தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.11.12

தஇஆச மாநில செயற்குழு - முடிவுகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீப்பர் மேல்நிலைப்பள்ளியில் 25.11.2012 பகல் 2 மணிக்கு நடைபெற்றது.

மாநிலத் தலைவர் கயத்தாறு தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் அருணகிரியார், தலைமையிடச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ் சங்க இணையதள செயல்பாடுகள் பற்றி விளக்கினார். மாநில பொதுச் செயலாளர் இசக்கியப்பன் தீர்மானங்களை முனமொழிந்தார். மாநில பொருளாளர் மதலைமுத்து நன்றி கூறினார்.

செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. உறுப்பினர் ஆண்டு சந்தாவை ரூ. 100லிருந்து 200 ஆக உயர்த்துதல்.

2. நமது முழக்கம் மின்னிதழை மாத இதழாக வெளியிட நடவடிக்கை எடுத்தல்.

3. அடுத்த செயற்குழுவில் விடுபட்ட இணை பொறுப்பாளர்களை தேர்வு செய்தல்.

4. 01.06.2006க்கு முன்பிருந்து தமிழ்நாட்டிலுள்ள அரசு /அரசு உதவி பெறும் உயர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 18,000 இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்திட இச்செயற்குழு மூலம் தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.

5. இடைநிலை ஆசிரியர்களின் சாதாரண நிலை ஊதியத்தை ஊதியக் கட்டு 1லிருந்து 2க்கு மாற்றி 9,300 – 34,800, தரஊதியம் 4,200 என அறிவித்திடவும் தேர்வுநிலை சிறப்புநிலைக்கு மத்திய அரசுபோல் ஊதிய விகிதம் தொடர்ந்து வழங்கிடவும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றது.

6. ஆசிரியர் பட்டய படிப்பு மேல்நிலைக் கல்விக்கு இணையானது என்ற சென்னை உயர்நீதி மன்ற ஆணையை அமல்படுத்தி பதவி உயர்வு வழங்கிட பள்ளிக் கல்வி இயக்குனரை இச்செயற்குழு மூலம் கேட்டுக்கொள்கின்றோம்.

7. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து மாநில பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.

8. தன் பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்திட மத்திய, மாநில அரசுகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.

9. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் ஏற்படும் சிக்கல்களை களைந்திட பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இணைந்த கலந்தாய்வு கருத்தரங்கை நடத்திட பள்ளிக்கல்வித் துறையை கேட்டுக்கொள்கின்றோம்.

10. பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லா பணியிடங்களையும் மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லா பணியிடங்களையும் நிரப்பிட தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.
.

26.11.12

தஇஆச புதிய மாநில நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தேர்தல் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீப்பர் மேல்நிலைப்பள்ளியில் 25.11.2012 காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. புதிய மாநில நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் 25வது ஆண்டின் மாநில பொதுக்குழு திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீப்பர் மேல்நிலைப்பள்ளியில் 25.11.2012 காலை 11.00 மணிக்கு மாநிலத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலர் க. இசக்கியப்பன், தலைமையிடச் செயலர் சோமசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பொதுச் செயலாளர் குமரேசன் தஇஆச மரபுப் படி புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை முன்மொழிந்தார். தேர்தல் ஆணையாளர்களை அறிமுகம் செய்து மாநில பொருளாளர் உதயசூரியன் உரையாற்றினார். தேர்தல் ஆணையாளராக தூத்துக்குடி நெடுஞ்செழியனும் இணை ஆணையாளராக குமரி பாஸியும் பணியாற்றினர். புதிய மாநில நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநிலத் தலைவர்:  திரு. கயத்தாறு, சென்னை.

பொதுச் செயலாளர்:  திரு. இசக்கியப்பன், திருநெல்வேலி.

பொருளாளார்:  திரு. மதலை முத்து, புதுக்கோட்டை.

அமைப்புச் செயலாளர்:  திரு. அருணகிரியார், திருச்சி.

தலைமையிடச் செயலாளர்:  திரு. வெங்கடேசன், காஞ்சிபுரம்

துணைப் பொதுச் செயலாளர்: திரு. எட்வின் பிரகாஷ், கன்னியாகுமரி 

தணிக்கையாளர்:  திரு. பாபு, நெல்லை.

மாநிலச் செயலாளர்(பெண்):  திருமதி.ஜெயராணி, காஞ்சிபுரம். 

துணைத்தலைவர்கள்:  1. திரு. பாக்கியராஜ், வேலூர். 2. திரு.நவநீதசுந்தர், திருவண்ணாமலை. 

இணைச்செயலாளர்கள்: 1. திரு. அப்பாதுரை, விருதுநகர். 2.  திரு. ஸ்டீபன், விழுப்புரம். 

பின்னர் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி முன்னாள் பொறுப்பாளர்கள் உரையாற்றினர். மாவட்டம் சார்பில் நெல்லை ராஜமார்த்தாண்டம், குமரி ஹெர்பர்ட் ராஜாசிங், விருதுநகர் முருகேசன் மற்றும் தூத்துக்குடி சுந்தர் ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதிய பொறுப்பாளர்கள் ஏற்புரை ஆற்றினர். 
.

23.11.12

தஇஆச மாநிலத் தேர்தல் 2012

நமது அமைப்பின் மாநில தேர்தல் வருகின்ற 25.11.2012 அன்று திருச்சியில் நடைபெறவுள்ளது.

 நாள்: 25-11-2012

நேரம்: காலை 10.00 மணி

இடம்: பிஷப் ஹீப்பர் மேல் நிலைப் பள்ளி,தெப்பகுளம் திருச்சி.


தேர்தல் ஆணையாளர்: திரு. எஸ். நெடுஞ்செழியன்

இணை ஆணையாளர்: திரு. ஜி. பாஸி


வேட்பு மனு கட்டணம்: ரூ. 200/-


தேர்வு செய்ய வேண்டிய பொறுப்புகள்:
  • மாநிலத் தலைவர்
  • பொதுச் செயலாளர்
  • பொருளாளர்
  • அமைப்புச் செயலாளர்
  • தலைமையிடச் செயலாளர்
  • துணைப் பொதுச் செயலாளர்

இணை பொறுப்புகள்:
  • மாநிலச் செயலாளர் (பெண்) - 1
  • தணிக்கையாளர் - 1
  • மண்டலத் துணைத் தலைவர்கள் - 5 
  • மண்டல இணைச் செயலாளர்கள் - 5

 தேர்தலில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும், கல்வி மாவட்ட செயலாளர்களும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் தவறாது பங்கேற்று மாநில தேர்தல் சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு தந்திட அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்புடன்,

ஜி. குமார், மாநிலத் தலைவர்.
மா. குமரேசன், மாநில பொதுச் செயலாளர்.
த. உதயசூரியன், மாநிலப் பொருளாளர்.
.

21.11.12

2013ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

வரும் 2013ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • ஆங்கில புத்தாண்டு: ஜன.1 செவ்வாய்
  • பொங்கல்: ஜன.14 திங்கள்
  • திருவள்ளுவர் தினம்: ஜன.15 செவ்வாய்
  • உழவர் திருநாள்: ஜன.16 புதன்
  • மிலாது நபி: ஜன.25 வெள்ளி
  • குடியரசு தினம்: ஜன.26 சனி
  • புனித வெள்ளி: மார்ச் 29 வெள்ளி
  • ஆண்டு வங்கிக்கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்): ஏப்.1 திங்கள்
  • தெலுங்கு புத்தாண்டு: ஏப்.11 வியாழன்
  • தமிழ் புத்தாண்டு/அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்.14 ஞாயிறு
  • மகாவீர் ஜெயந்தி: ஏப்.24 புதன்
  • மே தினம்: மே 1 புதன்
  • ரம்ஜான்: ஆக.9 வெள்ளி
  • சுதந்திர தினம்: ஆக.15 வியாழன்
  • கிருஷ்ண ஜெயந்தி: ஆக.28 புதன்
  • விநாயகர் சதுர்த்தி: செப்.9 திங்கள்
  • அரையாண்டு வங்கி கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்): செப்.30 திங்கள்
  • காந்தி ஜெயந்தி: அக்.2 புதன்
  • ஆயுதபூஜை: அக்.13 ஞாயிறு
  • விஜயதசமி: அக்.14 திங்கள்
  • பக்ரீத்: அக்.16 புதன்
  • தீபாவளி: நவ.2 சனி
  • மொகரம்: நவ.14 வியாழன்
  • கிறிஸ்துமஸ்: டிச.25 புதன்

மொத்தம், 24 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் விடுமுறை, வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், அரசு தெரிவித்துள்ளது.

அரசாணை(நிலை) எண்:981 பொது(பல்வகை)த் துறை  நாள்: 19-11-2012
.

13.11.12

D.T.Ed. கல்வி தகுதி +2-க்கு இணையானது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

D.T.Ed., பட்டயக் கல்வி தகுதி +2 கல்வித் தகுதிக்கு இணையானது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற 10, +2, +3 என்ற முறையில்  பயின்று இருக்கவேண்டும் என்று கூறி 10, D.T.Ed., +3 என்ற முறையில் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த சந்திரசேகரன், உமை ஈஸ்வரி, ரமேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து தமது தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
"D.T.Ed. பட்டயக் கல்வி, +2 கல்வித் தகுதிக்கு இணையானது. 01.01.2012ல் தயாரிக்கப்பட்ட பணிமூப்பு பட்டியலின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவேண்டும்".

இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது.

தீர்ப்பு முழு விவரம்:
TTC Egual to HSC

11.11.12

கல்வி உரிமை சட்டத்திற்கான காலக்கெடு நீட்டிப்பா?

கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடு, 2013 மார்ச் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாது என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு கூறினார்.

மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின், 60வது கூட்டம், டில்லியில் நடைபெற்றது. மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்ற, இந்தக் கூட்டத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு கூறியதாவது:

ஆறு முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி அளிப்பதை, அடிப்படை உரிமையாக்கி கொண்டு வரப்பட்டது, "குழந்தைகளுக்கான, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009 இந்த கல்வி உரிமைச் சட்டத்தை, அனைத்து மாநிலங்களும், 2013 மார்ச் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை அமல்படுத்த, சில மாநிலங்கள் தயார் நிலையில் இல்லை என, தெரிவித்தாலும், காலக்கெடு நீட்டிக்கப்படாது. இந்த விஷயத்தில், சட்டத்தை தளர்த்தும் பேச்சுக்கே இடமில்லை.சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும், "கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது' என, வலியுறுத்தி வருகின்றனர்;

அப்படி நீட்டித்தால், சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது மேலும் காலதாமதமாகும் என, கூறுகின்றனர். எனவே, இந்த விஷயத்தில், இனியும் கால நீட்டிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.மேலும், கல்வி உரிமை சட்டத்தை, பாலர் பள்ளிகள் மற்றும் மேல்நிலைக் கல்விக்கும் நீட்டிக்க வேண்டும் என, கல்வியாளர்களும், மாநில கல்வி அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளனர். அது தொடர்பாக இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படாது; விரிவாக ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு பல்லம் ராஜு கூறினார்.

நன்றி:


9.11.12

குழந்தைகள் தினம் கொண்டாடுதல் - செலவினத் தொகை தொடர்பான அரசாணை

G.O on Children's Day Programme

"கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லையே'

தீபாவளி அட்வான்ஸ் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தும், "கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாததாக' உள்ளது என ஊழியர்கள் புலம்புகின்றனர்.

தீபாவளி அட்வான்ஸ் ரூ.2 ஆயிரத்தை உயர்த்தி தர ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அரசும் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது. இதற்கான உத்தரவு(எண்- 388, நாள்: 6.11.2012) 2 நாட்களுக்கு முன் வெளியானது. இதில் நவ., 6ம் தேதிக்கு பின்பு அட்வான்ஸ் பெறுவோருக்கே ரூ. 5 ஆயிரம் வழங்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பண்டிகைக்கு, ஒரு மாதத்திற்கு முன் அட்வான்ஸ் தொகை வழங்கப்படும். தீபாவளிக்காக 75 சதவீத ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்கனவே உள்ள பழைய அட்வான்ஸ் ரூ. 2 ஆயிரத்தை பெற்றனர். முதல்வரின் அறிவிப்புக்கு மாறாக, நவ.,6ல் அரசாணை வெளியாகி, அதற்கு பின்னர் கேட்பவர்களுக்கே ரூ. 5 ஆயிரம் என்று கூறியதால், பலர் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையில் உள்ளனர்.

அட்வான்ஸ் வாங்கிய தொகையை இன்னும் பிடித்தம் செய்ய துவங்காததால், தங்களுக்கும் இந்த அரசாணை பயன்படும் வகையில், உத்தரவு பிறப்பித்தால் நல்லது என, ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி:

 

ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை பெட்டி: பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6

ந.க.எண். 111701/எம்/இ1/2012, நாள். 11.2012.


பொருள்:- பள்ளிக் கல்வி-அனைத்துவகை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நன்னெறி போதனை வழங்க கோருல் – ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை பெட்டி (Suggestion Box) வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல் சார்ந்து.

பார்வை:- சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண். 111701/எம்/இ1/2012, நாள். 10.02.2012 மற்றும் 13.02.2012.

மேற்காணும் பொருள் சார்ந்து பார்வையில் காணும் செயல்முறைகளின் தொடர்ச்சியாக அனைத்து வகை பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு நன்னெறி போதனைகள் வழங்கும் பொருட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. அதில் 6-வது வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டுள்ளவாறு ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனைப் பெட்டி (Suggestion Box) ஒன்று வைத்து மாணவ / மாணவிகள் தங்களின் குறை / நிறைகளையும் மற்றும் பிரச்சனைகளையும் தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேற்குறித்த வழிகாட்டு நெறிமுறையை அனைத்து வகை மாணவ / மாணவியர்கள் தவறாது பின்பற்ற செய்ய வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மீண்டும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்குறித்த நடவடிக்கை விவரத்தினை அனைத்து தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெற்று உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

ஒம்/-. கு. தேவராஜன்,
பள்ளிக் கல்வி இயக்குநர்.

பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

நகல்
அரசு செயலாளர்,
பள்ளிக் கல்வித் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை-9. – அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
.

8.11.12

தீபாவளி - தீ பாதுகாப்பு உறுதிமொழி: பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6

ந.க.எண். 76563/எம்/இ1/2012, நாள்.07.11.2012.


பொருள்:- பள்ளிக் கல்வி-தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை-தீபாவளி 2012- தீபாவளி பண்டிகையின்போது – தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் – தீ பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் உறுதிமொழி எடுத்தல்-சார்ந்து.

பார்வை:- சென்னை-8, காவல்துறை தலைமை இயக்குநர், தீயணைப்பு-மீட்புப் பணித்துறை, அவர்களின் ந.க.எண். 19650/இ1/2012, நாள்.25.10.2012. மற்றும் 01.11.2012.

பார்வையில் காணும் கடிதத்திற்கிணங்க பள்ளி மாணவர்களிடையே தீபாவளி பண்டிகை கொண்டாடுதல் சார்ந்து உரிய விழிப்புணர்வு உண்டாக்குதல் பொருட்டு அறிவுரைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கீழ்குறிப்பிட்ட உறுதி மொழிகளை ஒவ்வொரு பள்ளி மாணவ மாணவிகளும் காலை இறைவணக்கத்தின்போதே உறுதிமொழி ஏற்கும் வகையில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கி ஆணையிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

ஒம்/-. கு. தேவராஜன்,
பள்ளிக் கல்வி இயக்குநர்.

பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

இணைப்பு
தீபாவளி பண்டிகைக்கான உறுதிமொழி விவரம்.

தீபாவளி பண்டிகைக்கான உறுதிமொழி

1. பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிப்போம்.

2. பெரியவர்கள் உடனிருக்க பட்டாசுகளை வெடிப்போம்.

3. பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல், ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்வோம்.

4. திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிப்போம்.

5. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

6. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்போம்.

7. மருத்துவ மனைகள், பள்ளிகள் முதலானவை அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

8. குடிசைகள் எளிதில் தீ மற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

9. ஒலியினைக் குறைப்போம் ! செவியினைக் காப்போம்!

10. கொண்டாடுவோம்! கொண்டாடுவோம்! விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவோம்.
.

7.11.12

எப்போதும் இல்லாத முறையில் 2 கட்டமாக அரையாண்டு தேர்வு

கல்வித் துறையில் எப்போதும் இல்லாத அளவுக்கு முதல் முறையாக இரண்டு கட்டமாக அரையாண்டு தேர்வு நடக்கிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

10ம் வகுப்பு, 12ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் பொதுத்தேர்வு போன்று ஒரே கேள்வித்தாள் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

தற்போது அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு டிசம்பர் 19 முதல் 22ம் தேதி வரை மொழி மற்றும் ஆங்கில தேர்வுகள் நடக்கின்றன. டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் வருகின்றன. பின்னர் ஜனவரி 2ம் தேதி முதல் ஏனைய பாடங்களுக்கான தேர்வு மீண்டும் தொடங்கி 7ம் தேதி 10ம் வகுப்பு தேர்வும், 10ம் தேதி பிளஸ் 2 தேர்வுகளும் முடிகின்றன. இதனால், மாணவர்கள் பண்டிகை தினங்களை உற்சாகத்துடன் கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

வழக்கமாக டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தேர்வுகள் தொடங்கி 22ம் தேதிக்கு மேல் விடுமுறை விடப்பட்டு, ஜனவரி 2ம் தேதி வகுப்புகள் தொடங்கும். ஆனால், இந்த முறை தேர்வுக்கு பின்னர் விடுமுறை இல்லை. நடுவிலேயே விடப்படுவதால் ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். ஏனெனில், தேர்வு முடிந்த பின் விடைத்தாள் திருத்தும் பணியிலும், வகுப்பு நடத்த வேண்டிய பணியிலும் ஒரே நேரத்தில் சேர்த்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். தேர்வுகளுக்கு நடுவே நீண்ட விடுமுறை என்ற இந்த நடைமுறை மாணவர்கள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

ஏன் இந்த திடீர் மாற்றம்: இது தொடர்பாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் வள்ளிவேலு கூறுகையில், ‘பள்ளிகளுக்கு கல்வி கற்பிக்கின்ற காலம், விடுமுறை காலம், தேர்வு காலம் எல்லாம் உளவியல் ரீதியில் வகுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது.
ஜனவரி மாதத்திலும் தேர்வுகள் நடைபெறுவதால் தொடர்ந்து கற்றல், கற்பித்தல் வகுப்புகள் பாதிக்கப்படுவதுடன் செய்முறை பயிற்சி, மாதிரி தேர்வுகள் தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளது. ஆசிரியர்களின் பணிச் சுமையும் அதிகரிக்கும். எனவே வழக்கம் போலவே தேர்வு கால அட்டவணை மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.

நன்றி:

 

25 ஆண்டுகள் பணிமுடித்த அரசு ஊழியருக்கான ஊக்கத்தொகை விருது - அரசாணை

பண்டிகை கால முன்பணம் - அரசாணை வெளியீடு

3.11.12

நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கான வாழ்வியல் திறன் பயிற்சி

Spd - Life Skill Trg for Girls Reg - Proc

அனைத்து கல்வி அலுவலகங்களிலும் ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம்

Go for Tr Grivance

ஆசிரியர்களின் பிரம்பு, சாட்டைக்கு தடை: அடித்தால் "ஜெயில்'

மாணவர்களை அச்சுறுத்தும்விதம், பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள் மற்றும் சாட்டைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு, மதுரை சி.இ.ஓ., நாகராஜ முருகன் அனுப்பிய உத்தரவு:

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்துக்காகவும் பிரம்பால் அடிக்க கூடாது. உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தும் வகையில் தண்டனை வழங்க கூடாது.

உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள், சாட்டைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் மாணவர்களை அடித்தாலோ, தகாத வார்த்தையால் திட்டினாலோ சட்டப்படி குற்றம். தவறு செய்தவர்களை அழைத்து "கவுன்சிலிங்' கொடுத்து நல்வழிப்படுத்த வேண்டும். இதை மீறும் ஆசிரியர் மீது மாணவர்கள் புகார் அளித்தால் அந்த ஆசிரியருக்கு சிறை தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டில் திறமை உள்ள மாணவரை உடற்கல்வி ஆசிரியர்கள் கண்டறிந்து, ஊக்கப்படுத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

 

கல்வி உரிமை சட்டம் 2013ல் முழுமையாக அமலாகும்: பல்லம் ராஜு

கல்வி உரிமை சட்டம், 2013ம் ஆண்டில் , முழுவதும் அமலாகும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜூ கூறினார்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வந்திருந்த எம்.எம்.பல்லம் ராஜூ, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2010ம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தினை கொண்டு வந்தது.

மேலும் கல்வித்துறை , தகவல் தொழிலநுட்ப கொள்கையை மேம்படுத்துவற்கான திட்டவரைவினை தயார் செய்யப்பட்டது. அதனடிப்படையில் 2013-ம் ஆண்டிற்குள் கல்வி உரிமை சட்டம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நன்றி:

 

சத்துணவில் 13 வகை கலவை சாதங்கள்; முட்டையில் நான்கு வகை மசாலா உணவுகள்

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில், 13 வகை கலவை சாதங்கள், முட்டையில் நான்கு வகை மசாலா உணவுகள் அறிமுகப் படுத்தப் படுவதாக, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார். அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

சத்துணவு திட்டத்தை, காலத்திற்கு ஏற்ப மாற்றவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப, உணவு முறையில் மாற்றம் ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. புதிய உணவு முறை குறித்து, சமையற் கலைஞர்கள், ஊட்டச் சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஊராட்சி பள்ளியிலும், சோதனை முறையில்,கொண்டைக்கடலை புலவு சாதம் மற்றும் மிளகுத்தூள் கலந்த முட்டை தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதை, பள்ளிக் குழந்தைகள் விரும்பி உண்பது கண்டறியப்
பட்டதால், 13 வகை கலவை சாதங்கள், முட்டையில் நான்கு வகை மசாலாக்களை, சமையல் நிபுணர்கள் தயாரித்து, விளக்கம் செய்து காட்டினர். இதன் அடிப்படையில், புதிய உணவு வகைகளை, சத்துணவு திட்டத்தில் படிப்படியாக அறிமுகம் செய்ய, அரசுமுடிவெடுத்துள்ளது.

இந்த புதிய உணவு வகைத் திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும், முதலில் ஒரு பகுதியில் மட்டும், முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்படும்; அந்த பகுதியில், இந்த புதிய உணவு முறை திட்டத்தின் செயல்பாடு குறித்து அறிந்த பின், மற்ற வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு காலஅட்டவணை

Half Yearly Examination Time Table

2.11.12

டி.இ.டி. மறுதேர்வு முடிவு வெளியீடு

டி.இ..பி. மறுதேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் நடந்த டி.இ.பி.தேர்வு நடந்தது.இத்தேர்வை ‌மொத்தமாக 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவை இன்று டி.ஆர்.பி. தலைவர் வெளியிட்டார்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தேர்வில் 10 ஆயிரத்து 397பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2வது தேர்வில் 8,849 பேர் தேர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வை 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.இது 60 சதவீதம் அதற்கு மேலான தேர்ச்சி ஆகும்.

தேர்வு முடிவுகள், டி.ஆர்.பி., இணையதளத்தில் (www.trb.tn.nic.in ), இரவு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்தால், மதிப்பெண்களுடன் கூடிய, தேர்வு முடிவுகளை அறியலாம்.

நன்றி:

 

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்