தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

5.8.18

முதல்வர் எடப்பாடியின் கண்ணியமற்ற பேச்சைக் கண்டித்து 09-08-2018 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்

தேங்காய் இனித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற முதல்வர் எடப்பாடியின் கண்ணியமற்ற பேச்சும் செயல்பாடும்!

கேட்காத கடனும்...   தீர்க்காத பழியும்...   வீண், வீண், வீணே...!

மாற்றாந்தாய் மனப்பான்மை என்றொரு சொற்றொடர் மக்களுக்கு மட்டுமல்ல மன்னனுக்கும் அவன் ஆளும் மாநிலத்திற்கும் பொருந்தும். இதை நாம் அறிவின் வழி அல்ல, அனுபவத்தின் வழியாக உணரத் தலைப்பட்டிருக்கிறோம். என்னதான் கெட்டவனாக இருந்தாலும் கண்டிப்பானவனாக இருந்தாலும் பெற்றதாய் ஒருபோதும் தன் பிள்ளைகளுக்கு பச்சைத்துரோகம் எண்ணமாட்டாள். பெற்ற தாயை இழந்த மக்கட்கு வேறொரு தாய் வாய்த்தால் அவள் எப்படி எல்லாம் இருப்பாள் என்பதற்கு சேலத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வரின் ஏழு நிமிடப் பேச்சு எடுத்துக்காட்டாகும். தமிழக மக்களின் முழு ஆதரவோடு முதல்வர் ஆகியிருந்தால் அவருக்கு உண்மையான தாய்மனம் இருந்திருக்கும். காமராஜர், அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் அலங்கரித்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சர்வாதிகாரதத் தொணியில் முதலமைச்சர் பேசியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இம்மாநிலத்தை ஆண்ட காலங்களில் கூட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கப் பார்த்தாரே தவிர அவர்களைப் பழித்துப் பேசியதில்லை. தர மறுத்தாரே தவிர தரங்கெட்டுப் பேசியதில்லை. ஒருசில போராட்டங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா தாய் மனதோடு இறங்கி வந்து உரிமைகளை சிறிதேனும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். 110 விதியின் கீழ் உறுதிமொழிகள் அளித்திருக்கிறார். ஆனால் இந்திய வரலாற்றில் முதன்முறையாக... ஒரு முதலமைச்சர் தன்கீழ் பணிபுரியும் ஊழியர்களை சகட்டு மேனிக்கு வார்த்தைகளால் தரம்தாழ்ந்து பேசியிருப்பது தமிழக வரலாற்றிலேயே இதுவே முதல்முறை.

இந்தியாவிலேயே போராட்டங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், அதற்குக் காரணம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அரசியல் எதிர்கட்சிகள் என்று தன்னுடைய திறமையின்மையை ரொம்பப் பெருமையாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி. ஜெயலலிதா ஆண்ட காலங்களில் போராட்டங்களே நடக்கவில்லையா? அதை அவர் எப்படி கையாண்டார்? முதல்வர் எப்படி கையாள்கிறார்? ஜெயலலிதா போராட்டத்தின் உக்கிரத்தைப் பார்த்து ஏதாவது அறிவிப்பு அல்லது அரசாணை வெளியிட்டு அனுசரித்துப் போனார். ஆனால் முதல்வர் பழனிச்சாமியோ நீ எத்தனை போராட்டம் வேண்டுமாமனாலும் நடத்திக்கோ நான் ஒன்றும் கேக்கமாட்டேன் என்றால், தாங்கள் தாங்கியிருக்கும் மன்னன் என்ற மணிமகுடம் வெகுவிரைவில் மண்ணில் உருளப் போகிறது என்று பொருள்.

போராடுபவர்கள் எல்லாம் அரசியல் கட்சியினரும், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மட்டுமே என்று சொல்லும் எடப்பாடிக்கு ஒரு கேள்வி. மக்கள் யாருமே உங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லையா? ஜல்லிக்கட்டு தொடங்கி ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, காவிரி போராட்டம், விவசாயிகள் போராட்டம், ஜாக்டோ-ஜியோ போராட்டம், மருத்துவ மாணவர்கள் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் திமுக, பாமக, மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்தியவையா எட்டுவழி நாயகரே?

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரூ.82000 ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், பொறியியல் படித்த நம்ம பையன் ரூ.50,000/-ஐ பத்து வருஷம் ஆனாலும் தாண்டறதே கஷ்டம் என்றும் பேசிய முதல்வர் எடப்பாடி, நல்ல வேளை எல்லா பசங்களையும் வாத்தியார் வேலைக்கு போகச் சொல்லாமல் விட்டுவிட்டது ஆச்சர்யம்தான். ஆசிரியரை விட அதிக படிப்பு படித்த பொறியாளர்கள் அவர்களை விட குறைந்த ஊதியம் பெறுவதாக கூறிய முதல்வர், எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.1,10,000/-ஐ தொகுதி பக்கமே வராமல் ஐந்து ஆண்டுகளுக்கு சுளையா வாங்கறதையும், பல சலுகைகளை இலவசமாக அணுபவிப்பதையும் அடுத்தமுறை எம்எல்ஏ ஆனாலும் ஆகாவிட்டாலும் பென்ஷன் வாங்கப் போறதையும் சொல்லாமல் விட்டுவிட்டது ஆச்சர்யமும் இல்லை; அதிசயமும் இல்லை, ஆச்சரியமும் சொல்லும் முதல்வர் எடப்பாடி, அவ்வளவு கொடுத்தும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதுவும் போதலைன்னு போராட்டம் நடத்துறாங்கன்னு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார். ஐயா இல்லை, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ரூ.14,719/- கோடியை சம்பள உயர்வாக வாரி வழங்கியதாக முதல்வர் எடப்பாடி அவர்களே, நீங்க கொடுத்ததாக சொல்லும் ரூ.14,719 கோடி நீங்க கொடுத்தது இல்லை. அது நாங்க போராடி உங்களை நீதிமன்றத்திற்கு வரவழைத்து வாங்கியது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் அன்று கைபிடித்து அ, ஆ சொல்லிக் கொடுக்கவில்லை என்றால், இன்று கோட்டையில் முதல்வரோ அவர்களுடன் உள்ள அமைச்சர்களோ கையெழுத்துக்கூட போடி முடியாது என்பதனை எடப்பாடி உணர வேண்டும். ஜெர்மனியில் நீதிபதிகளைவிட ஆசிரியர்களுக்கே ஊதியம் அதிகம் என்பதனையும் முதல்வர் உணர வேண்டும். 21 மாத கால போராட்டத்துக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் உங்களை சம்பள உயர்வு கொடுக்க வைத்தது எங்கள் போராட்டமும், அதன் காரணமாக எழுந்த நீதிமன்றத் தலையீடும் தான். அதிலும் நீங்கள் ஆதாயம் தேடும் வகையில் ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி கொடுத்ததாகத் சொல்வது உலகமகா ஆணவமாகும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க மறுத்தது கயமைத்தனம். அதேசமயம் எந்தப் போராட்டமும் நடத்தாத, இருக்கற பணத்தையே என்ன பண்றதுன்னு தெரியாம அல்லாடிக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை திருப்திப்படுத்த அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கேட்காமலேயே 110 சதவீத ஊதிய உயர்வு வழங்கியது சுத்த நயவஞ்சகத்தனம்.

"என்னென்னவோ போராட்டம் நடத்தி இந்த ஆட்சியை கலைக்கப் பார்த்தார்கள். களங்கம் கற்பிக்கப் பார்த்தார்கள். அத்தனையும் சரியான முறையில் கையாண்டு சரியான நிவாரணம் வழங்கி திருப்திப்படுத்தியிருக்கோம்" என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி. சரியான முறையில் எதைக் கையாண்டார்? யாருக்கு என்ன நிவாரணம் வழங்கி திருப்திப்படுத்தினார் இவர்? அவருடைய பேச்சிலேயே அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், எதன் காரணமாக இந்த ஆட்சி நீண்டு கொண்டிருக்கிறது என்பது பாரறிந்த ரகசியம். கோமா நிலையில் இருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு, மேலே இருந்து ஒருவர் ஆக்சிஜன் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆட்சி ஒரு வருடத்திற்கும் மேலாக வாசலாடிக்கொண்டிருக்கிறது. இதைத்தான் உலகமகாசாதனையாக எடப்பாடியும், அவரது சகாக்களும் கொண்டாடுகிறார்கள்.

சென்ற முறை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது அமைச்சர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு சம்பளமாக அரசின் வருவாயிலிருந்து 70 சதவீதம் வரை செலவழிக்கப்படுவதாக பத்திரிகைகளில் காசு கொடுத்து விளம்பரம் கொடுத்திருந்தார். ஆனால் இப்போதோ எடப்பாடி அதை 61 சதவீதமாக குறைத்து கூறியுள்ளார். இந்த அமைச்சர்களின் பேச்சு 'இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தைத்தான் ஞாபகப்படுத்துகிறது. இவர்கள் எல்லாம் எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கணக்குப் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக்கியே தீருவோம் என்று சூளுரைத்துப் பேசுகிறார்கள். நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு அதன்பேர் அதிமுக அமைச்சரவை என்றாகி வருவதை தமிழகம் தினந்தோறும் கண்டு வருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தைரியமிருக்குமேயானால், போராட்டம் நடத்துகிறவர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் தான் பொதுமக்கள் இல்லை என்று சவால் விடுப்பாரேயானால், இந்த ஆட்சியில் மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள் என்று அவர் உறுதி கூறுவாரேயானால், இந்த அமைச்சரவையைக் தேர்தலைக்கூட நடத்த திறமையற்றவர்களாக இருக்கிறீர்கள். எட்டுவழிச் சாலை போட காட்டும் கலைத்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வென்று காட்ட வேண்டும். குறைந்தபட்சம் உள்ளாட்சித் ஆர்வத்தை மற்ற விஷயங்களில் காட்டாததிலிருந்து நீங்கள் செய்யும் ஆட்சி என்னவென்று மக்களுக்கு கொள்ளை என ஏராளமான சுழல் மயம் கொண்டவர்கள், நேர்மையாக மக்கள் பணி செய்து நன்றாகவே புரிந்துள்ளது, மணல் கொள்ளை, அரிசி கொள்ளை, காண்டிராக்ட் கொள்ளை, அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு, தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு என்று மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் நிர்வாகத்தை திறம்பட நடத்த ஏதுவாக இருக்கும் அரசு ஊழியர்கள் மீதும், பள்ளிக்கூட அறையில் நாளைய சமுதாயத்தை நல்லதொரு சமுதாயமாக உருவாக்க உழைக்கும் ஆசிரியர்கள் மீதும் சேற்றை வாரி இறைத்திருப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதற்கு ஒப்பாகும்,

எடப்பாடி பழனிச்சாமி எப்படிப்பட்ட ஆசாமி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் வகிக்கும் முதல்வர் என்ற உன்னதமான பதவியின் மாண்பை பாதுகாக்க, தான் பேசிய பேச்சுக்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிபபு கேட்டாலும் கேட்காவிட்டாலும் அரசு ஊழியர்களும்- ஆசிரியர்களும் இனி அவரை மன்னிப்பதாக இல்லை. இருக்கும் நாற்காலியிலிருந்து அவரை அகற்றும் வரை பகை முடிக்கும் பணி முடிக்க அரசு ஊழியர்-ஆசிரியர் படை திரளும் மக்கள் புடைசூழ!

கேட்காத கடனும்... தீர்க்காத பழியும்... வீண், வீண், வீணே...!

முதல்வரின் கண்ணியமற்றப் பேச்சினை கண்டித்து 9-8-2018 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.

- ஜாக்டோ ஜியோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்