பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசுத் துறை மற்றும் பள்ளி, கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுத் துறைகளில் தாற்காலிகம், ஒப்பந்தம், தொகுப்பூதியம், தினக்கூலி ஆகிய முறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுவோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் மூலம் பணியமர்த்தப்படும் அவுட்சோர்சிங் போன்ற நியமனங்களை கைவிட்டு, வேலைவாய்ப்பகம், தேர்வாணையம் மூலம் பணி நியமிக்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2006-ம் ஆண்டு ஜனவரி முதலான காலத்திலிருந்து ஊதிய மாற்ற பணப்பலன், வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குரு. சந்திரசேகரன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் எம். காந்தி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் கே. சச்சிதானந்தம், அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ். சிவக்குமார், வட்டத் தலைவர் ஏ.டி. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் வரவேற்றார். தனியார் கல்லூரி அலுவலர் கழகப் பொறுப்பாளர் எஸ். ராஜேந்திரன் நன்றி கூறினார்.கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக