தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.12.10

தமிழகத்தில் மேலவை தேர்தல் நடக்குமா? தேர்தல் நெருங்குவதால் வாய்ப்பு குறைவு

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், மேலவைக்கான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. சட்டசபை தேர்தல் முடிவுக்குப்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மேலவை தேவையா என்பதையும், தேர்தல் நடத்துவது குறித்தும் புதிய ஆட்சியாளர்களே முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதனால், தமிழகத்தில் மேலவை அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க, கடந்த மே மாதம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசும் அதை ஏற்றது. தொடர்ந்து, பார்லிமென்ட் ஒப்புதலும், ஜனாதிபதியின் ஒப்புதலும் அடுத்தடுத்து கிடைத்தன. இதையடுத்து, ஜூலையே, மேலவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் துவக்கியது.சட்டசபை தேர்தல் போல அல்லாமல், புதிதாக ஆசிரியர்கள், பட்டதாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தொகுதிகள் பிரித்தல், அதற்கேற்ப வாக்காளர் பட்டியல் தயாரித்தல், அதற்கான அவகாசம் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் இதில் மேற்கொள்ள வேண்டியிருந்தது.கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்கான அவகாசமும் அளிக்கப்பட்டது. மழை வெள்ளம் காரணமாக, இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 16ம் தேதியுடன், பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வாய்ப்பு முடிவடைந்தது.

இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல், வரும் ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படுமென தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், ஓட்டுச்சாவடிகள் முடிவு செய்தல், தேர்தலுக்கான அட்டவணை தயாரித்தல், மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்குதல், பிரசாரத்துக்கு அவகாசம் வழங்குதல், அதன்பின் ஓட்டெடுப்பு நடத்துதல், ஓட்டு எண்ணிக்கை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.ஜனவரி 20ம் தேதிக்கு பின், இப்பணிகளை மேற்கொண்டால், மேலவைக்கான தேர்தலை ஏப்ரலில் தான் நடத்த முடியும். ஆனால், தமிழக சட்டசபைக்கு மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தேர்தல் நடத்தியாக வேண்டும். இதில், தேர்தல் கமிஷனும், மாநில நிர்வாகமும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.எனவே, மேலவை தேர்தலில் தேர்தல் கமிஷனும், அரசு நிர்வாகமும் கவனம் செலுத்த வாய்ப்பில்லை.

மேலும், சட்டசபை தேர்தலுக்கான அறிவிக்கை பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரம் வெளியிடப்பட்டு விடும். அவ்வாறு வெளியான பின், தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்களின் அதிகாரமும் குறைந்து விடும்.எனவே, பதவி முடியும் தறுவாயில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போட்டு மேலவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்படும். மேலும், மற்ற தேர்தலை போல மேலவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறாது. காரணம், மேலவை தேர்தலுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஓட்டளிக்க வேண்டும்.அதாவது, தனது முதலாவது ஓட்டு யாருக்கு, இரண்டாவது ஓட்டு யாருக்கு, மூன்றாவது ஓட்டு யாருக்கு என்ற வரிசையில், வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும். அவ்வாறு ஓட்டு போடுவதற்கு வாக்காளர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுதவிர, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் போதுமான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தாலும், ஓட்டு எண்ணிக்கை பற்றிய பயிற்சி மிகவும் அவசியமானதாகும். முன்னுரிமை அடிப்படையிலான ஓட்டுகளை எப்படி எண்ணுவது என்ற பயிற்சி, தற்போதுள்ள ஊழியர்களுக்கு கிடையாது. எனவே, அதுபற்றி விரிவான பயிற்சி அவசியமாகிறது.இவற்றை எல்லாம் கணக்கிட்டால், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மேலவை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, அடுத்த மே மாதம் புதிய அரசு அமைந்த பின், மேலவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மேலவை அவசியமா என்பது பற்றியும், மேலவை தேர்தலை நடத்த வேண்டுமா என்பது பற்றியும், புதிய அரசு தான் முடிவு செய்யும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய சட்டசபையில் புறக்கணிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு, மேலவையில் வசதி செய்யப்பட்டுள்ளது.புதிய தலைமைச் செயலக வளாகம் அமைந்த போது, அதுபற்றி விவரித்த முதல்வர் கருணாநிதி, ஒவ்வொரு வட்டமும் நாட்டின் ஒவ்வொரு தூண் என்றார். ஆனால், நாட்டின் நான்காவது தூண் என்றழைக்கப்படும் பத்திரிகைகள் பற்றி குறிப்பிடவில்லை. இதற்கு காரணம், புதிய சட்டசபை வளாகம் துவக்கப்பட்ட பின் தான் தெரிந்தது.நான்காவது தூணான பத்திரிகைகள் இதில் புறக்கணிக்கப்பட்டன. மிகவும் உயரமான மேல்தளத்தில், ஆளுங்கட்சிக்கு முதுகுபுறத்தில் பத்திரிகையாளர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து பாதியளவு கூட சட்டசபை தெரியவில்லை.

இதுபற்றி முறையிட்டதும், முதல்வரே மூன்று முறை மேலே வந்து, அங்கிருந்தபடி சட்டசபை நிகழ்ச்சிகளை பார்த்தார்.அப்போதும் அதிகாரிகள், பத்திரிகையாளர் மாடத்தை கீழே மாற்றலாம் என்று கூறாமல், தற்போது உள்ள இடத்திலேயே, கண்ணாடி போட்டு, சுவரை இடித்தால், சட்டசபை முழுமையாக தெரியும் என்று விளக்கினர். கண்ணாடிக்குள் இருந்தபடி அரைகுறையாக சட்டசபை நிகழ்ச்சிகளை பார்த்தாலும், ஆளும் வரிசையில் இருப்பவர்களது பேச்சுக்களை "டிவி' திரையின் மூலம் தான் பார்க்கும் நிலை இருந்தது.வருங்காலத்தில், சட்டசபைக்கு வெளியே பத்திரிகையாளர்களை நிறுத்தி, "டிவி'யில் நிகழ்ச்சிகளை பார்த்து கொள்ளுபடி கூறினாலும் ஆச்சரியமில்லை என, மூத்த பத்திரிகையாளர்கள் அப்போது தெரிவித்தனர். பத்திரிகையாளர் மாடத்திலேயே பார்வையாளர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தால், நிகழ்ச்சிகள் பற்றி செய்தி சேகரிப்பதில், மிகவும் சிரமம் ஏற்பட்டது.

மேலும், செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் மாறும் போது, வெளியே காத்திருப்பவருக்கு உள்ளே என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையும் இருந்தது. அடிக்கடி மேலேயும், கீழேயும் என இரண்டு தளங்கள் ஏறி இறங்க வேண்டிய நிலையில் இருந்தனர்.இந்நிலையில், மேலவை தற்போது தயாராகி உள்ளது. இந்த மேலவையில், மேல் தளத்தில் இடம் ஒதுக்க வாய்ப்பில்லை என்பதால், கீழேயே பத்திரிகையாளர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் புறக்கணிக்கப்பட்ட பத்திரிகைகளுக்கு, மேலவையில் இடம் ஒதுக்கியிருந்தது சற்று ஆறுதலான விஷயம்.எனினும், தற்போதைக்கு மேலவை அமைவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதால், இந்த ஆட்சியில், மேலவையில் செய்தி சேகரிக்க முடியாத வருத்தமும், பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்