உயர் நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையால், வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் உத்தரவாதம் அளித்தன. நேற்று மதியம், 2:00 மணி முதல் வேலைக்குத் திரும்பவும், தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும், 21ம் தேதி ஆஜராகவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை வழக்கறிஞர் சேகரன் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின், காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு, இடைக்காலத் தடை கோரி மனு தாக்கல் செய்தேன். செப்., 7ல் நீதிபதிகள், 'வேலை நிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது' என்றனர்.
ஆனாலும், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்களுக்கு, உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு பற்றி, தலைமைச் செயலர் அறிவிப்பு செய்துள்ளார். சம்பந்தப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அவமதிப்பு வழக்கு:
மனுவை, நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, நேற்று காலை, 10:45 மணிக்கு விசாரித்தது. அவமதிப்பு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் தாஸ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தலைவர் மோசஸ் ஆகியோர் ஆஜராகினர்.
ஜாக்டோ - ஜியோ தாக்கல் செய்த மனு:
நீதிமன்ற உத்தரவை மீறுவதோ, அவமதிப்பதோ எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள், ஏழு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரதிநிதிகள். எங்களுக்கு, 2006ல், திருத்தப்பட்ட சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. 2016 ஜன., 1 முதல் சம்பளத்தை உயர்த்தியிருக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் உயர்த்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
கடந்த, 2016 பிப்ரவரி, 19ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, "மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், உடனடியாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்படும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களை, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் கொண்டுவர குழு அமைக்கப்படும். குழு பரிந்துரைத்த, நான்கு மாதங்களில் முடிவு செய்யப்படும். தற்காலிக ஊழியர்கள் வரன்முறைப்படுத்தப்படுவர்" என அறிவித்தார்.
இவ்விவகாரத்தில், இதுவரை நடவடிக்கை இல்லை. 2016 மத்தியில், ஏழாவது சம்பளக் கமிஷனின் சம்பள உயர்வு அமல்படுத்தபட்டது.
பேச்சுக்கு அழைப்பு:
தமிழக அரசு சம்பளத்தை உயர்த்தவில்லை. அரசுடன் பேச்சு நடந்தது; அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தினோம். 9ம் தேதி, ஈரோட்டில் முதல்வர் முன்னிலையில், பேச்சு நடத்த அழைப்பு வந்தது. அங்கு வெளியில் வந்த ஒரு அமைச்சர், 'இவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளனர்' என, பேட்டியளித்தார். நாங்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இடையூறின்றி போராட்டம் நடத்துகிறோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும். என மனுவில் தெரிவித்திருந்தனர்.
நீதிபதிகள்:
சட்ட ரீதியாக தீர்வு காண, இதர வழிகள் உள்ளன. ஏன் போராட்டத்தை கையில் எடுத்துள்ளீர்கள். உடனடியாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும். வேலைநிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், போராட்டத்தை தொடர்வது தவறு. அரசு அலுவலகங்களுக்குள் சமைத்துச் சாப்பிட்டு, ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன. உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு கூறி, சற்று நேரம் விசாரணையை ஒத்திவைத்தனர்.
மீண்டும் பகல், 11:15 மணிக்கு நீதிபதிகள் விசாரித்தனர்.
சங்கங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்: பொதுக்குழுவை கூட்டி, முடிவெடுக்க அவகாசம் அளிக்க வேண்டும்.
சங்க நிர்வாகிகள்: எங்கள் பிரச்னையையும் கருத்தில் கொள்ளுங்கள்.
நீதிபதிகள்: இது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. முதலில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுங்கள். உங்கள் பிரச்னைக்கு தீர்வு காண நாங்களும் விரும்புகிறோம். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றால், தமிழக அரசின் தலைமைச் செயலரை இங்கு வரவழைத்து, உங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உதவுகிறோம். வாபஸ் பெறாவிடில், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். கலெக்டர் அலுவலகங்களில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, ஒரு மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு விவாதம் நடந்ததுபின், சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
போராட்டத்திற்கான அறிவிப்பு, ஜாக்டோ- ஜியோ மூலம் வெளியானது. காலவரையற்ற வேலை நிறுத்தம் மூலம் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், போராட்டத்தை தொடர்கின்றனர்.
அரசு அலுவலகங்களை தனி நபர் சொத்து போல் பாவித்துள்ளனர். அரசு அலுவலகங்களில் காலை, இரவு தங்கி, போராட்டத்தை தொடர எவ்வித உரிமையும் இல்லை. அரசு அலுவலகங்கள் ஒன்றும் ஓய்வறை அல்ல; அது மக்களுக்கான இடம்.
அரசு ஊழியர்கள், மக்களுக்கான அதிபதி போல செயல்படக் கூடாது. கலெக்டர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான இடம். தற்போது, மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் நிவாரணம் கோரி, அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். இந்நிலையில், அரசு அலுவலகங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் ஊழியர்கள் கொண்டு வந்துள்ளதால், மக்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
ஊழியர் சங்கங்கங்கள், 'கோரிக்கைகளை ஏற்கும் பட்சத்தில், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும்' என்கின்றன. வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுவது குறித்து, பொதுக்குழு கூடி முடிவெடுப்பதாக சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
நாங்கள் ஏற்கனவே வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்துள்ளோம். இந்நிலையில், பொதுக்குழுவை கூட்டி, வாபஸ் பெற வேண்டும் என்ற கேள்வியே கிடையாது. முதலில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
சங்கங்கள் சார்பில், 'வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். இதில், நிரந்தரத் தீர்வு தேவை. அதற்காக நீதிமன்றத்தை முழுமையாக நம்புகிறோம்' என்கின்றனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'நிரந்தரத் தீர்வு காண, அரசு தேவையான முயற்சிகளைச் செய்தது. ஊழியர்களின் போராட்டத்தால் தீர்வு எட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது' என்கிறார்.
இவ்விவகாரத்தில், அரசின் முடிவை தெளிவுபடுத்தும் வகையில், தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும் 21ல், இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இக்கால கட்டத்தில், ஏழாவது சம்பளக் குழுவின் பரிந்துரை மற்றும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு முயற்சி எடுத்திருக்க வேண்டும். வேலைநிறுத்தத்தை கைவிட்டு, இன்று(15-09-2017) மதியம், 2:00 மணிக்கு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.