தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.1.11

பேரவைத் தேர்தலுக்குப் பின் மேலவை? இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மேலவை அமைக்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே, ஆசிரியர், பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர்  பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.  

தமிழகத்தில் சட்ட மேலவையை அமைப்பதற்கான அறிவிப்பாணையை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், செப்டம்பர் 30-ல் வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.  

மேலவைக்கு 78 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் மூலம் 26 பேர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலம் 26 பேர், ஆசிரியர்கள்-பட்டதாரிகள் தொகுதிகள் வழியாக தலா 7 பேர், ஆளுநர் நியமனம் மூலம் 12 பேர் என மொத்தம் 78 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.  

அதில், ஆசிரியர்-பட்டதாரிகளுக்கென தனியாக தொகுதிகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளன. தமிழகம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது.  

தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 22-ம் தேதி வெளியிடப்பட்டது. திருத்தங்கள், பெயர் சேர்ப்புக்கான பணிகளை மேற்கொள்ள டிசம்பர் 7-ம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மழை, வெள்ளம், திருவிழா காலங்களை கருத்தில் கொண்டு பெயர் சேர்ப்புக்கான பணிகளை மேற்கொள்ள டிசம்பர் 16-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மொத்தம் எத்தனை வாக்காளர்கள்? 
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நேரத்தில், ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர்கள் 70 ஆயிரத்து 923 பேர் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு 68 ஆயிரத்து 16 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். அதில் தகுதியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அனைவரது பெயர்களும் சேர்க்கப்பட்டால் ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரமாக இருக்கும்.  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர்கள் 3 லட்சத்து 13 ஆயிரத்து 648 பேர் இருந்தனர். வரைவு பட்டியல்  வெளியான பிறகு அதில் பெயர் சேர்க்க 4 லட்சத்து 31 ஆயிரத்து 59 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அனைவரின் பெயரும் சேர்க்கப்பட்டால் 7 லட்சம் பேர் வாக்காளர்களாக இருப்பார்கள்.  

பேரவைத் தேர்தலுக்குப் பிறகு... 
சட்ட மேலவைத் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டத்தில், ஆளும் திமுக, அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸ் மற்றும் பாமக ஆகியன மட்டுமே மேலவைக்கு ஆதரவு தெரிவித்தன.  ஆனால், அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மேலவை அமைப்பதில் அரசு அவசரம் காட்டுவதாக குற்றம்சாட்டின.  இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சி முதல் அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.  இதனால், மேலவை உடனடியாக அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலவைக்கான தேர்தலைத் தள்ளிப்போடவே அனைத்துக் கட்சிகளும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   

இறுதி வாக்காளர் பட்டியல்:  
இதனிடையே, இறுதி வாக்காளர் பட்டியல்  வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலுடன் வாக்குச்சாவடி விவரங்களும் வெளியாகும். ஒரு தாலுகாவுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற வகையில் அமைக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, தேர்தலுக்கான தேதி உட்பட அனைத்துப் பணிகளையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். ஆளும் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும் பேரவைத் தேர்தலில் தீவிரம் காட்டி வருவதால் மேலவைக்கான பணிகள் தள்ளிப் போகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்