தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.6.12

பள்ளி மாணவர்களுக்கு கணிதம் இனி, இனிக்கும்: புதிய வழிகாட்டுகிறார் கோவை ஆசிரியர்

"கணக்கு பாடமா... ஆளை விடுங்க...' என, ஓட்டம் பிடிக்கும் மாணவரா நீங்கள்? பரவாயில்லை. இதற்கு காரணம் நீங்கள் அல்ல. கணக்கு பாடம் கற்பிக்கும் உங்கள் ஆசிரியர்தான்'' என்கிறார், கோவையைச் சேர்ந்த கணித ஆசிரியர் உமாதாணு. கணித பாடத்தை எளிய முறையில் கற்பிக்க உதவும் சில வழிமுறைகளை வகுத்துள்ள இவர், தமிழக பள்ளிகளில் இவற்றை கற்பிக்க வாய்ப்பு கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் உமாதாணு. ஓய்வு பெற்ற கணித ஆசிரியரான இவர், "மனிதநேய பேரவை' எனும் அமைப்பின் பொதுச் செயலராக இருந்து, சமுதாய சேவைகள் புரிந்து வருகிறார். "இன்றைய பள்ளி ஆசிரியர்கள் கணித பாடத்தை முறையாக கற்பிப்பதில்லை' என ஆதங்கப்படும் இவர், தனது, 35 ஆண்டு கால அனுபவத்தை வீணாக்காமல், கணித பாடங்களை கற்பிக்க உதவும் சில எளிய வழிமுறைகளை வடிவமைத்துள்ளார்.

இது குறித்து உமாதாணு கூறியதாவது: அனைத்து பள்ளி மாணவர்களும், "ஜியாமெட்ரிக் பாக்ஸ்' பயன்படுத்துகின்றனர். அதில் முக்கோண வடிவில் உள்ள "Set Square' (மூலை மட்டங்கள்) எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியாது. ஏனென்றால், இது குறித்து ஆசிரியர்கள் விளக்குவதில்லை. இந்த மூலை மட்டங்களை பயன்படுத்தி, நுணுக்கமான பல கோணங்களை (Angle) அமைப்பது எப்படி என்பதை ஆய்வு செய்து, தீர்வு கண்டுள்ளேன். இன்ஜினியரிங், பாலிடெக்னிக் படிப்புகளில் சேரும்போது மூலை மட்டங்களின் உபயோகத்தை தவிர்க்க முடியாது. பள்ளியில் இது குறித்து எதுவுமே தெரியாத மாணவர்கள், கல்லூரியில்தான் முதல் முறையாக தெரிந்து கொள்கின்றனர். பள்ளி படிப்பின்போதே தெரிந்து கொண்டால் கணித பாடம் எளிதாகி விடும். உருளை (Cylinder), கூம்பு (Cone), கோளம் (Sphere), அரைக்கோளம் (Hemisphere) ஆகியவற்றின் கன அளவு, வளைபரப்பு, மொத்தப்பரப்பு ஆகியவற்றை கணக்கிட பயன்படும் சூத்திரங்களை எளிதாக புரிந்து கொள்ள வசதியாக, குறைந்த செலவில் சில உபகரணங்களை கண்டுபிடித்துள்ளேன். இதை உருவாக்க வெறும், 10 ரூபாய் போதும். இதை பயன்படுத்தி படித்தால், சூத்திரங்களை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. இந்த உபகரணங்களை மனக்கண்ணில் கொண்டு வந்தாலே, சூத்திரம் நினைவுக்கு வந்து விடும்.

அல்ஜிப்ரா பகுதியில் இருபடி கோவைகளை காரணிப்படுத்துதல், கணித பாடத்தில் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. ஒன்பதாம் வகுப்பில் காரணிப்படுத்துதல் பாடம் துவங்குகிறது. எவ்வளவு பெரிய எண்களாக இருந்தாலும், அதன் காரணிகளை கண்டுபிடிக்க சுலபமான முறையை உருவாக்கியுள்ளேன். உதாரணத்துக்கு, இரு எண்களின் பெருக்குத் தொகை, 4032ம் கூட்டுத் தொகை, 16ம் இருந்தால், இதன் காரணிகள் எவை? என்ற கேள்வி தேர்வில் கேட்கப்பட்டால், தற்போது கற்றுத்தரப்படும் முறையின்படி விடையளிக்க அதிக நேரம் தேவை. அதற்கு பதிலாக, மிகச்சிறிய எண்ணால் ஒரு பக்கம் வகுத்தும், அடுத்த பக்கம் பெருக்கியும் வந்தால், இரண்டே நிமிடத்தில் விடை கிடைத்து விடும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணிகளை எளிதாக கண்டுபிடிக்கும் இந்த முறையை தெரிந்து கொண்டால், சமச்சீர் கல்வி கணித பாடத்தை மட்டுமல்ல, வேலைக்கான போட்டித் தேர்வுகளையும் எளிதாக கையாள முடியும். இவ்வாறு, உமாதாணு கூறினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி மாவட்டங்களிலும் ஒரு நாள் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்து, பட்டதாரி கணித ஆசிரியர்களுக்கு கருத்தாளராக இருந்து பயிற்சி அளிக்க உமாதாணு தயாராக உள்ளார். மாவட்டத்துக்கு மூன்று கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களின் வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள கணித ஆசிரியர்களுக்கு இந்த எளியமுறை வழிமுறைகளை சென்றடைய செய்யலாம் என்பதே இவரது திட்டம். தமிழக முதல்வர் அனுமதித்தால் மாணவர்களின் கணித திறன் மேம்படும்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்