தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.2.12

தடையில்லா மின்சாரம் கிடைக்க அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்

மின்வாரியம் அறிவித்துள்ள மின்வெட்டு காரணமாக பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்காக அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கு அரசு ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தித் தரும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புதிய மின்வெட்டுத் திட்டத்தை .தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. இது நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எடுக்காத காரணத்தால், தமிழ்நாடு தற்போது மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சி காலத்தில் 206 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கூடுதலாக ஏற்படுத்தப்பட்டது.

என்னுடைய முந்தைய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தித் திட்டங்களைக் கூட முந்தைய தி.மு.க. அரசு செயல்படுத்த தவறிவிட்டது. மேலும், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களும் உரிய காலத்தில் முடிக்கப்படாததால், நமக்குத் தேவையான மின்சாரம் கிடைக்கப் பெறவில்லை.

முந்தைய தி.மு.க. அரசு அன்றாடம் வெளிச் சந்தையிலிருந்து மின்சாரம் வாங்குவதையே வழக்கமாக கொண்டிருந்தது. எனவே, நீண்டகால மின்சார கொள்முதலுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தினை பெற இயலவில்லை.

இது தவிர, மின் கடத்தும் மின் தொடர் அமைப்பில், அதாவது, மின் தொடர் நெருக்கடி உள்ளதன் காரணமாக, வெளி மாநிலங்களிலிருந்து தேவையான மின்சாரம் பெற இயலவில்லை. உதாரணமாக, குஜராத் மாநிலத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கான ஒரு ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இருந்தாலும், தற்போதுள்ள மின் தொடர் நெருக்கடியின் விளைவாக, அதிலிருந்து தற்போது 235 மெகாவாட் அளவிற்கே மின்சாரம் பெற இயலுகிறது. இதன் விளைவாக, மின் இருப்புக்கும், மின் தேவைக்கும் இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறை குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் 17.2.2012 மற்றும் 23.2.2012 ஆகிய நாட்களில் நான் விரிவாக ஆய்வு நடத்தினேன். தமிழ்நாட்டில் தற்போது மின் தேவையின் அளவு 11,500 முதல் 12,500 மெகாவாட் என்று உள்ள நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி நிலையங்கள், மத்திய மின் தொகுப்பு மற்றும் இதர இனங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம் 8,500 மெகாவாட் என்ற அளவில் தான் உள்ளது.

அதாவது, 3000 முதல் 4,000 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை உள்ளது. எனவே, கிடைக்கப் பெறும் மின்சாரம் குறையும் போது, அறிவித்ததற்கும் மேலான மின்வெட்டு தவிர்க்க இயலாததாகிறது என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு முறையாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன்.

தற்போதுள்ள இக்கட்டான மின் நிலைமையை சமாளிக்கும் வகையிலும், தொழில் துறையினர் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த உள்ள மின் விநியோக கட்டுப்பாட்டு முறைகளை 25.2.2012 அன்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்த உள்ள இந்த மின்வெட்டு காரணமாக, பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதால், அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், அவ்வாறு இயலாத சூழ்நிலையில், மின்வெட்டு உள்ள நேரங்களிலும், தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில், அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்கும். ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உட்பட அனைத்துச் செலவையும் அரசே ஏற்கும்.

இதே போன்று அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவினை அரசு அவர்களுக்கு ஈடு செய்யும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 நன்றி:

குறுவள மைய பயிற்சி - அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநரின் கடிதம்

SSA Directer Proceedings Rc.no.87 - March CRC

ஏப்ரலில் ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு - ரூ.5 ஆயிரம் உழைப்பூதியம்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரலில் துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே வருவாய்த்துறை மூலம் சமூகப்பொருளாதார ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தற்போது நகராட்சி, மாநகராட்சி அளவில் தனியாகவும், ஊராட்சி ஒன்றியங்களில் பி.டி.ஓ.,க்கள் தலைமையிலும், பேரூராட்சிகளில் நிர்வாக அலுவலர்கள் தலைமையிலும் கணக்கெடுப்பு நடக்க உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அடிப்படையில் கணக்கெடுப்பு பகுதிகள் பிரிக்கப்பட்டு, ஏப்ரல் முதல் பணிகள் துவங்குகின்றன.

ஒவ்வொரு கணக்கெடுப்பாளரும், 150 வீடுகள் வரை கணக்கெடுக்க உள்ளனர். 40 நாட்கள் நடக்கும் இப்பணிக்காக ஒரு ஊழியருக்கு ரூ.5 ஆயிரம் ரூபாய் உழைப்பூதியம் வழங்கப்படுகிறது.

நன்றி:

காணாமல் போன ஊழியரின் மகளுக்கு கருணை அடிப்படையில் பணி: மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

மனநிலை சரியில்லாமல் காணாமல் போன மாநகராட்சி ஊழியரின் மகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க மறுத்ததை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. கருணை அடிப்படையில் பணி வழங்கவும், மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. 

சென்னை மாநகராட்சியின் லாரி டிப்போவில் கிளீனராக நாராயணன் என்பவர் பணியாற்றினார். பணியில் இருக்கும் போது விபத்து ஏற்பட்டதால், நாராயணனுக்கு மனநிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் போதே, அங்கிருந்து மாயமாகி விட்டார். நாராயணனின் மனைவி, ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார். அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை என்று, 13 ஆண்டுகளுக்குப் பின், போலீசார் சான்றிதழ் வழங்கினர். 13 ஆண்டுகளாக எங்கு இருக்கிறார் என தெரியாததால், அவர் இறந்துவிட்டதாக கருதி, முன்சிப் கோர்ட்டும் 2000ம் ஆண்டு உத்தரவிட்டது. 

கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி, நாராயணனின் மகள் பத்மாவதி, மாநகராட்சிக்கு மனு அனுப்பினார். "காணாமல் போனவரின் வாரிசுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது' என, மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முன்சிப் கோர்ட் வழங்கிய உத்தரவை இணைத்து, மீண்டும் மனு அனுப்பினார். இதை பரிசீலித்த மாநகராட்சி, பத்மாவதிக்கு திருமணமாகி விட்டதால், கருணை அடிப்படையில் வேலை வழங்க பரிசீலிக்க முடியாது என கூறியது. 

இதையடுத்து, ஐகோர்ட்டில் பத்மாவதி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: முதலில் விண்ணப்பம் அளிக்கும் போது, எனக்கு 18 வயது. அப்போது, எனக்கு திருமணம் ஆகவில்லை. பணி நியமனங்களுக்கு தடை இருந்ததால், எனது விண்ணப்பம் அப்போது பரிசீலிக்கப்படவில்லை. மாமாவை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை காரணம் காட்டி, எனது விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது. எனக்கு பணி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இம்மனுவை நீதிபதி சிவஞானம் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பி.சாலமன் ஆஜரானார். 

நீதிபதி சிவஞானம் பிறப்பித்த உத்தரவு
இதுபோன்ற ஒரு வழக்கில், ஐகோர்ட் 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. எனவே, மாநகராட்சியின் உத்தரவை ஏற்க முடியாது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை பரிசீலித்து, கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தேவைப்பட்டால், வயது தகுதியை தளர்த்தலாம். மாநகராட்சியின் இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 

இவ்வாறு நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.
 
நன்றி:

21.2.12

ஆசிரியர் தகுதித் தேர்வு பாடத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மே இறுதியில், ஆசிரியர் தகுதித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. 

இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை, ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை, எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாடத் திட்டம் இந்த அளவில் இருந்தாலும், விண்ணப்பதாரர்களை சிந்திக்க வைக்கும் வகையில், அதிகளவில் கேள்விகள் இடம்பெற உள்ளன.
 

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களை இறுதி செய்து, அரசின் ஒப்புதலுக்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பி வைத்தது. இதற்கு, அரசு தற்போது ஒப்புதல் அளித்து விட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்த விவரங்கள், அரசு கெஜட்டில் வெளியான பின், தகுதித் தேர்வு குறித்த அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். இந்தப் பணிகள் அனைத்தும், 10 நாட்களுக்குள் நிறைவடைய வாய்ப்புகள் இருக்கின்றன என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி:

 

ஏப்ரலில் மீண்டும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு:தேர்வுத்துறை அறிவிப்பு

நேரடி எட்டாம் வகுப்பு தனித்தேர்வு, ஏப்ரலில் நடைபெறும் நிலையில், இன்று முதல், மார்ச் 2ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

இயக்குனரின் அறிவிப்பு
  • வரும் ஏப்ரலில், நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். 
  • ஏப்., 1ம் தேதியன்று, 12.5 வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள், 21ம் தேதியில் இருந்து (இன்று), மார்ச் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 
  • தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் இருந்து, விண்ணப்பங்களை பெறலாம். 
  • தேர்வுக் கட்டணமாக, 125 ரூபாயை, "டிடி'யாக செலுத்தாமல், கருவூல செலுத்துச்சீட்டு மூலமாகவே செலுத்த வேண்டும்.
விதிமுறைகள்:
  • வயது குறித்த பிறப்புச் சான்றிதழின் நகலை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 
  • இத்தேர்வை எழுத, குறைந்தபட்ச கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. 
  • அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், எட்டாம் வகுப்பிற்கும் கீழ் வகுப்புகளில் படித்து இடையில் நின்றவர்களும், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • ஏற்கனவே இத்தேர்வை எழுதி, சில பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, பழைய பாடத்திட்டத்தின் கீழ், இந்த தேர்வு மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கும் தேர்வு ஆகிய, இரு தேர்வுகளுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படும். அதன்பின், 2014 ஏப்ரலில் நடக்கும் தேர்வை, புதிய பாடத் திட்டத்தின் கீழ், அனைத்து தேர்வுகளையும் எழுத வேண்டும்.
  • புதிய தேர்வர்கள், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தேர்வை எழுத வேண்டும்.
  • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறும். 
  • மொழிப் பாடத்தை தவிர, மற்ற பாடங்களின் விடைகளை, தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே அளிக்க வேண்டும்.
இவ்வாறு வசுந்தரா கூறியுள்ளார்.

அரசாணை (நிலை) எண்: 36 பள்ளிக்கல்வி(வி1) துறை நாள்: 17-02-2012

நன்றி:



18.2.12

தஇஆச மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது.


நாள்
19-02-2012, ஞாயிறு காலை 10:00 மணி


இடம் 
பிஷப் ஷூப்பர் மேல்நிலைப் பள்ளி, தெப்பகுளம், திருச்சி.


தலைமை 
திரு. G. குமார், மாநிலத் தலைவர்


விளக்க உரை 
திரு. M. குமரேசன், மாநிலப் பொதுச்செயலாளர்


வரவு செலவு அறிக்கை 
திரு. T. உதயசூரியன், மாநிலப் பொருளாளர்


பொருள்
  •   பள்ளிக் கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வி இயக்குநர் உடனான பேச்சுவார்த்தை
  • தஇஆச மாநில தேர்தல்
  • இன்ன பிற...

15.2.12

எட்டாம் வகுப்புத் தேர்வை மீண்டும் நடத்த உத்தரவு: படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு மட்டும் அனுமதி

ரத்து செய்யப்பட்ட நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை, மீண்டும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வில், மாணவர்கள் கலந்துகொள்ள முடியாது; படிப்பை பாதியில் விட்டவர்கள் மற்றும் வயது அதிகமானவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
 
முதலில் ரத்து: பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்கள் மற்றும் படிப்பை பாதியில் விட்டவர்கள், வீட்டில் இருந்தபடியே படித்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வசதி, பல ஆண்டுகளாக தேர்வுத்துறையில் இருந்து வந்தது.இந்நிலையில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், 'எட்டாம் வகுப்பு வரை, அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும்' என இருக்கிறது. இப்படி இருக்கையில், நேரடி தனித்தேர்வை நடத்தி, தேர்ச்சி, தோல்வியை வெளியிடுவது சரியாக இருக்காது என்பதால், கடந்த 2010ம் ஆண்டுடன், தமிழக அரசு இத்தேர்வை ரத்து செய்துவிட்டது.
 

மீண்டும் தேர்வு: சாதாரண வேலை, ஓட்டுனர் உரிமம், ரயில்வேயில் கலாசி வேலை போன்றவற்றுக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ஆகையால், படிப்பை பாதியில் விட்டவர்கள், மீண்டும் தேர்வெழுத வசதியாக, ரத்து செய்யப்பட்ட எட்டாம் வகுப்பு நேரடி பொதுத்தேர்வை மீண்டும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

வழக்கமாக, 12 வயது, ஆறு மாதங்கள் நிறைவடைந்த மாணவர்கள், நேரடி எட்டாம் வகுப்புத் தேர்வை எழுதலாம். ஆனால், புதிய விதிமுறைப்படி, நேரடி தேர்வில், இனி இவர்கள் பங்கேற்க முடியாது; பள்ளிகளில் சேர்ந்து தான் படிக்க வேண்டும்.
 
பல ஆண்டுகளுக்கு முன், பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் மட்டுமே, நேரடி எட்டாம் வகுப்பு தேர்வில் பங்கேற்கலாம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்தேர்வு, வரும் டிசம்பரில் இருந்து மீண்டும் நடக்கும். 


அனைவரும், 'பாஸ்!': கட்டாயக் கல்வி சட்டம் அமலுக்கு வந்தபின், 2010ல் நடந்த, நேரடி எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக, சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல், இனி நடக்கும் தேர்வுகளிலும் பின்பற்றப்படும். எனவே, பெயரளவுக்கு மட்டுமே இத்தேர்வு நடக்கும்.

நன்றி:

 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக 8 லட்சம் விண்ணப்பங்கள் : விண்ணப்பம் ரூ.50; தேர்வுக் கட்டணம் ரூ.500

மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாயாகவும் நிர்ணயிக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
 

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வும், அதன் பின், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வும் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், இரண்டாம் ஆண்டு படிப்பவர்கள், பி.எட்., முடித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்களுடன், 2010, ஏப்., 1ம் தேதிக்குப் பின் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும், தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
 

5 லட்சம் பேர்; ரூ.27 கோடி வருவாய்: குறைந்தது, ஐந்து லட்சம் முதல், அதிகபட்சம், ஆறு லட்சம் பேர் வரை தேர்வில் பங்கேற்பர் என எதிர்பார்ப்பதாகவும், கடைசி நேரத்தில், விண்ணப்பங்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்களை விற்பனை செய்ய, தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாயாகவும் இருக்கும் என்றும், தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்தால் கூட, தேர்வு வாரியத்திற்கு, 27.50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
 

பாடத்திட்டம்: இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு பிரிவினருக்கு, தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும், தலா, 150 மதிப்பெண்களுக்கு, பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம், உளவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், ஒவ்வொன்றில் இருந்தும் தலா, 30 மதிப்பெண்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில், தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களாக, 90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

விரைவில் ஒப்புதல்: பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் எனக் கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.

நன்றி:

 

13.2.12

'தானே' புயல் நிவாரணம் - ஆசிரியர்கள் மற்றும்அரசு ஊழியர்களின் பங்கு மட்டும், 60 கோடி

'தானே' புயல் நிவாரணத்துக்காக, முதல்வர் விடுத்த அழைப்பை ஏற்று, அதிகளவு நன்கொடை குவியும் என எதிர்பார்த்த நிலையில், தொழில் துறையினரிடம் இருந்து, அதிக நிதி வரவில்லை. இதுவரை கிடைத்துள்ள, 103.87 கோடி ரூபாயில் பெரும் பகுதி, ஆசிரியர்கள் அரசு ஊழியர்களிடம் இருந்தே பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

'தானே' புயல் நிவாரணத்திற்கு, பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்கும்படி, கடந்த மாத துவக்கத்தில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, அரசு ஊழியர் சங்கங்கள் தாங்களாக முன்வந்து, தங்கள் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ளும்படி, கோரிக்கை விடுத்தன.
 

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கு: அதை ஏற்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை வாரியங்கள் ஆகியவற்றின், ஊழியர்களது ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுவரை, 103.87 கோடி ரூபாய் வசூலான நிலையில், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பங்கு மட்டும், 60 கோடி ரூபாய் வரை இருக்கும். அதிகபட்சமாக, டாஸ்மாக் சார்பில் ஏழு கோடி ரூபாயும், மின் வாரியம் சார்பில் எட்டு கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. 

நிறுவனங்கள்: தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை, லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், 2.35 கோடி ரூபாய் வழங்கியது. மற்றபடி, பல்வேறு வங்கிகள் தலா ஒன்று மற்றும் இரண்டு கோடி என, வழங்கி உள்ளன. அமால்கமேஷன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் நிதி வழங்கின; சிறிய நிறுவனங்கள் அதிகளவில் நிதி வழங்கவில்லை.
 

நன்றி:

வருமான வரி விலக்கு வரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்த பார்லிமென்டரி நிலைக்குழு பரிந்துரை

தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை, ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கலாகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் பட்ஜெட் அமையும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வருமானவரி உச்சவரம்பினை 2 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாயின. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு தற்போது, ரூ.1.8 லட்சமாக உள்ளது. இதை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, பார்லிமென்டரி நிலைக்குழு பரிந்துரை செய்தது. மேலும் நேரடிவரிவிதிப்பில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்படலாம் எனவும், அத்துடன் 10 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு மட்டுமே, 30 சதவீத வருமான வரி விதிக்கலாம் என்றும் கூறியது. 


தற்போது 8 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு, 30 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது. 2.5 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதமும், 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும், 10 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு 30 சதவீதமும் வரி விதிக்க வேண்டும். பணவீக்கம் அதிகரித்துள்ளதைத் தவிர்க்க, இதைச் செய்ய வேண்டும்' என, பரிந்துரை செய்யவிருக்கி்றது..

இவற்றை மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அதனால், வருமான வரி விலக்கு வரம்பு, அதிகரிப்பு மற்றும் வருமான வரி வீதங்களில் மாற்றம் போன்றவை தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது பற்றி பாராளுமன்ற நிலைக்குழு இன்று விரிவான ஆலோசனை நடத்துகிறது.


 நன்றி:


9.2.12

குழப்பம் தீர்ந்தது; விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு?

ஆசிரியர் தகுதித் தேர்வா, நேரடி போட்டித் தேர்வா? என்ற, பல மாத குழப்பம், ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

மே இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், இதுகுறித்த விளம்பரத்தை விரைவில் வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கி உள்ளது.

யாருக்கு அனுமதி?

இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது: மே மாத இறுதியில், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த உள்ளோம். இதற்கான அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதி கொண்ட அனைவரும், இத்தேர்வில் பங்கேற்கலாம். ஏப்., 1, 2010க்கு பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களும், இத்தேர்வில் பங்கேற்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும், தனியார் பள்ளிகளில், இந்த வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களும் எழுத வேண்டும். ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும், பி.எட்., படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கேள்வித்தாள் விவரம்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கேள்வித்தாள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்வித்தாள், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் அடிப்படையிலும் இருக்கும். பொது அறிவை சோதிக்கும் வகையிலான கேள்விகளும் இடம் பெறும், என கூறப்படுகிறது.

போட்டித் தேர்வு?

மே இறுதியில் தேர்வு நடந்ததும், உடனடியாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, அடுத்த போட்டித் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து, முடிவு எடுக்கப்படவில்லை.

ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டம்

நடப்பு கல்வியாண்டில், 28 ஆயிரத்து 201 ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில், 2,895 முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு போட்டித் தேர்வும், மற்ற ஆசிரியர்களுக்கு இரு வகையான தேர்வும் (தகுதித் தேர்வு மற்றும் முக்கிய போட்டித் தேர்வு) நடத்தப்படும்.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்குள், அனைத்து தேர்வுப் பணிகளையும் முடித்து, இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் அடுத்த கல்வியாண்டில், காலாண்டுத் தேர்வுக்கு முன்னதாக பணியில் சேர்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு வாரியத்தின் மொத்த பணியாளர்கள் 14 பேர்
ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் முக்கியப் பொறுப்பு வாய்ந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைமை, மிகவும் பரிதாபமாக உள்ளது. வாரியத்தில், அதிகாரிகளைத் தவிர்த்து, அலுவலக பிரிவுகளில் வெறும், 14 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்களில்; மூன்று உதவியாளர் பணியிடங்களும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும், ஒரு சுருக்கெழுத்தர் பணியிடமும் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதுடன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களே இல்லாத குறையையும் முதல்வர் போக்க வேண்டும் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது.

குறைந்தது, ஐந்து கணினி இயக்குனர்களை நியமனம் செய்ய, முதல்வர் உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

அதிகாரிகள், பணியாளர்கள் விவரம்


ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர்-1, உறுப்பினர் - செயலர்-1, உறுப்பினர்-1, கூடுதல் உறுப்பினர் -2, கண்காணிப்பாளர்-2, உதவியாளர்-4, இளநிலை உதவியாளர்-3, தட்டச்சர்-3, ஸ்டெனோ-2.


நன்றி:
 

சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பெண் ஆசிரியர் கத்தியால் குத்தி கொலை


பள்ளியில் நடத்தை குறித்து பெற்றோர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பியதால் ஆத்திரமுற்ற மாணவன் ஒருவன் சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பெண் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்து 500 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி 150 ஆண்டுகள் பழமையானவை. இங்குள்ள மாணவ, மாணவிகள் மீது மிகுந்த அக்கறையும், முழுக்கவனமும் எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் இங்கு 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் (15 வயது ஆவதால் பெயர் குறிப்பிட வில்லை) . இவன் சென்னை ஏழுகிணறு பகுதியில் வசித்து வருகிறான். இவரது தந்தை ரபீக் துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

வேதியியல் மற்றும் இந்தி பாடம் எடுக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி (39 ) . மந்தைவெளியை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வழக்கம் போல் பாடம் எடுத்து விட்டு 3 வது பாடவேளையின் போது மாற்று வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் மாணவன் ஆசிரியை நோக்கி ஆவேசமாக பாய்ந்தான். கையில் இருந்த கத்தியால் குத்தினான். இதில் 7 இடங்களில் குத்து விழுந்தது. மாணவன் கத்தியால் குத்தியதால் அதிர்ச்சியால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார். மாணவர்கள் அக்கம், பக்கம் ஓட துவங்கினர். கொலை செய்த மாணவன் எங்கும் ஓடாமல் வகுப்பறைக்குள்ளேயே இருந்தான். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியை உமாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இந்த சம்பவம் பள்ளியை சுற்றிஉள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மாணவனிடம் போலீஸ் விசாரணை
கைது செய்யப்பட்ட மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவனிடம் கேட்டதில் ; ஆசிரியை என்னுடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் என்னை பெற்றோர்கள் திட்டினர். எனவே எனக்கு பெரும் கோபம் ஏற்பட்டது. இதனால் குத்தி கொன்றேன் என்றான். இந்த மாணவன் அடிக்கடி பள்ளிக்கு வராமல் கட் அடிப்பான் என பள்ளி சக மாணவர்கள் கூறினர். 

கொலை வெறி., கொலைவெறி
சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவ ஒருவர் கூறுகையில், மாணவர்களின் ரிப்போர்ட் குறித்துஅவ்வப்போது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து விசாரித்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களது நிலைமை தெரிந்து அதற்கேற்ப பெற்றோர்கள் நடந்து கொள்ள முடியும். இப்போது வரும் சினிமாக்களை பார்த்து மாணவர்களின் மனம் மாறி விடுகிறது. கொலை வெறி., கொலைவெறி என்று பாடல்கள் எடுத்தால் நாட்டில் கொலை வெறிதான் தலை விரித்தாடும் என்றார். 
 
முன்னாள் போலீஸ் கமிஷனரின் உறவினர் ஆசிரியை : 

கொலை செய்யப்பட்ட ஆசிரியை , சென்னையில் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற நாஞ்சில் குமரனின் உறவினர் ஆவார். ஆசிரியை கொலை சம்பவம் கேள்வி பட்டதும் அவர் ஆசிரியை வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார், ஆசிரியை கொலை சம்பவம் அடுத்து அவரது வீட்டில் உறவினர்கள் கதறி அழுதபடி இருந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தூத்துக்குடியில் டாக்டர் ஒருவர் கிளினிக் உள்ளேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் மாணவன் , ஆசிரியை ஒருவரை கொலை செய்திருப்பது பெரும் கவலை அளிப்பதாக மனித நேய விரும்பிகள் கருத்து கூறியுள்ளளனர்.


நன்றி:

 

5.2.12

தாய் மொழி எதுவானாலும் பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: ஜெயலலிதா


தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தாய் மொழி எதுவாக இருந்தாலும், கட்டாயம் தமிழ் மொழியை படித்தே தீர வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

கோபிநாத் (காங்கிரஸ்) (தெலுங்கிலும், கன்னடத்திலும் அவர் பேசியதாவது):
தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என உள்ளது. இதனால் வேறுமொழி பேசும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம்
:
சிறுபான்மை மாணவர்கள் 6ம் வகுப்பில் இருந்துதான் தமிழ் படிக்க வேண்டும். தமிழ் மொழியை படிப்பவர்கள் எந்த மதிப்பெண் எடுத்தாலும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே அவர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் தான் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. ஆந்திராவில் கண்டிப்பாக தெலுங்கு படித்து ஆக வேண்டும். கர்நாடகாவில் கண்டிப்பாக கன்னடம் படித்தாக வேண்டும், கேரளாவில் மலையாளம் படித்தாக வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் படிப்பதில் எந்த தவறும் இல்லை.

கோபிநாத்
: தமிழ் படிக்க மாட்டோம் என்று நாங்கள் சொல்லவில்லை. பல பள்ளிகளில் தமிழை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லை.

அமைச்சர் சண்முகம்: கடந்த திமுக ஆட்சியில் அனைவரும் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால் அதற்கான தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவில்லை. அதை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோபிநாத்
: தமிழ் மொழியை கட்டாயம் படிக்க செய்வதால் சிறுபான்மை மாணவ- மாணவிகளுக்கு இருக்கும் பிரச்சனையை தெரிவித்தேன். நாங்கள் தமிழ் மொழிக்கு எதிரி அல்ல. எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா
:
தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்கள் தாய்மொழி எதுவாக இருந்தாலும் கட்டாயம் தமிழ் மொழி படித்தாக வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கர்நாடகத்தில் கன்னடம் படித்தாக வேண்டும், ஆந்திராவில் தெலுங்கு படித்தாக வேண்டும். அதுபோல் தமிழ்நாட்டில் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்பதில் எந்த தவறும் அல்ல. இதில் மாற்றமும் இல்லை.

உறுப்பினர் பேசும்போது, தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று குறிப்பிட்டார். அந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விவாதத்தின்போது எம்எல்ஏ கோபிநாத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தெலுங்கிலும், கன்னடத்திலும் பதில் தந்தார்.

நன்றி:

7 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு முடிவு


ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தை மையமாக வைத்து அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 2012 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தது. விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு எத்தனை சதவீதம் அகவிலைப்படி வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு 7 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனவரி 1ம் தேதியில் இருந்து இந்த அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்படும். அடிப்படை ஊதியம், கிரேடு சம்பளம் ஆகியவற்றில் ஏற்கனவே 58 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது உயரும் 7 சதவீதத்துடன் இனி 65 சதவீதம் பெறுவார்கள்.

நன்றி:

4.2.12

TNPGTA- வின் வேண்டுகோள்

Dear comrades,

We(TNPGTA) are going to file  2 cases.                     
  1. one is against CPS [Contributory  Pension scheme]
  2. the another 2nd is for Regularization of date of appointment.
Those who are interest to the above 2 cases kindly download & fill the application(A4 SIZE SHEET) and send XEROX copy of own appointment order & regularization order .

After filling  the above documents  send the same below mentioned address by POST.

G.ILANGO
State Law Secretary
64, bharathi illam
KG Pudur
Karur  639004                  
phone 9944164830
email id: ilangotnpgtakarur@gmail.com

.

3.2.12

பி.எச்டி., வரை ஆல் பாஸ் போட வேண்டும் - இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில், மாநில அளவில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், சேலம் ஜெய்ராம் கல்லூரியில் நடந்தது. இதில் நேற்று, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம் உரையாற்றினார். 

அவர் பேசியதாவது
இதுவரைக்கும், நம் கல்வி முறை, மாணவ, மாணவியருக்கு சரியான உற்று நோக்கலை தரவில்லை. பனைமரத்தில் ஆண், பெண் என, இரு பிரிவு உண்டு என்பதையும், அதை எப்படி அடையாளம் காண்பது என்பதையும், மாணவர்களுக்கு கற்றுத் தரவில்லை. ஆனால், அதற்கு பதில் பனைமரத்துக்கான பொட்டானிக்கல் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். 

மேல்நிலைக் கல்வியில் மாணவர் விரும்பிய குரூப் கொடுப்பதற்கும், 10ம் வகுப்பு மதிப்பெண்ணே அடிப்படையாக உள்ளது. இதனால் மாணவனுக்கு பிடித்த பாடம் ஒன்றாகவும், நாம் வழங்கும் பாடம் ஒன்றாகவும் உள்ளது. 450 மதிப்பெண் எடுத்தவர்கள் தமிழ் இலக்கியம் படிக்க விரும்பலாம். 250 மதிப்பெண் எடுத்தவர்கள் கணிதப் பாடத்தையும் விரும்பலாம். ஆனால், இதற்கெல்லாம், நமது தேர்வுக் குழு அனுமதிப்பதில்லை. இங்கு ஒரு தடவை சிறப்பு தமிழ் பாடத்தை எடுத்துவிட்டால், கடைசி வரை தமிழைப் படித்து தான் சாக வேண்டும்; அப்புறம் மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையெல்லாம் உடனடியாக மாறாது. 

எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் போடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்னைக் கேட்டால், பி.எச்டி., வரை ஆல் பாஸ் போட வேண்டும் என்பேன். கல்வி ஒரு அனுபவமாக இருக்க வேண்டும். ஒரு கப்பலில் பயணித்தால், அதில் உள்ள அனைவரும் அடுத்த கரைக்கு செல்ல வேண்டும். அதில் சிலரை நடுவில் தூக்கி எறிவது, எந்த விதத்திலும் நியாயமாகாது.


இன்று நாட்டில் மிகப்பெரிய அதிகார சக்தியாக விளங்குவது அரசியல். அதற்கு அடுத்து, பண பலம் மிக்கவர்களாக தொழில்அதிபர்கள். இந்த இரண்டிலும் இருப்பவர்கள், நம்மிடம் நல்ல மதிப்பெண் பெற்றவர்களா? நல்ல மதிப்பெண்ணுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை.

நமது கல்வி முறையிலும் மாபெரும் பிரச்னைகள் உள்ளன. பத்தாம் வகுப்பில் மாணவனை, படி படி என விரட்டிவிட்டு, 11ல் ப்ரீயாக விட்டு விடுகிறோம். மீண்டும், 12ம் வகுப்பில் விரட்டுகிறோம். அதே போல், பிளஸ் 2 பாடம், ஒரு கல்வியாண்டுக்காக, அதாவது ஜூனில் ஆரம்பித்து, மார்ச் வரை நடத்த தயாரிக்கப்பட்டது. பத்து மாதத்துக்கு புத்தகம் எழுத வேண்டியது. பின் அதை, ஆறு மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டியது; அதையும் "அபிஷியலாகவே' முடிக்கிறோம், அதுதான் வேடிக்கை. நீதிமன்றத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியுமா? எவ்வளவு பைத்தியக்காரத்தனம் பாருங்கள். இதையெல்லாம் மாற்ற வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் ஆசிரியர்கள், தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, சேலம் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

நன்றி:


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்