தமிழக சட்டப்பேரவையின் மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று சட்ட மேலவைத் தேர்தல் ஆலோசகர் சி.ஆர். பிரம்மம் தெரிவித்தார்.
தமிழக சட்ட மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடந்தது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பிரம்மம் கூறியது:
சட்ட மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக சட்ட மேலவைக்கு 78 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மூலமாக 26 உறுப்பினர்கள்; உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலமாக 26 உறுப்பினர்கள்; ஆசிரியர் தொகுதி, பட்டதாரித் தொகுதி மூலமாக தலா 7 உறுப்பினர்களும் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 12 உறுப்பினர்களை ஆளூநர் நியமிப்பார்.
ஆசிரியர் தொகுதியில், 1.11.2010-க்கு முன்பாக குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் தான் ஓட்டுப் போட முடியும். பட்டதாரித் தொகுதியில், 2007-ம் ஆண்டுக்கு முன்னர் பட்டம் பெற்ற பட்டதாரிகள் ஓட்டுப் போடலாம். இத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.
.
நன்றி: