தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

14.9.17

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும்: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் திட்டவட்டம்

புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்வது தொடர்பாக தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் திட்டவட்டமாக கூறினர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. நேற்று அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கினர்.

சென்னையில் சேப்பாக்கம் எழிலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் எம்.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகம் முழுவதும் 7 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு எங்களை பேச்சுக்கு அழைக்கும்வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்றார்.

கைது நடவடிக்கை

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு, கோரிக்கைகளை வலியறுத்தி கோஷமிட்டனர். அங்கேயே சமையல் செய்தனர். இதேபோல, திருப்பூர், நீலகிரியிலும் திரளானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக திருச்சியில் 192 பேர், நாகப்பட்டினத்தில் 350 பேர், தஞ்சாவூரில் 1,100 பேர், திருவாரூரில் 2,500 பேர், பெரம்பலூரில் 142 பேர், அரியலூரில் 238 பேர், கரூரில் 256 பேர், புதுக்கோட்டையில் 477 பேர் என 5,255 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்தில் 300 பெண்கள் உட்பட 800 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோட்டில் போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மதுரையில் 2 ஆயிரம் பேரும், திண்டுக்கலில் 2 ஆயிரம் பேரும், ராமாநாதபுரத்தில் 800 பேரும், சிவகங்கையில் 3 ஆயிரம் பேரும், தருமபுரியில் 2,500-க்கும் மேற்பட்டோரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். தேனியில் 454 பெண்கள் உட்பட 674 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரியில் 71 பெண் ஊழியர்கள் உட்பட 191 பேர், வேலூரில் 2 ஆயிரம் பேர், திருவண்ணாமலையில் 314 பேர், திருநெல்வேலியில் 450 பேர், தூத்துக்குடியில் 385 பேர், கன்னியாகுமரியில் 280 பேர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 900 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்