சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனம் தொடர்பான விதிமுறைகளை வகுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்பாளையில் உள்ள செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை தேவசாந்தினி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், எனக்கு பின்பு பணியில் சேர்ந்தவர் தலைமை ஆசிரியராக பணி உயர்வு பெற்றுள்ளார். எனவே, எனது பணி மூப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரினார்.
நீதிபதிகள் எலிப் தர்மாராவ், நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ள அவற்றுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமை காரணமாக, இத்தகைய நிறுவனங்கள் நிர்வாகத்தைத் தவறாக நடத்த வேண்டும் என்பதல்ல. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனம் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பணி நியமனங்கள் தொடர்பாக தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று டி.எம்.ஏ. பாய் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
எனினும், மேல்பாளை செயின்ட் மேரீஸ் பள்ளி உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றவில்லை. அதனால், சிறுபான்மையினர் நலனுக்காக உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் சிறுபான்மையின ஆசிரியரின் கோரிக்கையைக் கூட பரிசீலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் வேறொரு ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எனவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனம், பணிகள், பணி உயர்வு, ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பான விதிமுறைகளை வகுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்பாளை செயின்ட் மேரீஸ் பள்ளி ஆசிரியை தேவசாந்தினிக்கு நாகர்கோயில் கோட்டார் ரோமன் கத்தோலிக்க திருச்சபை வரம்புக்குள் உள்ள 109 பள்ளிகளில் ஏதேனும் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியை அல்லது உதவி தலைமை ஆசிரியை பணியை வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: