ஆவணங்களிலுள்ள எழுத்துக்களை அழிக்க பயன்படுத்தப்படும் "ஒயிட்னர்" திரவ நெடியை நுகர்ந்து, பள்ளி மாணவர்கள் ஒருவித போதை ஏற்றிக்கொள்வதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிச்சிறுவர்களுக்கு ஒயிட்னர் பாட்டில்களை வரைமுறையின்றி விற்பனை செய்த கடைக்காரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்; ஏராளமான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாநகர எல்லைக்குள் நடக்கும் சமூக விரோத செயல்கள்  குறித்து பொதுமக்கள் எஸ்.எம். எஸ்., மூலம் தனக்கு தகவல் அனுப்பலாம் என,  போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி சமீபத்தில் அறிவித்திருந்தார்.  
இதையடுத்து, போலீஸ் கமிஷனரின் 94422 23277 என்ற மொபைல் போன்  எண்ணுக்கு தினமும் 200க்கும் மேற்பட்ட எஸ். எம்.எஸ்., வந்து  கொண்டிருக்கிறது. அடிதடி தகராறு, மோதல், பொதுஇடத்தில் ஒழுங்கீனம்,  சட்டவிரோதமாக மது விற்பனை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக வரும் தகவல்களின்  பேரில் உடனடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், எஸ்.எம்.எஸ்.,  அனுப்பிய நபர்களுக்கு உடனடியாக பதில் தகவலையும் கமிஷனர் அனுப்பி வருகிறார்.  மிக முக்கியமான தகவல்கள் வந்தால், அதை அனுப்பிய நபரை நேரில் அழைத்தும்  விசாரிக்கிறார். 
நேற்று முன்தினம் கமிஷனர் அமரேஷ் புஜாரியை சந்தித்த ஆர்.  எஸ்.புரத்தைச் சேர்ந்த ஒருவர், "திடுக்" புகார் ஒன்றை தெரிவித்தார்.  "ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள பள்ளி முன் ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை  செய்யும் இரு கடைகள் உள்ளன. அங்கு, ஆவண எழுத்துக்களை அழிக்க பயன்படும்  ஒயிட்னர் பாட்டில்கள், பள்ளிச் சிறுவர்களுக்கும் அதிகளவில்  விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கிச் செல்லும் சிறுவர்கள், அதிலுள்ள திரவ நெடியை நுகர்ந்து  ஒருவித போதை ஏற்றிக்கொண்டு மயக்க நிலைக்கு செல்கின்றனர். எனது மகனும்  அவ்வாறான செயலில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டுள்ளான்" என புகார்  தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்த ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு  கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான  போலீசார், சிறுவர்கள் சிலரை சந்தேகத்துக்குரிய கடைகளுக்கு அனுப்பி,  ஒயிட்னர் பாட்டில்களை வாங்கச் செய்தனர்; கடைக்காரரும் விபரமேதும் கேட்காமல்  விற்பனை செய்தார். 
இதுதொடர்பாக, ராபர்ட்சன் ரோட்டில் ஸ்டேஷனரி கடை  நடத்தும் கணபதி, போலீஸ் காலனியைச் சேர்ந்த சத்யன்(40) என்பவரை கைது  செய்தனர். இவரது கடையில் இருந்த ஒயிட்னர் பாட்டில்கள் பறிமுதல்  செய்யப்பட்டன. அதேபோன்று, மற்றொரு கடைக்காரர் பெரோஸ்(30) என்பவரும் கைது  செய்யப்பட்டு, ஒயிட்னர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாநகர போலீஸ்  உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் மற்றும் டைப்  ரைட்டிங் ஆவணங்கள் தயாரிக்கும் போது, தவறுதலாக பதிவாகும் எழுத்துக்களை  அழிக்க ஒயிட்னர் பயன்படுத்தப்படுகிறது. இதை, 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என  எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதைமீறி, பள்ளிச் சிறுவர்களுக்கு கடைக்காரர்கள்  விற்றுள்ளனர். இதனால், இந்திய தண்டனைச் சட்டம் 284 பிரிவில் வழக்குப்பதிவு  செய்து, இருவரை கைது செய்துள்ளோம். 
மேலும், இதுபோன்ற விற்பனையில் ஈடுபடும்  பள்ளி அருகிலுள்ள கடைக்காரர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சில  நாட்களுக்கு முன் கோவை நகரிலுள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர், தான்  தங்கியிந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 அவரது அறையை சோதனையிட்டபோது,ஒயிட்னர் பாட்டில்கள் அதிகளவில் கிடந்தன.  அந்த மாணவர், அதிலுள்ள திரவ நெடியை நுகர்ந்து போதை ஏற்றும் பழக்கமுடையவராக  இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. தற்போது, பள்ளி மாணவனின் தந்தையும்  புகார் கூறியிருப்பதால், ஒயிட்னர் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீதான  கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறோம்.இவ்வாறு, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.
நன்றி:



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக