்வியாளர்களின் பார்வையில் எப்படி இருக்கிறது? இதோ... உங்கள் பார்வைக்கு இங்கே...

டபிள்யூ. தயா சியாமளா(முதல்வர், எஸ்.பி.ஓ.ஏ., மேல்நிலைப் பள்ளி, மதுரை)
இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் தினமும் படிக்கும் பழக்கத்தை வளர்க்க முடியும். மூன்று முறை தேர்வுகள் நடத்தப்படுவதால், ஒவ்வொரு தேர்வுக்கும் தனியாக படிக்க வேண்டும். இது மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். கணிதத்தை பொறுத்தவரை, இத்திட்டம் சரியாக வருமா என சொல்ல முடியாது. கணிதத்தின் அடிப்படை கோட்பாடுகளை தொடர்ந்து படித்தால் தான், மனதில் நிற்கும். எனவே கணிதத்தில் பாடத்தை வகுக்கும் போது, முந்தைய பாடங்களின் நினைவுபடுத்தல் இருக்க வேண்டும். இலக்கணப் பாடங்களையும் தொடர்ந்து படித்தால் மட்டுமே, மாணவர்கள் மொழிப்புலமை பெறமுடியும். 

எஸ்.வி.டி. ராஜன் (தலைமை யாசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எழுமலை ):
இம்முறை மாணவர்களை உற்சாகப்படுத்தும். ஆனால் ஆசிரியர்களுக்கு தான் வேலை கடினம். சில பள்ளிகளில் ஜன., துவக்கத்தில் இருந்து தான், மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வர். இனிமேல் அது இயலாது.

ஆசிரியர்கள் அந்தந்த பாடங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி கற்றுத் தந்தால், மாணவர்கள் மதிப்பெண் பெறும் விகிதமும் அதிகரிக்கும். கணிதம், இலக்கணம் இதெல்லாம் காலத்துக்கும் தொடரும் விஷயம். எங்களைப் போன்ற கிராமப்புற பள்ளி மாணவர்களை கையாளுபவர்களுக்கு, இந்த முறை பெரிய வரம் என்பேன். எங்கள் மாணவர்களும் அந்தந்த பாடங்களை மட்டும் படித்து, அதிக மதிப்பெண் பெறுவர்.

எஸ்.அப் துல் ரஹ்மான் (எட்டாம் வகுப்பு மாணவர், மதுரைக் கல்லூரி பள்ளி, மதுரை)
நான் நன்றாக படிக்கும் மாணவனாக இருந்தாலும், அனைத்து பாடங்களையும் திரும்ப திரும்ப படித்தால் தான் நினைவில் நிற்கிறது. முப்பருவ முறையாக இருந்தால், குறைந்த பாடங்களில் அதிக கவனம் செலுத்தலாம். மதிப்பெண்களும் அதிகமாக பெறலாம். மூடை போல புத்தக சுமையை தூக்க வேண்டாம். மாணவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.

எஸ். ரத்தினபாண்டியன் (தாளாளர், எம்.எஸ்.பி., பள்ளி, திண்டுக்கல்)
நடைமுறை கல்வியில் மனப்பாடமே பிரதானமாக உள்ளது. மாணவர்கள் புத்தகங்களை தூக்கி சுமப்பதால், உடல் பாதிப்பு, மன அழுத்தம் ஏற்படுகிறது. புதியமுறையில், வகுப்பறையில் மாணவர்களுக்கு அதிகம் நேரம் கிடைக்கும். ஆசிரியர்களும் செய்முறை, சோதனை, நேரடி
ஆய்வுகள் மூலம் மாணவர்களை சோதிக்க முடியும்; தனித்திறமை வெளிப்படும். ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்தால் மட்டுமே, திட்டத்தின் நோக்கம் மாணவர்களை சென்றடையும்.

கே.கலைவாணி (எட்டாம் வகுப்பு ஆசிரியை, குமரன் நடுநிலைப்பள்ளி, ராமநாதபுரம்)
தற்போதுள்ள முறையில் மாணவர்கள் அதிகமான பாடங்களை படிப்பதால் சோர்வடைகின்றனர். சாதாரணமாக வீட்டுப்பாடங்களை செய்வதில் திணறி, மறுநாள் பாடங்களை கவனிக்க முடியாத நிலையை நேரில் காணமுடிகிறது. பருவமுறையில் படிப்பதும், கற்றுத்தருவதும் எளிது. மாணவர்கள் புரிந்து கொண்டு, அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். தற்போதைய முறையில், சுமாரான மாணவர்களால் திருப்புதல் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. பருவமுறை தேர்வில் குறைந்த பாடங்களே இருப்பதால், கல்வியின் மீது ஆர்வத்தை அதிகரிக்க செய்யும்.

வி.சியாமளா(கல்வியாளர், ஆக்ஸ்போர்டு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை)
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, முப்பருவ முறை சரியாக இருக்கும். ஏனென்றால் ஒரே ஆசிரியரே அனைத்து பாடங்களையும் நடத்திவிடுவர். ஆறாம் வகுப்பிற்கு மேல் இத்திட்டத்தை அமல்படுத்தினால், மாணவர்களின் நினைவுத்திறன் குறைந்துவிடும். தற்போது மொபைல் போன் பயன்பாட்டால், உறவினர்களின் போன் எண்களை கூட நினைவில் வைப்பதில்லை. இதேநிலை தான் கல்வியிலும் ஏற்படும். படித்து முடித்தவுடன், புத்தகங்களை தூக்கி எறிந்துவிடுவர். அந்தப்பாடம் அப்படியே மறந்துவிடும். அறிவியல் துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு, இது பிரச்னையாகிவிடும். ஆசிரியர்களுக்கும் அனைத்து பாடங்களும் நினைவில் இருக்காது.

அறிவுத் திறனை வளர்க்கலாம்:(முதன்மை கல்வி அலுவலர், மதுரை): அரசு திட்டத்தில் இது சிறந்த அணுகுமுறை. புத்தக சுமை இல்லாததால், மாணவர்களின் மனஅழுத்தம் குறையும். இதனால் ஆசிரியர்களின் மனஅழுத்தமும் குறையும். வெறும் பாடங்களை மட்டும் படிக்காமல், பாடம் சார்ந்த விஷயங்களையும் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. சிந்திக்கும் திறனை இது மேம்படுத்தும். கேரளா, கர்நாடகாவில் இம்முறை செயல்படுகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் பாரபட்ச மின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கிறோம். இதனால் முப்பருவ முறையால், இளம் மாணவர்களின் அறிவுத்திறன் குறையாது. கிரேடிங் முறை மூலம், மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த முடியும். முப்பருவ தேர்வு முறையில், வெற்றி பெறுவதற்கான மதிப்பெண் பற்றி இன்னும் முழுமையாக கூறவில்லை. அரசு அறிவித்த பின் தான், வெற்றிபெறுவதற்கான மதிப்பெண்ணை அதிகரிக்க வேண்டுமா என்பதை பற்றி கூறமுடியும்.

 நன்றி:

 

கல்விக்கான வீடியோ இணையதளம் : YOU TUBE அறிமுகம்

வீடியோ பிரியர்களின் முடிசூடா மன்னனாக திகழ்வது யூடியூப் ஆகும். சர்வதேச மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற யூடியூப் நிறுவனம், பள்ளி குழந்தைகளுக்காக, கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டு‌ம் கொண்ட இணைய‌தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

"யூடியூப் ஃபார் ஸ்கூல்ஸ்" என்ற பெயரில் இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. 4.5 லட்சம் எண்ணிக்கையிலான கல்வி தொடர்பான வீடியோக்கள் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. பள்ளிகளில் ஸ்மார்‌ட்கிளாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுவரும் நிலையில், யூடியூப்பின் இந்த ‌சேவை ‌உற்ற பயனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
.

14.12.11

அடுத்த கல்வியாண்டில் இருந்து முப்பருவ கல்வித் திட்டம் அமல்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, நேற்று அரசாணை வெளியிடப் பட்டது.

நடைமுறையில் உள்ள தேர்வு முறையால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தருவதை தவிர்க்கவும், உடலியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், புதிய முறையிலான தேர்வு திட்டம் மற்றும் கல்வித் திட்டத்தை, கடந்த ஆக., 26ம் தேதி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் படி, "பாடப் புத்தகங்கள், மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு, மூன்று பருவங்களாக தனித்தனியே கற்பிக்கப் படும்; ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை, தொடர் மதிப்பீட்டு முறை மூலம் மதிப்பீடு செய்யப் படும்,' என, அறிவித்து இருந்தார். மேலும், புதிய முறையில் மாணவர்களின் இதர திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.


செயல் வடிவம் : 
இந்த அறிவிப்பிற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையில், கூறியிருப்பதாவது: 
சட்டசபையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த கல்வியாண்டில் (2012-13) இருந்து, 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என்று, பள்ளிக்கல்விக்கான மாநில பொது வாரிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக, பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த முடிவை அமல்படுத்துவதற்காக, இயக்குனர் அனுப்பியுள்ள பரிந்துரையை அரசு பரிசீலனை செய்து, வாரியத்தின் முடிவை அமல்படுத்த அரசு உத்தரவிடுகிறது.

முப்பருவ முறையால், வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் கற்பதற்கான நேரம் கிடைக்கும். புத்தகங்களில் படிப்பதை, செயல்பூர்வமாக, நேரடியாக சம்பந்தபட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடும் திட்டம், மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். மனப்பாடத்திற்கு அப்பாற்பட்டு, கல்வி சார்ந்த புரிதல்களுக்கு இத்திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.


ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர்கள் கலந்துரையாடல் செய்வதற்காக, போதிய நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்களின் செயல் திறன்களின் வளர்ச்சி, அவ்வப்போது மதிப்பீடு செய்யப்படும்.ஒரு பருவத்திற்கான சிறிய பகுதிகளை மட்டும் ஆசிரியர்கள், பொறுமையாக கற்பிக்கலாம். ஆசிரியர்கள் - மாணவர்கள் ஒருங்கிணைந்து, நண்பர்கள் போன்று வகுப்பறைகளில் செயல்படவும் வகுக்கும்.முப்பருவ கல்வி திட்டம் மற்றும் தொடர் மதிப்பீட்டு தேர்வு முறை, 2013-14ம் கல்வியாண்டு முதல், 9,10 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். 

இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


முப்பருவ முறை:
* முதல் பருவம் - ஜூன் முதல் செப்டம்பர் வரை
* இரண்டாம் பருவம் - அக்டோபர் முதல் டிசம்பர் வரை
* மூன்றாம் பருவம் - ஜனவரி முதல் ஏப்ரல் வரை

.

12.12.11

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க முதல்வர் உத்தரவு

Scholarship for Students

5.12.11

திறந்த நிலை பல்கலை பட்டங்கள் மத்திய அரசு தேர்வுகளுக்கு அனுமதி; மாநில அரசு தேர்வுகளுக்கு இல்லை

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் நேரடி பட்டம் பெறுவோர், மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு அனுமதிக்கப் படுகின்றனர். மாநில அரசு தேர்வுகளுக்கு, இவர்களை அனுமதிக்காதது, முரண்பாடாக உள்ளது.

சென்னைப் பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, அண்ணாமலைப் பல்கலை உள்ளிட்டவை, திறந்தநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கி வந்தன.
கடந்த, 2003 - 04 கல்வியாண்டில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை உருவாக்கப்பட்டது. தற்போது, மாநில அளவில் இந்த பல்கலை மட்டுமே, திறந்தநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக, 20 ஆயிரம் பேர், இப்பல்கலையின் நேரடி முறையில் பட்டம் பெறுகின்றனர். அதாவது, பிளஸ் 2 முடிக்காமல், 18 வயதை மட்டும் தகுதியாகக் கொண்டு, இளநிலைப் படிப்புகளில் பட்டம் பெறுகின்றனர்.
இந்த முறையில் பட்டம் பெறுவோர், அரசு தேர்வில் பங்கேற்பு மற்றும் பதவி உயர்வு பெற தடைவிதித்து, முந்தைய தி.மு.க., அரசு, 2009 ஆகஸ்டில் அரசாணை பிறப்பித்தது.

பட்டதாரிகள் குமுறல் : 
"மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும் தேர்வுகள், "ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்வுகளில் நாங்கள் பங்கேற்கும்போது, மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளில் பங்குபெற தடைவிதிக்கப் பட்டிருப்பது முரணான செயலாக உள்ளது,' என, இப்பட்டதாரிகள் குமுறுகின்றனர்.

மிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில், பி.ஏ., (வரலாறு) இறுதியாண்டு படிக்கும், புளியந்தோப்பைச் சேர்ந்த ஜிலானி கூறியதாவது
குடும்ப பொருளாதார சூழல் காரணமாக, ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலவில்லை. தற்போது பட்டப் படிப்பு பயில்வது மகிழ்ச்சி அளிக்கிறது. முந்தைய தி.மு.க., அரசு, எங்களுக்கு எதிராக பிறப்பித்த அரசாணையால், என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான பேர், அரசு தேர்வுகளில் பங்குபெறும் வாய்ப்பை இழந்து வருகிறோம்.

தேர்வுகளில், போட்டியாளர்களின் திறமையை மட்டுமே பார்த்தால் போதும். அவர்கள் எந்த முறையில் பட்டம் பெற்றனர் என்பதற்கு, அரசு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. அரசு பணிகளுக்கான தேர்வுகளில் எங்களையும் அனுமதிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு ஜிலானி கூறினார்.

அரசிடம் கோரிக்கை: 
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையின், பெயர் வெளியிட விரும்பாத, நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது
இந்தியாவில், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை உள்ளிட்ட, 14 பல்கலைகள், திறந்தநிலைப் பட்டப் படிப்புகளை வழங்குகின்றன. இவற்றில், பிளஸ் 2 முடிக்காமல், நேரடியாக இளநிலைப் பட்டம் பெறுவோரும், மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்கலாம் என, யு.சி.ஜி., விதிமுறைகளில் உள்ளது. இதை மத்திய அரசும் செயல்படுத்தி வருகிறது.
எனவே, எங்கள் பல்கலையின் பிற பட்டதாரிகளைப் போல, நேரடியாக பட்டம் பெறுவோரும், மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு அனுமதிக்க வேண்டும். இதற்கு தடையாக உள்ள அரசாணை எண், 107யை திரும்பப் பெற, தமிழக அரசிடம் விரைவில் கோரிக்கை விடுக்க உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:

4.12.11

மாவட்டக் கல்வி அலுவலர்கள் 69 பேர் மாற்றம்

தமிழகம் முழுவதும், 69 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிரடியாக மாற்றப்பட்டதோடு, மாவட்டக் கல்வி அலுவலர்களாக, 46 பேர், பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறையில், சமீபத்தில், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களும், இவர்களைத் தொடர்ந்து, 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 19 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 69 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 46 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ளார்.

நன்றி:

2.12.11

அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்

ஓய்வூதியம் பெறும், அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு, வாழ்நாள் முழுவதும், குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ஓய்வூதியதாரர்களின், திருமணமாகாத, விதவை, விவாகரத்தான மகளுக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழக அரசின் ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டுமென, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதை பரிசீலித்த அரசு, 25 வயதை கடந்த, குடும்ப ஓய்வூதியதாரர்களின் திருமணமாகாத, விதவை, விவாகரத்துப் பெற்ற மகள் ஆகியோருக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கான நிபந்தனைகள்:

* ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின், 25 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகளும், விதவை மற்றும் விவாகரத்தான மகள்களும், வாழ்நாள் முழுமைக்கும் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள்.

* ஒரு குடும்பத்தில், 25 வயதுக்கு குறைவான, குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுள்ள, குழந்தைகளின் தகுதி காலம் முடிந்த பின்போ, அந்த குடும்பத்தில், வேறு மாற்றுத் திறன் படைத்த குழந்தைகள் இல்லாவிட்டாலோ, 25 வயதுக்கு மேற்பட்ட மகள்கள் பெறலாம்.

* திருமணமோ, மறுமணமோ புரிந்தால், அவர்களின் ஓய்வூதியம் உடனே நிறுத்தப்படும். இதை உறுதி செய்யும் வகையில், ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும், திருமணம் அல்லது மறுமணம் புரியாமை சான்றிதழை வழங்க வேண்டும்.

* வயது அடிப்படையில் மூத்தவருக்கு முதலில், வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மூத்தவர் மறுமணம் புரிந்தாலோ, இறக்க நேரிட்டால் மட்டுமே, அடுத்த இளைய மகள், குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெறுவார்.

* மாத வருமானம், 2,550 ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் மட்டுமே, ஓய்வூதியம் பெறலாம். இது தொடர்பான வருமானச் சான்றிதழை ஆண்டுதோறும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு, நவ., 28ம் தேதியிலிருந்து, அமலுக்கு வந்துள்ளது.

.

பகுதி நேர கலை ஆசிரியர் நியமனம் - விதிமுறைகள் & அரசாணை

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி 6 முதல் 8ம் வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் பள்ளிகளில் அரசு உத்தரவுப்படி பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதற்கான விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த பணி நியமனம் முற்றிலுமாக தற்காலிகமானது. திட்ட காலம் முடியும் வரை மட்டுமே இந்த ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டியிருக்கும். எவ்வித முன்னறிவிப்பு இன்றி, எந்த நேரத்திலும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்வதற்கும் வழி வகை உள்ளது.

.

1.12.11

முதன்மைக் கல்வி அலுவலர் பணி மாறுதல் & பதவியுயர்வு விவரம் - அரசாணை

CEO Promotions, Transfers and Incharge

ஆசிரியர் பணிக்கான தகுதியாக மட்டுமே, "டிஇடி' தேர்வு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம்

"ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி, ஆசிரியர் பணிக்கான ஒரு தகுதியாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மற்றபடி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய அனைத்துப் பணியிடங்களுமே, எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம் செய்யப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, எழுத்துத் தேர்வில் பங்கேற்க முடியும்'' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குழப்பங்கள் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். தகுதித் தேர்வில் உள்ள பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் தீர்க்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது குறித்து, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:
ஆசிரியர் பணிக்கு வர விரும்பும் அனைவரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு, "நெட்' அல்லது, "ஸ்லெட்' எப்படி ஒரு தகுதித் தேர்வாக இருக்கிறதோ, அதேபோல் தான், "டிஇடி' தேர்வும். ஆசிரியர் பணிக்குச் செல்ல, இது ஒரு தகுதித் தேர்வு; அவ்வளவு தான். 

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். இத்தேர்வு ஆண்டுதோறும் நடக்கும். ஆசிரியர் பணிக்கு படித்த அனைவரும், இந்த தகுதித் தேர்வை எழுதலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, பணி நியமனம் நடைபெறாது. எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் இருக்கும்.

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு முடியும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படும். வழக்கு முடிவுக்கு வந்தபின், இடைநிலை ஆசிரியர்களை எந்த வகையில் நியமனம் செய்வது என்பது குறித்து, தமிழக அரசு முடிவு செய்யும். அதே நேரத்தில், அவர்கள் தகுதித் தேர்வில் பங்கேற்று, தகுதி ஏற்படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இல்லை.

பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகிய பணியிடங்கள், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படும். விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள முதுகலை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படுவார்கள். இனிமேல், பதிவுமூப்பு அடிப்படையில், எவ்வித பணி நியமனங்களும் இருக்காது. இந்த வகை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கு முன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

பட்டதாரி தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில், கணிதம்-அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என இருப்பதை மாற்றி, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் இருந்தே, 60 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதிலும் எவ்வித பிரச்னையும் இருக்காது.

இவ்வாறு, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

முதல் தேர்வு எப்போது?
மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. அதன்பின், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தேதியில் இத்தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர்.

நன்றி:






.

29.11.11

'நமது முழக்கம்' மின்னிதழ் - அக்டோபர் 2011

N-M Oct. 2011

25.11.11

உயர்த்தப்பட்ட பணிக்கொடை ஓய்வூதியர்கள் நேரில் பெறலாம்

உயர்த்தப்பட்ட பணிக்கொடையை, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், நேரில் பெற்றுக் கொள்ளலாம்' என, மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜூலை 1ம் தேதி மற்றும் அதற்கு பிறகு, பணியிலிருந்து ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள், அக்., 3ம் தேதியிட்ட உத்தரவுப்படி, அகவிலைப்படி, 51 சதவீதத்திலிருந்து, 58 சதவீதமாக உயர்த்தப்பட்டதால், பணிக்கொடை தொகையில் ஏற்படும் உயர்வை, அந்தந்த மாவட்டக் கருவூல அதிகாரிகள் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு, ஜூலை 1ம் தேதியிலிருந்து செப்., 30ம் தேதி வரையுள்ள காலத்தில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களில், எவருக்கெல்லாம் அரசு உத்தரவுக்கு முன்பு, ஓய்வூதிய கொடுப்பாணை வழங்கப்பட்டதோ, அவர்கள் நேரடியாக, திருத்திய பணிக்கொடை பலனை பெற்றுக் கொள்ளலாம். சம்பளம் வழங்கும் அதிகாரிகள், வழக்கமாக பணிக் கொடை கொடுப்பாணைகளுடன், பட்டியல் சமர்ப்பிக்க தேவையில்லை.


இவ்வாறு மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நன்றி:


21.11.11

1,651 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் உள்ள 1,651 இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் அவர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.

இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் நலன்) வீ.ராஜராஜேஸ்வரி கூறியது:
இந்தக் கலந்தாய்வுக்கு மொத்தம் 1,835 இடைநிலை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 90 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. 94 பேர் பதவி உயர்வு பெற விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, 1651 பேருக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன என்றார் அவர்.

வெள்ளிக்கிழமை (நவ.18) நடைபெற்ற கலந்தாய்வில் சுமார் 1,200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. சனிக்கிழமை (நவ.19) நடைபெற்ற கலந்தாய்வில் 447 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் வழங்கப்பட்டன.

நன்றி:

20.11.11

பள்ளிக் கல்வித் துறை - புதிய இணை இயக்குநர்கள் விவரம்

பள்ளிக் கல்வித் துறையில் அதிரடி மாற்றமாக 13 இணை இயக்குநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதத்தில் மாற்றம் செய்யப்பட்டனர்.அப்போது பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக டி.சபீதா இருந்தார். டி.எஸ்.ஸ்ரீதர் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, 13 இணை இயக்குநர்களை ஒரே நாளில் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வியாழக்கிழமை இரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தங்களது புதிய பொறுப்புகளில் இணை இயக்குநர்கள் வெள்ளிக்கிழமையே பொறுப்பேற்றுக் கொண்டனர். சிலர் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளனர்.

பணியிட மாறுதல் செய்யப்பட்ட இணை இயக்குநர்கள் விவரம் (முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):
  1. ராஜேஸ்வரி - இணை இயக்குநர் - பணியாளர் நலன் (இணை இயக்குநர் - மேல்நிலை).
  2. பழனிச்சாமி - இணை இயக்குநர், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (இணை இயக்குநர் - பணியாளர் நலன்).
  3. டி. உமா - கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம் (இணை இயக்குநர் - நாட்டு நலப்பணித் திட்டம்).
  4. ஏ.கருப்பசாமி - இணை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் (கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம்).
  5. சேதுராம வர்மா - கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம் (இணை இயக்குநர் - தொழிற்கல்வி).
  6. மோகன் ராஜ் - இணை இயக்குநர் - தொழிற் கல்வி (இணை இயக்குநர், முறைசாரா மற்றும் வயது வந்தோருக்கான கல்வி இயக்ககம்).
  7. சி.உஷா ராணி - இணை இயக்குநர் - நாட்டு நலப்பணித் திட்டம் (கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம்).
  8. பி.ஏ. நரேஷ் - இணை இயக்குநர் - இடைநிலை, அரசுத் தேர்வுகள் இயக்ககம் (இணை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்).
  9. ஆர்.பிச்சை - இணை இயக்குநர், நூலகத் துறை (இணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை).
  10. கே.தங்கமாரி - இணை இயக்குநர், அனைவருக்கும் கல்வித் திட்டம் (இணை இயக்குநர், நூலகத் துறை).
  11. எஸ்.உமா - இணை இயக்குநர் - மேல்நிலை (இணை இயக்குநர், அனைவருக்கும் கல்வி).
  12. வி.பாலமுருகன் - இணை இயக்குநர், முறைசாரா மற்றும் வயது வந்தோருக்கான கல்வி இயக்ககம் (இணை இயக்குநர் - இடைநிலை, அரசுத் தேர்வுகள் இயக்ககம்).
  13. என்.லதா - இணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை (இணை இயக்குநர், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்). 
நன்றி:

இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் : பள்ளி கல்வித் துறை உத்தரவு

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், இனிஷியலை, தமிழில் தான் எழுத வேண்டும்' என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை இயக்குனர் மணி பிறப்பித்துள்ள உத்தரவு:
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், தங்கள் இனிஷியல் மற்றும் பெயரை தமிழில் தான் எழுத வேண்டும். இதுபோல், அரசு விழா, சுற்றறிக்கைகள் அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும். இதை முதன்மை கல்வி அலுவலர்கள், தங்களது பகுதி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:

16.11.11

முப்பருவ, தொடர் மதிப்பீட்டு முறைகளுக்கு ஏற்றவாறு புதிய புத்தகங்கள்

அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ள முப்பருவ முறை, தொடர் மதிப்பீட்டு முறைக்கு ஏற்றவாறு புதிய புத்தகங்களை வடிவமைக்கும் பணியில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சமச்சீர் கல்வி புத்தகங்களில் பிழைகளை நீக்குவது, மேம்படுத்துவது தொடர்பான பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டன. இது தொடர்பான அறிக்கைகள் விரைவில் பாடப் புத்தகக் குழுக்களுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட சமச்சீர் பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்று கூறி, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை தள்ளிவைக்க அரசு முடிவு எடுத்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில், சமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு வரை உடனடியாக அமல்படுத்தப்பட்டது.

எனினும் மாணவர்களுக்குத் தரமான புத்தகங்களையும், கல்வியையும் வழங்குவதற்காக அடுத்த கல்வியாண்டு முதல் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்கும் வகையில் முப்பருவ முறை, அவர்களை முழுமையாக மதிப்பிடுவதற்காக தொடர் மதிப்பீட்டு முறை உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இதற்காக பிழைகளற்ற, புதிய திட்டங்களை உள்ளடக்கிய புத்தகங்களைத் தயாரிக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது:
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 23 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஏறத்தாழ 50 ஆசிரியர்களைக் கொண்ட இந்தக் குழுவினர் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை முழுவதுமாக வாசித்து அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகத்துக்கு அறிக்கைகள் அனுப்பினர்.

ஒவ்வொரு பாடத்துக்கும் ஏறத்தாழ 32 அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்துக்குமான 32 அறிக்கைகளை ஒரே அறிக்கையாக தொகுக்கும் பொறுப்பு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே அறிக்கையாகத் தயாரித்த பிறகு சம்பந்தப்பட்ட பாடநூல் குழுவின் தலைவருக்கு அந்த அறிக்கை அனுப்பப்படும். அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து அவரே இறுதி முடிவு எடுப்பார்.

தொடர் மதிப்பீட்டு முறை:
வரும் கல்வியாண்டில் 8-ம் வகுப்பு வரை தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் 9,10-ம் வகுப்புகளுக்கும் இது விரிவுபடுத்தப்படுகிறது.

பாடப் புத்தகங்களில் எங்கெங்கு உடனடி மதிப்பீடு மற்றும் மொத்த மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பாடப் புத்தகங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்திய தொடர் மதிப்பீட்டு முறையில் உள்ள குறைகளையும், அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பாகவும் இவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

முப்பருவ முறை: ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும் திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு அவற்றை முப்பருவ முறைக்கு ஏற்றவாறு மூன்றாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் எந்தளவு பாடங்களைச் சேர்க்கலாம் என்பது குறித்து ஒரு குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

பிழைகள் திருத்தப்பட்ட புத்தகங்கள் வந்த பிறகு அவை மூன்றாகப் பிரிக்கப்படும். மூன்றாகப் பிரிக்கப்படும் புத்தகத்தில் தொடர் மதிப்பீட்டு முறைக்குத் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.

இறுதியாக அவை சரிபார்க்கப்பட்ட பிறகு புத்தகங்களை அச்சிடுவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் சி.டி.க்கள் ஒப்படைக்கப்படும். 9,10 வகுப்புகளுக்கான புத்தகங்களை அச்சிடும் பணிகள் முதலில் தொடங்கி நடைபெறும். அதன்பிறகு பிற வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடப்படும்.

புத்தகங்கள் அச்சடித்து வந்த பிறகு, தொடர் மதிப்பீட்டு முறையில் எவ்வாறு கல்வி கற்பிப்பது என்பது குறித்து மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 
நன்றி:
 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - விதிமுறைகள்

6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்கும் வகையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தமிழக அரசின் சார்பில் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

  • மாணவர்களின் பெற்றோர்களை உள்ளடக்கிய பள்ளி நிர்வாகக் குழு பள்ளியின் வளர்சிக்கான மூன்றாண்டு திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
  • இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் நடைபெறும் மாணவர் சேர்க்கை, தேவைப்படும் கூடுதல் ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள், தேவைப்படும் நிதி போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • பள்ளி நிர்வாகக் குழுவின் தலைவர் அல்லது துணைத் தலைவர், அமைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்ட இந்தத் திட்ட அறிக்கை நிகழ் நிதியாண்டு முடிவதற்கு முன்னதாக உள்ளூர் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகக் குழுவின் கூடுதல் கடமைகள்:
பள்ளி நிர்வாகக் குழு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பணிகள் அதிகம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளல், அனைத்து குழந்தைகளும் தொடர்ந்து கல்வி பயில்வதை உறுதிப்படுத்துதல், ஒவ்வொரு ஆண்டும் கல்விச் செலவு தொடர்பான ரசீதுகளை நிதியாண்டு முடிந்த மூன்று மாதங்களுக்குள் உள்ளூர் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன், மன நலன் போன்ற விஷயங்களை பள்ளி நிர்வாகக் குழுவில் விவாதிக்க அந்தக் குழுவின் அமைப்பாளர் 3 ஆலோசகர்கள் வரை கூட்டத்துக்கு அழைக்கலாம்.

ஆசிரியர்களுக்கான தகுதிகள்: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதிகளை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தகுதியில்லாத ஆசிரியர்கள் சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் 5 ஆண்டுகளுக்குள் அந்தத் தகுதியைப் பெற வேண்டும்.


தனியார் பள்ளி ஆசிரியகளுக்கு இந்தச் சட்டத்தின் படி சம்பளம் வழங்க வேண்டும்.


ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நடத்தை விதிகளை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும், பள்ளி நிர்வாகக் குழுவுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.


பயிற்சிகளில் பங்கேற்பது, பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பு, ஒவ்வொரு குழந்தைக்குமான பதிவேடு போன்றவையும் ஆசிரியர்களுக்கான கூடுதல் கடமைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு பள்ளிக்கும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை மாநில அரசோ, உள்ளூர் நிர்வாகமோ அறிவிக்கும்.


மாநில அரசின் கடமைகள்: ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்குமாறு தொடக்கப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும். மூன்று கிலோமீட்டர் தொலைவுக்குள் இடைநிலைப் பள்ளியைத் தொடங்க வேண்டும். பள்ளிகளைத் தொடங்க வாய்ப்பில்லாத இடங்களில் போக்குவரத்துக்கும், விடுதிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.


அதிக மக்கள் தொகை உள்ள இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளை மாநில அரசு தொடங்க வேண்டும்.


எங்கெங்கு தேûவையோ அங்கெல்லாம் தொடக்கப் பள்ளிகளை (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) இடைநிலைப் பள்ளிகளாக (ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை) தரம் உயர்த்த வேண்டும்.


அதேபோல், உடல் ஊனமுற்ற குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை உள்ளூர் நிர்வாகமும், அரசும் செய்ய வேண்டும்.


இந்தச் சட்டத்தை அமல்படுத்தத் தேவையான நிதி தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுக்கு பரிந்துரையை வழங்க வேண்டும்.


அதேபோல், உள்ளூர் நிர்வாகம் அந்தப் பகுதியில் குழந்தைகளைக் கணக்கெடுக்க வேண்டும். குழந்தை பிறப்பு முதல் 14 வயது வரையும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 18 வயது வரையும் ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும்.


அந்த ஆவணங்களில் குழந்தையின் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் அல்லது காப்பாளரின் தொழில், குழந்தை பயிலும் வகுப்பு, ஏழை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவரா போன்ற விவரங்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும்.


வரையறுக்கப்படாத உள்ளூர் நிர்வாகம்:

தமிழக அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிமுறைகளில் உள்ளூர் நிர்வாகம் என்பது எது என்று விளக்கம் தரப்படாமல் விடப்பட்டுள்ளது.


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ளூர் மக்களுக்கு பள்ளி நிர்வாகத்தில் அதிக முக்கியத்துவம் தரும் வகையில் இருந்தது.


ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்ட வரைவு விதிகளில் உள்ளூர் கல்வி நிர்வாகத்திடம், அதாவது கல்வி அதிகாரிகளிடமே அனைத்து அதிகாரங்களும் வழங்கும் வகையில் இருந்தது. இதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளில் கல்வி நிர்வாகம் என்ற வார்த்தை நீக்கப்பட்டிருந்தாலும், உள்ளூர் நிர்வாகம் என்ற சொல் விளக்கப்படாமலேயே உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

நன்றி:

அதன் விவரம்:

குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்ட விதிகள் - அரசாணை

sedu_e_173_2011

பதவியுயர்வு கலந்தாய்வு முழு விவரம்

Promo Counselling

1,806 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு; விடுபட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உத்தரவு

தமிழகத்தில் 1,806 இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கிறது.

இதில் இடைநிலை ஆசிரியர்களில் இருந்து
  • தமிழாசிரியர்களாக 790 பேர்,
  • கணித பட்டதாரி ஆசிரியர்களாக 345 பேர்,
  • ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களாக 200,
  • அறிவியல் 83,
  • புவியியல் 3,
  • வரலாறு பட்டதாரி ஆசிரியர்களாக 385 பேர்
உட்பட மொத்தம் 1,806 பேர் பதவி உயர்வு பெறுகின்றனர்.

சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பி.எட் படித்து கடந்த கல்வி ஆண்டில் சீனியாரிட்டி பட்டியலில் இருந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பதவி உயர்வு அளித்து இக்கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்டதாகவும், விடுபட்ட ஆசிரியர்கள் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வி இணை இயக்குனர் தெரிவித்தார்.


இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களாக மாற்றப்படுவதால் 2011-12ம் கல்வி ஆண்டில் பதவி உயர்வில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை அவர்கள் பணியாற்றும் பள்ளியிலேயே பட்டதாரி/தமிழாசிரியர் பணியிடங்களாக மாற்றி பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) பழனிச்சாமியிடம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், மாநில துணைத் தலைவி வாசுகி, மாநில பொது செயலாளர் குமரேசன், விஜயகுமார் உட்பட பலர் வலியுறுத்தினர்.

நன்றி:

தனியார் பள்ளி கல்வி கட்டணம்அரசு செலுத்த பள்ளிகள் கேட்கலாமா?

வசதியற்ற குழந்தைகள் மூவருக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு, அரசிடம் தனியார் பள்ளிகள் கோரலாம் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கான சீருடை, புத்தகங்களை இலவசமாக வழங்கவும், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலத்தில், பாரத வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு, நான்கு மற்றும் ஆறாவது வகுப்பு படிப்பவர்கள் சத்யா, விஷ்ணு. இவர்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை என்றும், தொடர்ந்து இந்தப் பள்ளியில் படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், இவர்களின் தந்தை மோகன் என்பவர், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


கடலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஒன்றாவது வகுப்பில் லட்சுமணகுமார் என்கிற மாணவர் சேர்ந்துள்ளார். கல்விக் கட்டணம் செலுத்தாததால், வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து, எட்டாம் வகுப்பு வரை, லட்சுமணகுமாருக்கு இலவசமாக புத்தகங்கள், சீருடை வழங்கவும், கல்விக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கவும் உத்தரவிடக் கோரி, ஐகோர்ட்டில் அவனது தந்தை சிவகுமார் மனு தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாரி, "கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, 14 வயது வரை குழந்தைகள் அனைவரும், இலவசக் கல்வி பெற முடியும். அரசு உதவி பெறாத பள்ளிகள் என்றால், அங்கு ஆதி திராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்' என வாதாடினார்.

மனுக்களை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள். தங்கள் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை என கூறுகின்றனர். மனுதாரர்களின் குழந்தைகளை, பள்ளியில் தொடர்ந்து படிக்க நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கு இலவசமாக சீருடை மற்றும் புத்தகங்களை, இரண்டு நாட்களில் அரசு வழங்க வேண்டும்.

கல்விக் கட்டண நிர்ணயக் குழு பிறப்பித்த கட்டணத்தை, மனுதாரர்களால் செலுத்த முடியவில்லை. எனவே, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, கல்விக் கட்டணத்தை அரசிடம் செலுத்தக் கோரலாம். கோர்ட்டில் இருந்து உத்தரவு பெற்ற பின், கல்விக் கட்டணத்தை, அரசிடம் பள்ளி நிர்வாகம் கோரலாம். விசாரணை, வரும் 21 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி:

தமிழக அரசின் இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தின் விதிமுறைகள் வெளியீடு

தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, அருகில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட, நலிந்த பெற்றோரின் குழந்தைகள், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்கலாம். இவர்களுக்கான கட்டணத்தை, அரசே செலுத்தும்' என, இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த இலவச, கட்டாயக் கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

இது குறித்து, அரசு கெஜட்டில் கூறப்பட்டிருப்பதாவது:அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கடமைகள்: முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள், ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும். 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் பள்ளிகள், 3 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும்.இந்த விதிமுறைக்குள் பள்ளிகளை உருவாக்க முடியாவிட்டால், அரசோ அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளோ, குழந்தைகளுக்கு இலவசப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைத் துவங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆவணங்களை பராமரிக்க உத்தரவு: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், அவரவர்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளைப் பற்றிய ஆவணங்களை, முறையாகப் பராமரிக்க வேண்டும். தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகள், முறையாக, தொடர்ந்து மேல்நிலைக் கல்விக்குச் செல்வதைக் கண்காணிக்க வேண்டும்.மாணவர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் முகவரி, தொழில், குழந்தைகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், ஆவணங்களில் இடம்பெற வேண்டும்.

லாப நோக்கு கூடாது: பள்ளிகளை, தனியொரு நபராகவோ, கூட்டாகவோ சேர்ந்து, லாப நோக்கத்துடன் நடத்தக் கூடாது. பள்ளிக் கட்டடங்களை, கல்விப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அதிகாரிகள், எந்நேரத்திலும் பள்ளிகளைச் சோதனையிடலாம். அரசின் விதிமுறைகள்படி, பள்ளிகள் இயங்குகின்றனவா என்பதைக் கண்காணித்தும், அதன்படி நடக்காத போது, பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கலாம்.கட்டண விவகாரம்: கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிப்போம் என, பள்ளி நிர்வாகங்கள் உறுதி அளிக்க வேண்டும். பள்ளிகள், அரசு நிர்ணயித்துள்ள உள் கட்டமைப்பு வசதிகளைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.

பள்ளி நிர்வாகக் குழு: அனைத்துப் பள்ளிகளிலும், பள்ளி நிர்வாகக் குழுவை ஏற்படுத்த வேண்டும். குழுவில், 75 சதவீதம் பேர், மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களாக இருக்க வேண்டும். 25 சதவீத உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்களாக இருக்க வேண்டும். மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும்.இவ்வாறு, விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

துப்புரவு தொழிலாளி குழந்தைக்கு சலுகை: தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, அருகில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணங்களை, இரு தவணைகளாக, அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்குள் உள்ள நலிந்த பெற்றோரின் குழந்தைகள், இலவச, கட்டாயக் கல்வி பெறலாம். அதேபோல், அனாதைகள், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், திருநங்கை குழந்தைகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோரும், இலவசக் கட்டாயக் கல்வியைப் பெறும் உரிமைகளைப் பெறுகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்து உத்தரவு : இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு, ஏராளமான நிபந்தனைகளை, தமிழக அரசு விதித்துள்ளது.

இது குறித்து, சட்ட விதிமுறையில் அரசு கூறியிருப்பதாவது:

* இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2009) மற்றும், தமிழக அரசு கொண்டுவந்துள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2011) ஆகியவற்றில் தெரிவித்துள்ள விதிமுறைகளை, பள்ளிகள் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

* தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை (பிரீ-கேஜி மற்றும் முதல் வகுப்பு சேர்க்கையில்), அருகிலுள்ள, பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்.

* தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கான கட்டணங்களை, அரசிடம் இருந்து திரும்பப் பெற, தனி வங்கிக் கணக்கு துவக்க வேண்டும்.
* குழந்தைகளிடமோ, பெற்றோர்களிடமோ, குழந்தைகளின் பாதுகாவலர்களிடமோ எவ்வித நன்கொடை கட்டணத்தையும் பெறக் கூடாது.

* ஜாதி, மதம், இனங்களை காரணம் காட்டி, குழந்தைகளைச் சேர்க்க மறுக்கக் கூடாது.

* மாணவர்கள், தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை (எட்டாம் வகுப்பு), எக்காரணம் கொண்டும், அவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றக் கூடாது.

* மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தண்டனைகளை விதிக்கக் கூடாது.

* தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கக் கூடாது.

* தொடக்கக் கல்வியை முடிக்கும் அனைத்து மாணவர்களும், சான்றிதழைப் பெறும் உரிமையைப் பெறுகின்றனர்.

* அரசு நிர்ணயித்த பாடத் திட்டங்களை மட்டுமே நடத்த வேண்டும். அங்கீகாரம் பெறாத வகுப்புகளை, பள்ளி வளாகத்திற்குள் நடத்தக் கூடாது. பள்ளி கட்டடங்கள், மைதானம் ஆகியவை, கல்வி மற்றும் மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

* பள்ளியின் வரவு-செலவு தணிக்கை குறித்த அறிக்கைகளை, ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்ப வேண்டும். சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைபிடிக்காவிட்டால், பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் நடந்தால், 1 லட்ச ரூபாய் அபராதமும், அதன் பின் ஒவ்வொரு நாளும், 10 ஆயிரம் ரூபாய் வீதமும் அபராதம் விதிக்கப்படும்.

ஆசிரியர்களுக்கு அவகாசம்: ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெறாதவர்கள், விதிமுறைகள் வெளியிட்ட தேதியில் இருந்து, 5 ஆண்டுகளுக்குள், உரிய தகுதியைப் பெற வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தனி படிவம்: தனியார் பள்ளிகள், அங்கீகாரத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான தனி படிவத்தை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏழு பக்கங்கள் கொண்ட படிவத்தில், பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் முதல், ஆசிரியர்கள், பணியாளர்கள், அவர்களது சம்பளம் உட்பட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

நன்றி:

கல்விக்கான விதிமுறைகளை அறிவித்தது அரசு

இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் 8ம் வகுப்பு வரை கல்வி பெற உரிமை உள்ளது. தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்காக 25 சதவீத இடங்களை இலவசமாக ஒதுக்க வேண்டும். ஏழை மாணவர்கள் கல்வி பெற பெற்றோரின் கல்வி தகுதியை நிபந்தனையாக இருக்கக்கூடாது. மக்கள் வாழ்விடம் அமைந்துள்ள பகுதிகளில் ஒரு கி.மீ., தூரத்துக்குள் கல்வி வசதி பெற செய்வது அரசின் கடமையாக இருக்க வேண்டும் என மத்திய அரசின் கல்விச்சட்டத்துக்கு தமிழக அரசு விதிகள் வகுத்துள்ளது.

மேலும் ஆசிரியர்களுக்கான தகுதி குறித்த விதிமுறைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளில் செய்ய வேண்டிய உள்கட்டமைப்பு செய்யப்பட வேண்டிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. . விதிமுறைகளை அமல்படுத்தாத பள்ளிகளுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டும். தவறு தொடரும் பட்சத்தில் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:

ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சி லிங் சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.

முதுகலை ஆசிரியர்: மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், 2,612 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,305 பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பட்டதாரி ஆசிரியர்களில், உரிய கல்வித் தகுதி மற்றும் பணி மூப்பு உள்ளவர்கள், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர். இவர்களுக்கான கவுன்சிலிங், 18ம் தேதி, சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

பட்டதாரி ஆசிரியர்: ஆசிரியர் பயிற்றுனர்களாக இருப்பவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக (இரண்டும் ஒரே தகுதி கொண்ட பணியிடங்கள்) மாறுவதற்கான கவுன்சிலிங் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சிலிங் ஆகியவை, முறையே 19, 20 ஆகிய தேதிகளில், சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

மிகவும் காலதாமதம்: வழக்கமாக, கல்வியாண்டு துவக்கத்திலேயே ஆசிரியர் பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும். கற்பித்தலில் பாதிப்போ, தொய்வோ ஏற்படக் கூடாது என்பதற்காக, ஜூன் அல்லது ஜூலையில் கவுன்சிலிங் நடத்தப்படும். ஆனால், சமச்சீர் கல்வி பிரச்னையால், பள்ளி திறப்பது தள்ளி வைக்கப்பட்டதாலும், அதைத் தொடர்ந்து பாடப் புத்தகங்கள் வினியோகம் உள்ளிட்ட தொடர்ச்சியான பணிகள் இருந்ததாலும், நான்கு மாதங்களுக்குப் பின் இப்போது நடக்கிறது.

நன்றி:


14.11.11

சத்துணவில் மில்க் ஷேக்

பள்ளி மாணவர்களுக்கு இனி சத்துணவுடன் மில்க்‌ ஷேக் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 


சென்னையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ‌ஜெயலலிதா பல அதிரடி அறவிப்புகளை வெளியிட்டார். 


அதன்படி, ஆவின் நிறுவனத்துடன் உதவியுடன், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உடன் மாம்பழ மில்க் ஷேக் வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகள் ஓய்வபெறும் வயதுவரம்பு 45லிருந்து 18 ஆக குறைக்கப்படுதல், சித்ரா பவுர்ணமி நிகழ்ச்சி, சமய திருவிழாவாக கொண்டாடப்படும் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.


நன்றி:



குறுந்தகவல் சேவையின் (எஸ்எம்எஸ்) மூலம் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் அமல்

தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள குறுந்தகவல் சேவையின் (எஸ்எம்எஸ்) மூலம் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் அமல் செய்யப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர்அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய ஜெயலலிதா கூறியதாவது, எஸ்எம்எஸ் வருகை பதிவு திட்டம் மாநிலம் முழுவதும் அமலாவதன் மூலம், அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகை உறுதி செய்யப்படும் என்றும், இதன்மூலம், மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்று அவர் கூறினார். 

32 மாவட்டங்கள் தொடர்பான 43 வளர்ச்சித் திட்டங்கள் குறித்த அறிவிப்‌பையும் அவர் வெளியிட்டார். இதில், தூத்துக்கு‌டியில் புதிய மேம்பாலம், லாரி முனையம் உள்ளிட்ட 5 திட்டங்களும், ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன்பிடிக்க 1 நாள் அனுமதிக்குப் பதிலாக பலநாள் அனுமதி உள்ளிட்ட திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

அனைத்து வி.ஏ.ஓக்களுக்கும் பிரிண்டர் வசதியுடன் கூடிய லேப்டாப் வழங்கப்படும் என்றும். மாவட்ட கலெக்டர்களுக்கு சட்டம் தொடர்பான பிரச்னைகளுக்கு உதவ தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஜெயலலிதா மேலும் தெரிவித்தார்.

நன்றி:

9.11.11

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு ரத்து; தேர்வு துறை இயக்குனருக்கு நோட்டீஸ்

எட்டாம் வகுப்பு தனித்தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கலான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, இதுகுறித்து பதிலளிக்க பள்ளி கல்வி துறை இயக்குனருக்கு உத்தரவிட்டது.

மதுரை கே.புதூரை சேர்ந்த வி.பாண்டித்துரை தாக்கல் செய்த ரிட் மனு
வறுமையினால் எட்டாம் வகுப்பை பாதியில் முடித்தேன். ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றேன். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற வேண்டி விண்ணப்பித்தேன். வட்டார போக்குவரத்து அதிகாரி பத்தாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி தகுதியிருக்க வேண்டும் என தெரிவித்தார். நான் தேர்வு துறை துணை இயக்குனர் அலுவலகத்தை எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுத தொடர்பு கொண்டேன். தனித்தேர்வை 2010 அக்., 13ல் அரசு ரத்து செய்து விட்டதாக துணை இயக்குனர் தெரிவித்தார். தனித்தேர்வை ரத்து செய்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் எட்டாம் வகுப்பு தனித்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. 

மனுதாரர் சார்பில் வக்கீல்கள் மயில்வாகன ராஜேந்திரன், சந்தானம் ஆஜராயினர்.

நீதிபதி டி.ராஜா, "மனு குறித்து மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க பள்ளி கல்வி துறை இயக்குனர், தேர்வு துறை துணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப,'' உத்தரவிட்டார்.

நன்றி:



7.11.11

பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்த உத்தரவு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி, வினாடி- வினா, கருத்தரங்கம் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகள் நடத்த வேண்டும். இந்த கண்காட்சிகளில் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் பிரச்னைகள், அன்றாட வாழ்வில் கணிதப்பயன்பாடு, பேரிடர் மேலாண்மை ஆகிய தலைப்புகளில் கண்காட்சி பொருள்கள் இடம் பெற வேண்டும். 

துவக்க, நடுநிலைப்பள்ளிகள், கிராம கல்விக்குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் கண்காட்சியை கண்டுகளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நவம்பர் இரண்டாவது வாரத்தில் கல்வி மாவட்ட அளவில் நடத்தப்படும் கண்காட்சியில் பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை அறிவியல் ஆசிரியர்கள் கொண்ட குழு அமைத்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் வினாடி-வினா, சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள் நடத்த வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். தேர்வு செய்யப்படும் படைப்புகள் நவம்பர் இறுதியில் வருவாய் மாவட்ட அளவிலான கண்காட்சியில் இடம் பெற வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் படைப்புகள் மாநில கண்காட்சியில் இடம் பெற வேண்டும். 

இது குறித்து அனைத்து முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நன்றி:



SSA - பயிற்சி படிகள் தொடர்பாக மாநில திட்ட இயக்குநரின் கடிதம்

SSA Training TA

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்