தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.7.11

சமச்சீர் கல்விக் ஆய்வுக் குழு அறிக்கை முழு விவரம்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டம், பாடப் புத்தகங்களை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆவணங்கள், இணைப்புகளை சேர்த்து 766 பக்கங்கள் கொண்டதாக அறிக்கை உள்ளது.


அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்
  • அனைத்துப் பள்ளிகளுக்கும் பொது பாடத் திட்டம், பாடப் புத்தகங்களை கொண்டு வருவதன் மூலம், தரமான கல்வியை அடைய முடியுமா என்கிற கேள்விக்கு விடை காணப்பட வேண்டும். 
  • குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்விச் சட்டத்தின்படி, தரமான கல்வியைப் பெற மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதன் மூலம் கல்வியில் சமத்துவத்தை கொண்டு வர முடியும். 
  • பொது பாடத்திட்டம், பாடப் புத்தகங்களை கொண்டு வந்து கல்வியை புகட்டுவதன் மூலம் மட்டும் பள்ளிகளில் சமத்துவம் என்பது முடிந்து விடுவதில்லை. 
  • கல்வியின் முக்கிய பிரிவுகளான உள்கட்டமைப்புகள் மிகவும் முக்கியம். வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலை அவசியம். மாணவர்கள் - ஆசிரியர்கள் விகிதாச்சாரப்படி, தகுதியான, நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் முக்கியம். 
  • சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள், பாடத் திட்டங்கள் இரண்டும், சமத்துவத்தையோ, தரமான கல்வியையோ வழங்குவதாக இல்லை என, குழு ஒருமனதாக கருதுகிறது. 
  • புத்தகங்களின் தரம் குறைவாக இருப்பது பற்றி, விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், சமூக அறிவியல், மொழிப் பாடங்களில் போதுமான உதாரணங்களை குறிப்பிடலாம். 
  • பாடத் திட்டங்கள், பாடப் புத்தகங்களை தயாரிக்கும் போது, 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் கல்வி ஆராய்ச்சி தேசிய கவுன்சில் பரிந்துரைகளை, அரசு கருத்தில் கொள்ளவில்லை.
  • கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு, பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களை புரிந்து கொண்டு, கிரகித்துக் கொள்ள வாய்ப்பில்லை. 
  • சில வகுப்புகளில் அதிகப்படியான பாடங்கள், சிலவற்றில் குறைவாக உள்ளன. 
  • பாடங்களை புரிந்து கொண்டு ஆர்வமுடன் படிக்கும் வகையில் இல்லாமல், அவர்களின் ஊக்கத்தை குறைப்பதாக உள்ளது. 
  • தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு நெறிமுறைகளில் இருந்து விலகிச் செல்லும் வகையில், பொதுப் பாடத் திட்டம் உள்ளது. இது மாணவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்துகிறது. 
  • படிக்கும் ஆர்வத்தை வளர்க்கும் விதத்தில் இல்லை. 
  • பாடத் திட்டத்தில் பகுத்தாய்வு திறன் இல்லை. இதனால், தேசிய, உலக அளவில் மாணவர்களின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும். 
  • உயர் கல்வித் திட்டத்தை முன்மாதிரியாக வைத்து, பாடத் திட்டத்தை வகுக்க முடியாது. 
  • அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களை அப்படியே மெட்ரிக் போர்டு தரத்துக்கு கொண்டு வர முடியாது. மாணவர்களை உடனடியாக அந்த கட்டத்துக்கு கொண்டு சென்றால், அவர்களுக்கு சுமை ஏற்படும். குழப்பம் ஏற்படும். 
  • அவசரகதியில் பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 
  • அடிப்படை விஷயங்களை கருத்தில் கொள்ளவில்லை. 
  • தேசிய, சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பகுத்தாய்வு திறனை, பொதுப் பாடத்திட்டம் வழங்கவில்லை. எனவே, இந்தப் பாடத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என குழு கருதுகிறது. 
  • சமச்சீர் பாடப் புத்தகங்களில் பல தவறுகள் உள்ளன. பிரச்னைகளை தீர்க்கும் திறன், பேச்சுவார்த்தை திறன், தகவல் தொடர்பு திறன், ஒருவருக்கொருவர் தொடர்பு, வாழ்வியல் திறன் இவற்றை வளர்க்கும் விதத்தில் பாடப் புத்தகம் இல்லை. இளம் வயதில் இந்த திறனை வளர்ப்பதன் மூலம், எதிர்காலத்தில் மாணவர்கள் சவால்களை சந்திக்க உதவும். 
  • ஆங்கில வழி பாடப் புத்தகத்தில் அப்படியே தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துள்ளனர். இதனால் அனைத்து வகுப்புகளிலும், அனைத்து பாடங்களிலும் இலக்கணப் பிழைகள் உள்ளன. 
  • தேவையில்லாத, ஆட்சேபனைக்குறிய விஷயங்களும் உள்ளன. 
  • புத்தகங்களில், ஆசிரியர்களுக்கான குறிப்புகள் இல்லை. 
  • பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெற்ற 13 மனுக்களை, குழு ஆய்வு செய்தது. 
  • பத்தாம் வகுப்பில் நேரடியாக புதிய பாடத் திட்டத்தை கொண்டு வருவதால், தேர்வில் மாணவர்களின் திறன் பாதிக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர். 
  • மாணவர்கள், மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, பாடப் புத்தகங்கள் உள்ளன. 
  • சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை கொண்டு வருவதற்கு முன், மாணவர்களின் மதிப்பீடு குறித்த நடைமுறையை ஒழுங்குபடுத்த வேண்டும். 
  • மந்தமான மாணவர்களை கவனத்தில் கொள்ளவில்லை. மாணவர்களிடம் படைப்பாற்றல், மகிழ்ச்சிகரமாக படிக்கும் வழிமுறையை பாடப் புத்தகங்கள் உருவாக்கவில்லை. தமிழக மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வியை வழங்க வேண்டும் என்றால், பாடப் புத்தகங்களில் ஏராளமான மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். எனவே, இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை பயன்படுத்த முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:


      கருத்துகள் இல்லை:

      கருத்துரையிடுக


      பிரபலமான இடுகைகள்

      தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்