தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.6.10

மக்கள் தொகை கணக்கெடுப்பு - கணக்கெடுப்பாளர்கள் அவதி

தற்போது நடந்து வரும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், போதுமான தகவல்களை திரட்ட முடியாமல் கணக்கெடுப்பாளர்கள் அவதிப்படுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால், படித்தவர்கள் முதற்கொண்டு பலரும் உண்மைத் தகவல்களை தர மறுப்பதாக, புகார் எழுந்துள்ளது.

முதல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872ம் ஆண்டில், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு கால கட்டங்களில் நடத்தப்பட்டது. அதற்கடுத்து, 1881ல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. அதிலிருந்து துவங்கி, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை விடுபடாமல், தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.இந்த "சென்சஸ்' வரிசையில், 15வது முறையாக தற்போது, கணக்கெடுப்பு பணி துவங்கி நடந்து வருகிறது. இது, சுதந்திரத்திற்கு பின் நடைபெறும் ஏழாவது கணக்கெடுப்பு. எப்போதும் இல்லாத வகையில் தற்போது, இரண்டு விதமான கணக்கெடுப்பு நடந்து வருகிறது.ஒன்று, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, மற்றொன்று தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் குடும்ப அட்டவணையைப் பதிவு செய்யும் கணக்கெடுப்பு. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி துவங்கி, வரும் ஜூலை 15ம் தேதி வரை இந்தக் கணக்கெடுப்பு நடக்கவுள்ளது.

"இந்தக் கணக்கெடுப்பு நாட்டின் விரிவான தகவல் ஆதாரமாக அமையும். நாட்டின் பாதுகாப்பு, அரசின் திட்டங்கள், சேவைகள் போன்ற விரும்பிய இலக்கை அடைய, திட்டங்களை மேம்படுத்த இந்தப் பணி உதவும்' என்று இந்த கணக்கெடுப்பின் நோக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் படும் அவஸ்தை, கொஞ்ச நஞ்சமல்ல. "இன்கம்டாக்ஸ் ரெய்டு' நடத்த வருவதாக நினைத்துக் கொண்டு, படித்தவர்கள் உட்பட பலரும், இந்த கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை; உண்மைத் தகவல்களை மறுத்தும், மறைத்தும் வருகின்றனர்.

சென்னையின் மையப்பகுதியில் உள்ள ஒரு தரைதளம் மற்றும் இரண்டு மாடிகளைக் கொண்ட மிகப் பிரமாண்ட வீட்டில், கணக்கெடுக்க ஒரு ஆசிரியர் சென்றபோது, நல்ல வரவேற்பு கொடுத்தனர். ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும், வீட்டுத் தலைவரை மொபைலில் தொடர்பு கொண்டு, பின்னரே அங்கிருந்த பெண்மணி பதில் அளித்தார். வீட்டுத் தலைவரின் தொழில் குறித்து கேட்கும் போது, "விவசாயம்' என்று அந்தப் பெண்மணி பதிலளித்தார்."கிராமத்தில் நிலம் இருக்கிறதா?' என்று கேட்டதற்கு, "இல்லை' என்றார். சென்னையில் எங்கு விவசாயம் நடக்கிறது? என்று நொந்து கொண்ட கணக்கெடுப்பாளர், அந்தப் பெண்மணியின் பிறந்த நாளுக்கான சான்று கேட்கும் போது, "பான்கார்டு' எடுத்து வந்து காட்டியுள்ளார்.

இதுகுறித்து கணக்கெடுப்பு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: இரண்டு விதமான கணக்கெடுப்பை ஒரே நேரத்தில் செய்யச் சொல்கின்றனர். குடும்ப அட்டவணை குறித்த கணக்கெடுப்பில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர் தொடர்பான 14 கேள்விகள் உள்ளன. வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பில் 35 கேள்விகள் உள்ளன. இந்தக் கேள்விகளை கேட்டு முடிப்பதற்குள், சம்பந்தப்பட்ட நபர் எரிச்சல்படுகிறார்."இந்தக் கேள்விகளில் உண்மையான பதிலை வரவழைப்பதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும்' என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிலர் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. முறையான தகவலும் தருவதில்லை. ஒரு சிலர், "மற்றொரு நாள் வாருங்கள்' என்று "கூலாக' சொல்லி விடுகின்றனர். ஒரு சில வீடுகள் மூடிக் கிடக்கின்றன. அதற்காக மீண்டும் ஒரு நாள் வரவேண்டிய நிலை.இதுஒருபுறமிருக்க, தனியார் பள்ளி ஆசிரியர்கள் படும் பாடு, பெரும்பாடு. 45 நாட்களில் ஒன்றில் இருந்து ஆறு தெருக்கள் எனக் குறைந்தது 150 வீடுகளில், இந்த இரு கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும்.

ஆனால், தனியார் பள்ளிகளில் இதற்கு விடுமுறையோ, கூடுதல் நேரமோ தருவதில்லை. "பள்ளியில் கடைசி இரு வகுப்புகள் இல்லாதவர்கள் செல்லலாம்' என்று மட்டுமே அனுமதிக்கின்றனர். தற்போது "அட்மிஷன்' பணி வேறு நடந்து வருகிறது. இதில் குறிப்பாக, பெண் ஆசிரியைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி முடிந்ததும், அவசர அவசரமாக கணக்கெடுக்கும் பணிக்கு செல்லும் போது, அங்குள்ளவர்களின் ஒத்துழைப்பு இல்லாதது, அவதிப்படவே வைக்கிறது.இவ்வாறு கணக்கெடுப்பாளர்களின் தரப்பில் கூறப்படுகிறது.

விழிப்புணர்வு தேவை: "மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தாததே இந்தப் பிரச்னைகளுக்கு காரணம்' என்று கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒரு மேற்பார்வையாளர் கூறும்போது, ""ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி தரப்படவில்லை.இவ்வளவு கேள்விகள் வைத்திருக்கும்போது, அதுகுறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உண்மையைச் சொன்னால் பிரச்னை வந்துவிடுமோ? என்ற பயத்தைப் போக்க வேண்டும்,'' என்றார்.

நன்றி: தினமலர் 13-06-2010


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்