தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

23.2.13

மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


நாள்: 26.02.2013 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி

இடம்: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில்.

கோரிக்கை: அரசு /அரசு உதவிபெறும் / நகராட்சி / மாநகராட்சி உயர், மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி, அப்பணியிடங்களில் பணியாற்றும் 25000 இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.

தலைமை : அந்தந்த மாவட்டத் தலைவர்கள்

சிறப்புரை : மாநில பொறுப்பாளர்கள்

வாழ்த்துரை : தோழமை சங்க நிர்வாகிகள்

கோரிக்கை நியாயங்கள்

அரசு / அரசு உதவிபெறும / நகராட்சி / மாநகராட்சி உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பாடம் கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி ஓய்வு பெறும் பொழுது அரசாணை(நிலை) எண். 100 பள்ளிக்கல்வி(பட்ஜெட்)த் துறை நாள்: 27.06.2003-இன் படி அந்த இடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதனால் இனி உயர், மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் நடைபெறாத நிலையில், இடைநிலை ஆசிரியர் பணித்தொகுதி முழுவதும் முடிவுறு பணித்தொகுதியாக மாறியுள்ளது.

தற்போது 6,7,8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் பாடம் கற்பிக்கும் சூழலில் ஒரே பணி - இரு வேறு ஊதியம் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருபது, முப்பது ஆண்டுகளாக எந்தவித பதவியுயர்வு வாய்ப்புகளும் இன்றி தவித்துவரும் இடைநிலை ஆசிரியர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை தாங்கள் பணிபுரியும் பணியிடத்திலேயே பட்டதாரி ஆசிரியராக நிலை உயர்த்தி பணி மாற்றம் செய்திட வேண்டும் என்ற நமது உயர் கோரிக்கைக்காக கடந்த ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
  • ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் முரண்பாடுகளை களைந்து முறையான ஊதியம் வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அரசு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்குவதாக வழக்கை திசை திருப்பிவிட்ட நிலையில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
  • இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது எனத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. 
  • 2007 பிப்ரவரியில் வள்ளுவர் கோட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை ஒன்று திரட்டி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 
  • 2007 நவம்பரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் அப்போதைய கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். 
  • 2008 டிசம்பரில் 13-இல் கோட்டை நோக்கி பேரணி எனத் திட்டமிடப்பட்டு பின்னர் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்ட நிலையில் காவல்துறையே அஞ்சும் வகையில் ஆர்ப்பாட்டமா? மறியலா? என வியக்கும் வண்ணம் 5000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
  • கோரிக்கை விளக்க கருத்தரங்குகள், கருப்பு பேட்ஜ் அணிதல், ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், என பல்வேறு போராட்டங்கள் மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட்டுள்ளன. 
  • பல்வேறு முறை பள்ளிக்கல்வி இயக்குநர், இணை இயக்குநர், கல்விச் செயலர், இணைச் செயலர், கல்வி அமைச்சர், அனைத்து கட்சிகளின் தலைவர்கள் எனச் சந்தித்து நமது கோரிக்கையை எடுத்துக் கூறியுள்ளோம்.
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற நமது மாநில பொதுக்குழுவின் முடிவின்படி மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 26.02.2013 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறுகிறது.

அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் தவறாமல் கலந்து கொண்டு நமது நியாயமான கோரிக்கையை வென்றெடுப்போம்.

இடைநிலை ஆசிரியர் பேரினமே! அணி திரள்வீர்!! 

போராடுவோம்!!! கோரிக்கையை வென்றெடுப்போம்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், மாநில அமைப்பு.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்