தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.3.13

மாநில செயற்குழு - அழைப்பிதழ்

மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்

இடம்
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு (பன்னீர் செல்வம் பார்க் அருகில்)

நாள்
06.04.2013 சனி காலை 10.30 மணி

தலைமை
திரு. சு. கயத்தாறு, மாநிலத் தலைவர்

முன்னிலை
திருமதி.A. ஜெயராணி, மாநிலச் செயலாளர்,
திரு. S. பாபு, மாநிலத் தணிக்கையாளர்

வரவேற்புரை
திரு. S. மாணிக்கம், மாவட்டப் பொறுப்பாளர், ஈரோடு மாவட்டம்.

வேலை அறிக்கை
திரு. க. இசக்கியப்பன், பொதுச் செயலாளர்

சென்னை செயல்பாடுகள்
திரு. சு. வெங்கடேசன், தலைமையிடச் செயலாளர்

வரவு செலவு அறிக்கை
திரு. அ. மதலைமுத்து, மாநிலப் பொருளாளர்

நமது முழக்கம் அறிக்கை
திரு. ம. எட்வின் பிரகாஷ், துணைப் பொதுச் செயலாளர்

கூட்டப் பொருள்:
  • 2013 மே மாதத்தில் நமது இயக்கப் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பட்டறை
  • பிப்ரவரி 26 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஆய்வு.
  • கல்வி அமைச்சர், கல்வி அதிகாரிகள் சந்திப்பு.
  • 2012-13 உறுப்பினர் சந்தா.
  • நமது முழக்கம் இதழ் சந்தா.
  • பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துதல் - எதிர்கால நடவடிக்கை.
  • STFI முடிவுகள்.
  • செயற்குழு உறுப்பினர்கள் கொணர்வன.
அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாது வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றென்றும் சங்கப் பணியில்,
க. இசக்கியப்பன்.
.

"வெண்புள்ளி உள்ள மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது"

"உடம்பில் வெண்புள்ளிகள் உள்ளதை காரணங்காட்டி, மாணவர்களை பள்ளி நிர்வாகம் பாரபட்சமாக நடத்தக்கூடாது" என, பள்ளிக் கல்வி துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

தோலில், ஆங்காங்கே வெள்ளையாக தோன்றும் புள்ளிகள், வெண்புள்ளிகள் எனப்படுகிறது. இக்குறைபாடுள்ள மாணவர்களை, பல்வேறு காரணங்கள் கூறி, இடம் கொடுக்க, சில பள்ளி, பல்கலைக் கழக நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன. வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் -இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு, இப்பிரச்னையை, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

இதையடுத்து, பள்ளிக் கல்வி துறை செயலர், பள்ளிக் கல்வி இயக்குனர், ஆரம்ப கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளி இயக்குனர் ஆகியோருக்கு சுற்றிக்கை அனுப்பி உள்ளார். அதில், "வெண்புள்ளிகள் உள்ளதை காரணங்காட்டி, எந்தவொரு மாணவரையும், பள்ளி நிர்வாகங்கள் பாரபட்சமாக நடத்தக் கூடாது. இதை, அனைத்து பள்ளி கல்வி இயக்குனர்களும், தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவிக்க வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

அரசு துறை தேர்வு முடிவு வெளியீடு

டிசம்பரில் நடந்த, அரசு துறை தேர்வு முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

பதவி உயர்வு பெறுவதற்காக, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், கடந்த டிசம்பரில் நடந்த துறை தேர்வுகளை எழுதினர். இதன் முடிவுகள், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், தங்களுடைய பதிவு எண்களை பதிவு செய்து, தேர்வு முடிவை அறியலாம்.
.

இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்?

கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை, மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி கல்வித் துறையின் தலைமையிடமாக, சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.பி.ஐ., வளாகம் திகழ்கிறது. 15 ஏக்கருக்கும் அதிகமாக, பரந்து விரிந்துள்ள இந்த வளாகத்தில், பள்ளி கல்வித் துறை இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம், தேர்வுத் துறை இயக்குனரகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரம், மெட்ரிக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாட்டு பாடநூல் கழகம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

சம்பத் மாளிகை: ஒவ்வொரு இயக்குனரகமும், தனித் தனி கட்டடத்தில் இயங்கி வருகின்றன. வளாகத்தில், மிகப் பெரிய கட்டடமாக, சம்பத் மாளிகை கட்டடம் உள்ளது. இது, 10 தளங்களைக் கொண்டதாகும். 1985ல், அப்போதையமுதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னிலையில், அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் பந்த், திறந்து வைத்துள்ளார். இந்த கட்டடம் கட்டி, 23 ஆண்டுகள் தான் ஆகின்றன. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம், பாடநூல் கழகம், மத்திய அரசின், வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம், சி.பி.ஐ., கல்லூரிக் கல்வி இயக்குனரகம் உட்பட பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த கட்டடம், இடிப்பு பட்டியலில் உள்ளது.

பள்ளிக் கல்வி இயக்குனரகம்
: இதேபோல், சென்னை மாநகராட்சி கட்டடத்தைப்போல் பிரதிபலிக்கும், பள்ளிக்கல்வி இயக்குனரகமும், இடிக்கப்படுகிறது. இது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1850ல் கட்டப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்தாலும், இன்னும் இந்த கட்டடம் வலுவாகவே உள்ளது. மேலும், இந்த கட்டடம், தொன்மை வாய்ந்த கட்டடங்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆங்கிலேய அரசு, கோல்கட்டா, மும்பை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில், கல்விக்கென தனி இயக்குனரகத்தை கட்டியது. டி.பி.ஐ., (Directorate of Public Instruction) அதிகாரிகளாக, 1854ல் இருந்து, பல பேர் பதவி வகித்துள்ளனர். இதற்கான பெயர் பட்டியலும், அலுவலகத்திற்கு வெளியே உள்ளது.

எஸ்.எஸ்.ஏ., கட்டடம்: கூவம் ஆற்றை ஒட்டியுள்ள அனைவருக்கும் கல்வி இயக்கக கட்டடம், 2000த்திற்கு முன்பு கட்டப்பட்டது. வெறும் 13 ஆண்டுகள் ஆன இந்த கட்டடமும் இடிக்கப்பட உள்ளது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், தேர்வுத்துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன.

அறிவுசார் பூங்கா: தேர்வுத் துறை வளாகத்தில், முந்தைய, தி.மு.க., அரசில், புதிய கூடுதல் கட்டடம், 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த கட்டடமும், இடிப்பு பட்டியலில் உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஐந்து கட்டடங்களை தவிர, மற்ற அனைத்து கட்டடங்களையும், விரைவில் தரை மட்டமாக்கி விட்டு, அனைத்து துறை அலுவலகங்களை உள்ளடக்கி, "ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா" கட்டடத்தை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியானது.

அலுவலகங்களை தேடி: புது கட்டடத்தை கட்டுவதில், அரசு வேகம் காட்டுவதால், அனைத்து துறை அதிகாரிகளும், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்குமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல கட்டடங்கள், நன்றாகவே உள்ளன. ஆனாலும், சில கட்டடங்களை தவிர, மற்ற அனைத்தும் இடிக்கப்பட உள்ளன. தற்காலிகமாக, வேறு இடங்களை, வாடகைக்கு பார்க்கும் பணியில் இறங்கி உள்ளோம். நாங்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப, கட்டடங்கள் கிடைக்குமா என்பது, சந்தேகம் தான். ஆவணங்கள் அனைத்தையும், புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இடிக்கப்படும் கட்டடங்கள்

1. பள்ளிக்கல்வி இயக்ககம்
2. சம்பத் மாளிகை
3. மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்
4. தேர்வுத்துறை இயக்குனரகம்
5. எஸ்.எஸ்.ஏ., இயக்குனரக கட்டடம்
6. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம்
7. மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்

புது கட்டடத்திற்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு? கடந்த ஆண்டு பட்ஜெட்டில், கல்வித்துறை அலுவலகங்களை உள்ளடக்கி, ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா கட்டடம் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. கோட்டூர்புரம் நூலகமும், இந்த கட்டடத்தில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து, எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
.

பள்ளிக் கல்வி அமைச்சருடன் சந்திப்பு


தஇஆச மாநில நிர்வாகிகள் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் டாக்டர் வைகை செல்வன் அவர்களைச் சந்தித்து “உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரியாக உட்படுத்துதல்” தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

நமது கோரிக்கையை கனிவுடன் கேட்ட அமைச்சர், கல்வி மானியக் கோரிக்கைக்கு முன்பாக நமது சங்கத்தை அழைத்துப் பேசி முடிவுகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.


