தேர்தல் பணியில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தும், தபால் ஓட்டுகளை போட, 1 லட்சத்து, 46 ஆயிரம் பேர் தான் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். அதுவும், நகர்ப்புறங்களில், தபால் ஓட்டுப் போட, அரசு ஊழியர்களிடையே ஆர்வமில்லை. கிராமப்புற தொகுதிகளில் தான், அதிகளவு ஊழியர்கள், தபால் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில், 2 லட்சத்து, 88 ஆயிரம் அரசு ஊழியர்கள், 66 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பல ஆயிரம் போலீசார், தேர்தல் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டிருந்ததால், இவர்களுக்கென, அவர்கள் வசிக்கும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தபால் ஓட்டுப் போட, அந்தந்த துறைகள் மூலம், ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.இது தவிர, ராணுவத்தில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தபால் ஓட்டுப் போட, ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. இதில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், போலீசார், முன்னாள் ராணுவத்தினர் என, மொத்தம், 1 லட்சத்து, 46 ஆயிரத்து, 255 பேர் தான் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர்.அதேபோல, ராணுவ வீரர்களில், 65 ஆயிரத்து, 274 பேர் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். தடுப்பு காவல் கைதிகளில், 51 பேர், தமிழகம் முழுவதும் தபால் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். இதன்படி, மொத்தம், 2 லட்சத்து, 11 ஆயிரத்து, 580 தபால் ஓட்டுச்சீட்டுகள் இந்த தேர்தலில் வழங்கப்பட்டுள்ளன.
இதில், சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகர்ப்பகுதிகளில், தபால் ஓட்டுப் போட, அரசு ஊழியர்கள் ஆர்வம் காட்டவில்லை. சென்னையில் அதிகபட்சமாக, கொளத்தூர் தொகுதியில் தான், 574 பேர் தபால் ஓட்டுச்சீட்டுகளை பெற்றுள்ளனர். மற்ற தொகுதிகளில், மிக குறைவான அளவிலேயே பெற்றுள்ளனர்.அதிகபட்சமாக, தஞ்சாவூர் தொகுதியில், 1,714 பேர், ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, பாளையங்கோட்டை தொகுதியில், 1,690 பேர் பெற்றுள்ளனர். தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியான சோழிங்கநல்லூரில், வெறும், 81 பேர் தான், தபால் ஓட்டுப் போட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில், ஒன்றில் கூட, ஒருவர் கூட தபால் ஓட்டுச் சீட்டு பெறவில்லை. இங்குள்ள ஊழியர்களுக்கு சரியான முறையில் ஓட்டுச்சீட்டுகள் வினியோகிக்கப்படவில்லையா அல்லது ஒட்டுமொத்த ஊழியர்களும் தபால் ஓட்டுகளை புறக்கணித்துள்ளனரா என தெரியவில்லை.ராணுவ வீரர்களை பொறுத்தவரை, வேலூர் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக, 12 ஆயிரத்து, 498 பேர், தபால் ஓட்டுப் போட முன்வந்துள்ளனர். இதில், கே.வி.குப்பம் தொகுதியில், 2,299 பேரும், அணைக்கட்டு தொகுதியில், 1,973 பேரும், காட்பாடி தொகுதியில், 1,961 பேரும் தபால் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். ராணுவ வீரர்களில் மிகக் குறைந்த அளவாக திருப்போரூர் தொகுதியில், ஏழு பேர் மட்டும் பெற்றுள்ளனர்.அரசு ஊழியர்களில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டத்தில், 8,117 பேர் ஓட்டுச் சீட்டு பெற்றுள்ளனர். பொதுவாக, தேர்தல்களில், ஒரு தரப்புக்கு சாதகமாகவோ, எதிராகவோ அலை வீசாத நிலையில், கடும் போட்டி நிலவினால், தபால் ஓட்டுகள், அதிக தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன. பெரும்பாலான தொகுதிகளில், தபால் ஓட்டுகள் தான் முதலில் எண்ணப்படும். சில தொகுதிகளில், கடைசியாக எண்ணப்படுவதுண்டு.
கடந்த, 2006 தேர்தலில், பா.ம.க., வேட்பாளர் வேல்முருகனை விட, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன், இறுதிச் சுற்றில், 16 ஓட்டுகள் முன்னணி பெற்றிருந்தார். அ.தி.மு.க., தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தனர். ஆனால், கடைசியாக தபால் ஓட்டு எண்ணப்பட்டதில், ராஜேந்திரனுக்கு, 33 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. பா.ம.க., வேல்முருகனுக்கு, 197 ஓட்டுகள் கிடைத்தது. இதனால், 148 ஓட்டு வித்தியாசத்தில், வேல்முருகன் வெற்றி பெற்றார்.
இதேபோல, பொங்கலூர் தொகுதியில், அ.தி.மு.க., அமைச்சர் தாமோதரன், 57 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மதுரை கிழக்கு தொகுதியில், ஓட்டு எண்ணிக்கையின் போது, இறுதிச் சுற்றில் ம.தி.மு.க., வேட்பாளர் பூமிநாதன், 80 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். தபால் ஓட்டுகளை எண்ணியதில், மார்க்சிஸ்ட் வேட்பாளர் நன்மாறனுக்கு, 157 ஓட்டுகளும், பூமிநாதனுக்கு, 77 ஓட்டுகளும் கிடைத்தது. நன்மாறன் வெற்றி பெற்றார்.இந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதால், வெற்றி பெறும் வேட்பாளர், குறைந்த ஓட்டு வித்தியாசமே பெற வாய்ப்புள்ளது. எனவே, இந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் மிகவும் முக்கியத்துவம் பெறும். ஆனால், தபால் ஓட்டுப் போட தகுதியுள்ள அரசு ஊழியர்களில் பாதியளவுக்கும் மேலானவர்கள், ஓட்டுச்சீட்டுகளையே பெறாததால், யாருக்கு பலன் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நன்றி: