அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, மாநகராட்சி உயர், மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி, அப்பணியிடங்களில் பணியாற்றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கயத்தாறு சிறப்புரையாற்றினார். திருநெல்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் இசக்கியப்பன் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநிலப் பொருளாளர் மதலைமுத்து புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்.மாநில அமைப்புச் செயலாளர் அருணகிரியார் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார். நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ் கோரிக்கையை விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார். தலைமையிடச் செயலாளர் வெங்கடேசன் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5000க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
.