சந்திப்பின் போது மாநிலத் தலைவர் கயத்தாறு, பொதுச் செயலாளர் இசக்கியப்பன், பொருளாளர் மதலைமுத்து, தலைமையிடச் செயலாளர் வெங்கடேசன், சென்னை மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
.

10.3.13

TET - தமிழ் - II ஆறாம் வகுப்பு - இயல் 2

செய்யுள்: நாலடியார்

* நாலடியாரை பாடியவர்கள் - சமண முனிவர்கள்.

* நாலடியார் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களை கூறுவது.

* நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.

* நாலடி நானூறு என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நூல் - நாலடியார்.

* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்கள்.

* பதினெண்கீழ்க்கணக்கு எத்தனை நூல்களை உள்ளடக்கியது - 18

* பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சேர்ந்து மேல்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகிறது.

* சங்க இலக்கியகளுக்கு பின் தோன்றிய நூல்களின் தொகுப்பிற்கு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என பெயர்.

* பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் - சங்க நூல்கள் என அழைக்கப்படுகின்றன.

செய்யுள்: பாரத தேசம்

* பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38)

* பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.

* பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்

* பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.

* பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

* பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.

* பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா(ராமசாமி அய்யங்கார்)

* பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.

* பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.

* பாரதியின் முதல் பாடல் "தனிமை இரக்கம்" வெளியிட்ட பத்திரிக்கை - மதுரையிலிருந்து வெளிவந்த "விவேக பானு" என்ற பத்திரிக்கை.

* பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி(1904)

* பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)

* பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.

* பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.

* பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

* பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.

பாரதியாரின் பாடல் வரிகள்:

"வெள்ளிப்பனிமலையின்மீது உலாவுவோம்"

"ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்"

"சாதி இரண்டொழிய வேறில்லை"

"உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்"
உரைநடை: பறவைகள் பலவிதம்

* பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்

* உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.

* நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.

* சமவெளி மரங்களில் வாழும் பறவைகள் - மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்குணாங்குருவி.

* நீர் நிலைகளில் வாழும் பறவைகள் - கொக்கு, தாழைக்கோழி, பவளக்காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.

* மலைகளில் வாழும் பறவைகள் - கிருவாச்சி, செந்தைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைக்காலி, பொன் முதுகு, மரங்கொத்தி, சின்னங்குறுவான், கொண்டை உழவாரன், இராசாளிப்பருந்து, பூமன் ஆந்தை.

* பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என அழைப்பர்.

* வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம் என அழைப்பர்.

* அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.

* அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.

* நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.

* தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்: வேடந்தாங்கல், கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்), கஞ்சிரால்குளம், சித்திரஸ்குடி, மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்), பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்), உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்), வடுவூர் (தஞ்சை மாவட்டம்) கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்), வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்), வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்), கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்), கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்).

* தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம்.

 துணைப்பாடம்: பாம்புகள்

* விவசாயிகளின் நண்பன் - பாம்பு.

* உலகில் மனித இனம் தோன்றும் முன் பத்துகோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இனம் - பாம்புகள்.

* பாம்புப் பண்ணை அமைந்துள்ள இடம் - சென்னைக்கு அருகே கிண்டி.

* பெரும்பாலான பாம்புகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பன. சில பாம்புகள் குட்டிப்போடும்.

* உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு - ராஜநாகம்(இந்தியா). இதன் நீளம் 15 அடி. கூடுகட்டி வாழும் ஒரே வகைப்பாம்பு. இவை மற்ற பாம்புகளை கூட உணவாக்கிக் கொள்ளும்.

* பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருக்கும் - இரையை விழுங்கும், மென்று தின்பதில்லை.

* பாம்பு தான் பிடிக்கும் இறையை கொல்லவும், செரிமானத்திற்காகவும் தன்னுடைய எச்சில் நஞ்சு வைத்திருக்கிறது.

* பாம்பிற்கு காது கேட்காது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து செய்லபடும்.

* 52 வகையான பாம்புகளுக்கு நச்சுத்தன்மை உண்டு.

* பாம்பைக் கொண்றால் அதன் உடல் பிளந்து வெளிவரும் வாசனை மற்ற பாம்புகளை அந்த இடத்திற்கு வரவைக்கிறது.

* சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்து கொள்ள பாம்புகள் அடிக்கடி நாக்கை வெளியே நீட்டும்.

* நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராக்சின்(Cobrozin) என்ற வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

* பாம்பின் தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவதைத் தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டம் - இந்திய அரசின் வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் - 1972.

* மஞ்சள் சிட்டு எந்த பகுதியில் வாழும் - சமவெளி பகுதியில்.

* தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை - 13

* சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார்.

* தமிழில் உள்ள முதல் எழுத்துக்கள் - 30

* தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் - 12

* தமிழில் உள்ள மெய் எழுத்துக்கள் - 18

* உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் சேர்ந்து எத்தனை உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன - 216

இலக்கணம்:

* உடனிலை மெய் மயக்கம்:

தன் எழுத்துடன் மட்டும் சேர்ந்து வரும் - க், ச், த், ப்.

(எ.கா) பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.

* வேற்றுநிலை மெய்மயக்கம்:

தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேர்ந்து வரும் - ர், ழ்

எ.கா: சார்பு, வாழ்க்கை

* எழுத்து பிற எழுத்து இரண்டுடன் சேர்ந்து வரும் எழுத்துக்கள் - ற், ன்.

எ.கா: குற்றம், மேற்கு -ற், அன்னம், அன்பு - ன்.



* உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை.

* ஆறுகள் மாசடையக் காரணம் - தொழிற்சாலைக்கழிவு.

* மழை குறையக் காரணம் - காடுகள் அழிப்பு.

* மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தந்தம்

* வண்மை - கொடைத்தன்மை, வன்மை - கொடுமை.

.

7.3.13

TET - தமிழ் - II ஆறாம் வகுப்பு - இயல் 1

செய்யுள்: வாழ்த்து - திருவருட்பா

* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்

* சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்

* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூர்

* பெற்றோர் - இராமையா - சின்னமையார்

* வாழ்ந்த காலம்: 05.10.1823 முதல் 30.01.1874

* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.

* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை

* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை

* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.

* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.

* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்

* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.

* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்

செய்யுள்: திருக்குறள்

* இயற்றியவர் - திருவள்ளுவர். இவர் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்று கூறப்படுகிறது.

* திருவள்ளுவரின் காலம் - கி.மு.31. இந்த ஆண்டு பற்றி தெளிவான சான்றும் கிடைக்கவில்லை. பெற்றோர் பற்றிய தெளிவான சான்றும் கிடைக்கவில்லை.

* திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் - தெய்வப்புலவர், செந்நாபோதார், நாயனார், முதற்பாவலர், பொய்யில்புலவர், நான்முகனார், பெருநாவலர், மாதானுபங்கி, தேவர்.

* திருக்குறள் - உலகப் பொதுமறை எனவும் முப்பால் எனவும் வாயுறைவாழ்த்து எனவும் அழைக்கப்படுகிறது.

* திருக்குறள் - அறம் + பொருள் + இன்பம் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இயல்களின் எண்ணிக்கை 9.

* திருக்குறளின் 3 பிரிவுகள்: அறத்துப்பால் 38 அதிகாரங்களும், பொருட்பால் 70 அதிகாரங்களும், காமத்துப்பால் 25 அதிகாரங்களும்.

* திருக்குறள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

* திருக்குறள் 133 அதிகாரங்களும், அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் கொண்டது.

* திருகுறளுக்கு 10 பேர் உரையெழுதியுள்ளனர். அவற்றில் சிறந்த உரை பரிமேலழகர் எழுதிய உரை.

குறிப்பு: திருவள்ளுவர் ஆண்டு: கிறிஸ்துவ ஆண்டு +31 அதாவது 2012 என்பது திருவள்ளுவர் ஆண்டில் (2012+31) 2043 என்று கூறுவோம்.

* திருக்குறளின் சிறப்பு பெயர்: முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்திரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், பொருளுரை, முதுமொழி, திருவள்ளுவபயன்.

* முயற்சி திருவினை ஆக்கும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.

உரைநடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா
* உ.வே.சா - உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்.

* உ.வே.சாவின் இயற்பெயர்- வேங்கடரத்தினம், அவரது ஆசிரியர் அவருக்கு சூட்டிய பெயர் - சாமிநாதன்.

* உ.வே.சா பிறந்த ஊர் - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்.

* உ.வே.சாவின் காலம் - 19.02.1855 முதல் 24.04.1942 வரை

* உ.வே.சாவின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை.

* உ.வே.சாவின் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் 1942ல் நிறுவப்பட்ட நூல் நிலையம் இன்றும் செயல்பட்டு வருகிறது.

* உ.வே.சா ஓலைச்சுவடிகளை பதிப்பித்ததால் பதிப்புத்துறையின் வேந்தர் என அழைக்கப்படுகிறார்.

* உ.வே.சாவுக்கு திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் நினைவு இல்லம் உள்ளது.

* உ.வே.சாவுக்கு தட்சணாமூர்த்தி கலாநிதி என்று பெயர் வழங்கியவர் - சங்கராச்சாரியார்.

* உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் "என் சரிதம்" (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)

* உ.வே.சா ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஆற்றில் விடப்பட்ட ஒலைச்சுவடியை எடுத்து படித்து புதுப்பித்தார்.

* குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர் - கபிலர்.

* குறிஞ்சிப் பாட்டு எந்த நூல்களுள் ஒன்று - பத்துப்பாட்டு

* கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான பூக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

* உ.வே.சாவின் தமிழ் பணிகளை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்: ஜி.யு.போப், சூலியல் வின்சோன்.

* 2006-ஆம் ஆண்டு உ.வே.சா. வைப் பெருமைப்படுத்தி அஞ்சல் தலை வெளியிட்டது மத்திய அரசு.

உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:

எட்டுத்தொகை - 8

பத்துப்பாட்டு - 10

சீவக சிந்தாமணி - 1

மணிமேகலை - 1

சிலப்பதிகாரம் - 1

புராணங்கள் - 12

உலா - - 9

கோவை - 6

தூது - 6

வெண்பா நூல்கள் - 13

அந்தாதி - 3

பரணி - 2

மும்மணிக்கோவை - 2

இரட்டைமணிமாலை - 2

பிற பிரபந்தஸ்கள் - 4

* உ.வே.சா. ஆற்றில் விட்ட ஓலைச்சுவடியை தேடி எடுத்த இடம் - கொடுமுடி(ஈரோடு மாவட்டம்)

* "பனை ஓலையை பக்குவப்படுத்தி அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவர்"-அவ்வாறு எழுதப்பட்ட ஓலைக்கு பெயர் ஓலைச்சுவடி.

* ஓலைச்சுவடி எழுத்துக்களில் எது இருக்காது -புள்ளி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது.


துணைப்பாடம்: கடைசிவரை நம்பிக்கை

* ஓரிகாமி என்பது காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலை.

* ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.

* ஜப்பானில் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு இறந்த பெண் - ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சடகோ சசாகி.

* சடகோ சசாகிக்கு நம்பிக்கை தந்தவர் - தோழி சிசுகோ

* அக்குழந்தையின் நினைவிடம் உள்ள இடம்: ஹிரோசிமா நகரம்.

* அரவிந்த குப்தா எழுதிய நூலின் பெயர் - டென் லிட்டில் பிங்கர்ஸ்

* அவள் இறக்கும் முன் 644 காகித கொக்குகள் செய்தார்.

* டென் லிட்டில் பிங்கர்ஸ்(Ten Little Fingers) என்ற நூலை எழுதியவர்: அரவிந்த் குப்தா.

இலக்கணம்:

* நாம் பேசும் மொழியை, எழுதும் மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது - இலக்கணம்.

* தமிழின் முதல் எழுத்து - அ

* "அ" என்ற எழுத்தின் I என்ற கோடு குறிப்பது - பழங்கால மனிதன் முதுக்கு பின்னால் வைத்திருந்த அம்புக்கூட்டை குறிக்கிறது.

* நட்பு எழுத்துக்களை மரப்பிலக்கணம் எவ்வாறு கூறுகிறது - இன எழுத்துக்கள்

* என்பு என்பதன் பொருள் - எலும்பு

* "ங்" என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து - க

* "ஞ்" என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து - ச

ங்க - சிங்கம், ஞ்ச - மஞ்சள், ண்ட -பண்டம், ந்த - பந்தல், ம்ப - கம்பன், ன்ற - தென்றல்.
.

