தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.8.18

முத்தமிழ் அறிஞருக்கு வீர வணக்கம்



பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.
 
தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழுக்கும் தன்னிகரற்ற தொண்டாற்றிய மாபெரும் மக்கள் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவு பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய காந்தக் குரலால் இலக்கியத்திறனால் இணையற்ற பேச்சாற்றலால், நிகரற்ற நிர்வாகத்திறனால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது அவர் கொண்டு வந்த திட்டங்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தரப்பு மக்களையும் ஏதாவது ஒரு வகையில் சென்றடைந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

முதன்முதலாக தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாநில
அரசின் 5வது ஊதியக்குழு மூலமாக 11.06.1988 முதல் மத்திய அரசுக்கு
இணையான ஊதியத்தை வழங்கி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

வாக்குறுதி அளித்த படி தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு 2006-இல் ஆட்சிக்கு வந்தவுடன் காலமுறை ஊதியம் வழங்க ஆணை பிறப்பித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பக முன்னுரிமையின் படி ஆசிரியர் பணி நியமனங்கள் பெற வழியேற்படுத்தி ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஆசிரியர்களாக நியமனம் பெற வழி வகை செய்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

பொதுவாழ்க்கையில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக போர்க்குணத்துடன் செயலாற்றியதுடன் போராட்டக்களத்தை மதித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

அரசியல் தொண்டு, சமூகத்தொண்டுடன் அருந்தமிழ்த்தொண்டையும் ஆற்றிய தன்னிகரில்லாத் தலைவர் டாக்டர் கலைஞர்.

அவர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் எழுதிய சாகாவரம்
பெற்ற இலக்கியங்களான நெஞ்சுக்கு நீதி, தொல்காப்பியப் பூங்கா, குறளோவியம், சங்கத் தமிழ்க் கவிதை மழை போன்றவற்றின் மூலம் அவர் இங்கு என்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.

உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களை உலுக்கிவிட்ட டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

அ. சங்கர்,
பொதுச் செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்