தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.6.18

மூன்றாவது நாளாக ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்கிறது

சென்னையில் நடந்துவரும் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. நேற்றைய போராட்டத்தில் பெண் உட்பட இரண்டு பேர் மயக்கமடைந்தனர்.

ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கட்டங்களாகப் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது. அதன் தொடர்ச்சியாகக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் 11 - 06-2018 அன்று தொடங்கியது. போராட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். போராட்டம் நடக்கும் இடத்திலேயே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்கியுள்ளனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுபிற்பகலில் அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் டெய்சி, திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் மோசஸ் என்பவரும் மயக்கமடைந்தார். அவரும், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையில் ஜாக்டோ-ஜியோவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்றார். போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது சில முக்கிய தகவல்கள் குறித்து விவாதம் நடந்தது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ``புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும். 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றில் பணியாற்றுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களின் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். இந்தப் போராட்டத்தில் 10 பெண்கள் உட்பட 214 பேர் பங்கேற்றுள்ளனர். மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்துவருகின்றன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்