வானவில் ஔவையார் எழுத்துருவை பயன்படுத்தி தட்டச்சு செய்ய எளிய வழி

தமிழக அரசு அலுவலகங்களிலும், கல்வித்துறையிலும் அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புகள் மற்றும் டாக்குமென்ட்களில் வானவில்-ஔவையார் எழுத்துரு பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு தனியார் நிறுவனத்தின் எழுத்துரு ஆகும். இதனை தட்டச்சு செய்ய அவர்களது நிறுவனத்தின் மென்பொருளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பொதுவாக இந்த மென்பொருளை வாங்குவதற்கு என்று அரசு அலுவலகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. இதனால் அரசு அலுவலகங்கள் கிராக் செய்யப்பட்ட மென்பொருளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. கிராக் செய்யப்பட்ட மென்பொருளும் வின்டோஸ் 7 இயக்கச்சூழலில் வேலை செய்வது இல்லை.

வேறு இலவச மாற்று வழி இருப்பின் அரசு அலுவலகங்களுக்கு மிகவும்பயனுடையதாக இருக்கும். என்.எச்.எம் ரைட்டர் இதற்கு மிகப் பெரிய தீர்வாக அமைந்துள்ளது. (ஆமாம்! யுனிகோடுக்கு மாற வேண்டியது தானே!)

என்.எச்.எம் ரைட்டரை வானவில் ஔவையார் எழுத்துருவை தட்டச்சு செய்ய பயன்படுத்துதல்.
என்.எச்.எம் ரைட்டரை http://software.nhm.in/products/writer என்ற இணைய இணைப்பிலிருந்து பதிவிறக்கிக் கொண்டு உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்
.
nhm_1nhm_2என்.எச்.எம் ரைட்டரை துவக்கிக் கொள்ளுங்கள். உங்கள் கணினியின் சிஸ்டம் ட்ரேயில் என்.எச்.எம் ரைட்டருக்கான குறியீட்டில் (மணி போன்ற அடையாளம்) ரைட்கிளிக் செய்யுங்கள். வரக்கூடிய மெனுவில் செட்டிங்ஸ் என்பதை செலக்ட் செய்யவும்.
தற்போது திரையில் தோன்றும் செட்டிங்ஸ் வின்டோவில் பல்வேறு வகையான தமிழ் எழுத்துரு வடிவங்களுக்கான, தமிழ் விசைப்பலகை முறைகள் தரப்பட்டுள்ளன. வானவில் எழுத்துருவிற்கான என்கோடிங்கிற்கும், விசைப்பலகை முறைகள் தரப்பட்டுள்ளதை கவனியுங்கள். இங்கு தமிழ்99, இன்ஸ்கிரிப்ட், பாமினி முறை, பழைய தட்டச்சு முறை, ஃபொனடிக் முறை ஆகிய விசைப்பலகைகள் தரப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு பழக்கமான விசைப்பலகை முறையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

nhm_3

உதாரணத்திற்காக நாம் தமிழ்99 விசைப்பலகை முறையை தேர்வு செய்துள்ளோம். அதற்கான சுருக்கு விசையையும் நிர்ணயித்துக் கொண்டால் பயனுடையதாக இருக்கும்.
nhm_4இப்போது மீண்டும் சிஸ்டம் டிரேயில் உள்ள என்.எச்.எம் குறியீட்டில் இடதுகிளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்த விசைப்பலகை முறையும் இடம் பெற்றிருப்பதை கவனிக்கலாம். அதனை செலக்ட் செய்து கொள்ளுங்கள. (நீங்கள் நிர்ணயித்துள்ள சுருக்கு விசையை அழுத்தியும் நீங்கள் நேரடியாக விசைப்பலகை முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.)
அவ்வளவு தான் நீங்கள் வானவில் எழுத்துருக்களை தட்டச்சு செய்ய தயாராகி விட்டீர்கள்.
அது சரி! எழுத்துருவிற்கு என்ன செய்வது என்று கேட்கறீர்களா? எழுத்துரு பொதுவாக அலுவலக ரீதியான டாக்குமென்ட்களை பகிர்ந்து கொள்ளும் போது இணைத்தே வழங்கப்படுகிறது. எளிதாக கிடைக்கிறது.

ஆம் நண்பர்களே! இனிமேல் Windows 2003/XP & Vista ஆகிய எந்த இயக்கமுறையிலும் நாம் எளிதாக, இலவசமாக வானவில் எழுத்துருக்களை தட்டச்சு செய்யலாம்.

நன்றி:  சாக்பீஸ், கமலகண்ணன்
.

2.3.13

4ம்தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமியின் அவதார தின விழா வருகிற 4ம்தேதி கொண்டாடப்படுகிறது. சாமித்தோப்பில் நடைபெறும் இந்த விழாவில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட விடுமுறையாக மாற்றப்பட்டது. இதனால் மாவட்ட உள்ளூர் விடுமுறை கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த ஆண்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு வருவதில் தாமதம் ஆனது.

இந்த நிலையில் நேற்று இரவு தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
அய்யா வைகுண்ட சாமி அவதார தின விழாவையொட்டி வருகிற 4ம்தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங் களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் மேல்நிலைப்பள்ளி தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும், அது சம்பந்த மான பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
.

நெல்லையில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி நெல்லையில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் (25 ஆயிரம்) பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி நெல்லையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் ராஜமார்த்தாண்டம் தலைமை வகித்தார். தென்காசி கல்வி மாவட்ட செயலாளர் செல்வசுந்தராஜ், நெல்லை கல்வி மாவட்ட செயலாளர் சிதம்பர ராமலிங்கம், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட செயலாளர் சாம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாவட்ட அமைப்புச் செயலாளர் செல்வின் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சரவணன், மாநில தணிக்கையாளர் பாபு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் மனோகரன், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் பஸ்லுல் ஹக், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன், மாவட்ட செயலாளர் சுடலைமணி, அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கணபதி ஆகியோர் பேசினர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் இசக்கியப்பன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் ஆறுமுகதாஸ் நன்றி கூறினார்.
.

1.3.13

புதுக்கோட்டையில் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையிலுள்ள முதன்மைக்கல்வி அலுவலகம் எதிரில் மாவட்டத் தலைவர் ஜெயராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். மாநிலப் பொருளர் மதலைமுத்து தொடக்கி வைத்தார். மாவட்டச் செயலர் செந்தில் கோரிக்கைகளை விளக்கினார்.

முன்னாள் மாநில துணைத் தலைவர் வாசுகி மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பேசினர். முன்னாள் மாநில பொதுச் செயலர் குமரேசன் நிறைவுரையாற்றினார்.

இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் கருப்பையா, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்டத் தலைவர் திராவிடச்செல்வம், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் ரெங்கராஜ், தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட செயலர் காந்திநாதன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
.

சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிவகங்கை மாவட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரு. அ .சங்கர், மாநில துணைத்தலைவர் தலைமையில் தாங்கினார்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பிரதான கோரிக்கையான உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலையாசிரியர்களை பட்டதாரியாசிரியர்களாக உட்படுத்து என்ற கோரிக்கை முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை திரு.அ.பாலகுருநாதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து மாவட்டச் செயலர் திரு.அ.செல்லத்துரை விளக்க உரையாற்றினார்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் திருவாளர்கள். நாகராஜ், முத்துக்குமார், திருமதி.க.அமுதா ஆகியோர் பேசினார்கள். தோழமைச்சங்க நிர்வாகிகள் திரு. இளங்கோ, மாநில இணைசெயலர், தமிழாசிரியர் கழகம், திரு.முத்துச்சாமி, மாவட்ட செயலர், உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், திரு.ஆ.சேவியர் ஆரோக்கி தாஸ், மாநில பொது செயலர், ஆங்கில பட்டதாரி சங்கம், திரு.குமரேசன், வட்டார செயலர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்ட முடிவில் திரு.கண்ணன் வட்டார தலைவர் நன்றி கூறினார்.
.

இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தக் கோரி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

 அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, மாநகராட்சி, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்த வேண்டும். அப்பணியிடங்களில் பணியாற்றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர். ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை வகித்தார். கல்வி மாவட்டச் செயலர்கள் ஆர். சசி, பாலச்சந்திரன், ஹரிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் சேம் பிரின்ஸ் குமார் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். முன்னாள் மாநில இணைச் செயலர் பாஸி, மூட்டா நாகராஜன், உயர், மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் பென்னட் ஜோஸ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ராஜாக்கமங்கலம் வட்டாரப் பொறுப்பாளர் செந்தில், மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநிலப் பிரதிநிதி நாகராஜன், கலையாசிரியர் தலைவர் விக்ரமன் ஆகியோர் பேசினர்.


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலர் ம. எட்வின் பிரகாஷ் கோரிக்கையை விளக்கிப் பேசினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்புச் செயலர் வள்ளிவேலு நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்டப் பொருளாளர் டி.செல்வராஜ் நன்றி கூறினார்.
.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்