தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.2.11

"வணக்கம் சார்! மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துருக்கோம்!'


"வணக்கம் சார்! மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துருக்கோம்!"


- ரோட்டில் இருந்து வாசல் கதவை எட்டிப் பார்த்துக் கூவுகிறார் அந்த அரசு ஊழியர்.


"நாளைக்கு சாயந்தரமா வாங்க" என, முகத்தில் அடித்தாற்போல் பதில் வருகிறது. பென்சிலால் அதைக் குறித்துக்கொண்டு, அலுக்காமல் அடுத்த வீட்டு கதவைத் தட்டுகிறார் அந்த ஊழியர்.


இப்படித்தான் இருக்கிறது, மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களின் நிலை. சிலர் காலையில் வரச் சொல்வர்; சிலர் மாலையில்; சிலர் அடுத்த நாள். சிலரிடம் பதிலே கிடையாது. "அவ்வளவு ஏன்? விவரம் சொன்னதும், படாரென்று கதவைச் சாத்தியவர்களும் உண்டு" என, குமுறுகிறார் சென்னையின் புறநகர்ப் பகுதியில் கணக்கெடுக்கும் ஒரு பெண்மணி. மக்களைச் சொல்லியும் குற்றமில்லை. வாரம் முழுவதும் வேலை பார்த்து, வீட்டில் ஓய்ந்து கிடக்கும் நேரத்தில், யாரோ அதிகாரியின் கேள்விகளுக்கு அரை மணி நேரம் பதில் சொல்வதென்றால் கசப்பாகத் தான் இருக்கிறது. இப்படி இரண்டும் இரு துருவத்தில் இருக்கும் என்பதைக் கணித்து தான், இந்தப் பணிக்கு 20 நாட்களை ஒதுக்கியிருக்கிறது உள்துறை அமைச்சகம்.


கடந்த 9ம் தேதி துவங்கிய கணக்கெடுப்பு, 28ம் தேதி முடிவுக்கு வருகிறது. பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அறிவொளி இயக்கத்தில் பணிபுரிந்தவர்கள் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் இருப்பவர்கள். அனைவருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐந்து கணக்கெடுப்பாளருக்கு, ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது. காலை, மாலை என அவரவர் வசதிக்கேற்ப, அரை நாள், "அனுமதி" அளிக்கப்படுகிறது. 

ஒரு கணக்கெடுப்பாளர் சராசரியாக ஒரு நாளைக்கு பத்து வீடுகளில் கணக்கெடுக்கிறார். காலை 6 மணிக்கு துவங்கும் பணி, பல நாட்களில் இரவு 10 மணி வரை நீள்கிறது. இப்படி அகாலமான வேளையில் வீடுகளுக்குச் செல்லும்போது, பெண்கள் நைட்டியுடனும், ஆண்கள் வெற்றுடம்போடும் இருப்பது, கணக்கெடுக்கச் செல்லும் எதிர்பாலினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குகிறது.


சென்னை புறநகரில் பார்த்த ஒருவர், வெறும் நாலு முழம் துண்டுடன் தான், அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்தார். மேற்கு மாம்பலத்தில் கணக்கெடுத்த ஒரு பெண்ணின் நிலை இன்னும் மோசமானது. இரவு 7.30 மணிக்கு ஒரு வீட்டுக்குப் போனார். குடும்பத்தின் மூத்த குடிமகன், முட்ட முட்டக் குடித்திருந்தார். எல்லாவற்றுக்கும் எடக்கு மடக்கான பதில்கள் தான். "எத்தனை குழந்தைகள்?' எனக் கேட்டால், "இந்த வீட்டுல ரெண்டு; அந்த வீட்டுல ரெண்டு' என பதில். நல்லவேளையாக, அருகிலேயே அவரது மனைவியும் இருந்ததால், தப்பித்தோம் பிழைத்தோம் என, கிடைத்த தகவல்களைப் பெற்றுக்கொண்டு, "எஸ்கேப்' ஆனார் பெண். இதேபோல ஆண்கள் கணக்கெடுக்கச் செல்லும் சில இடங்களில், "வீட்டுல ஆம்பளைங்க இல்லை; அப்புறமா வாங்க' என, குடும்பப் பெண்கள் கூறி விடுகின்றனர். இதனால், ஒரே தெருவுக்கு, இரண்டு, மூன்று முறை செல்ல நேர்கிறது. 

ஒரு கணக்கெடுப்பாளர் குத்துமதிப்பாக, 800 பேர் அல்லது 200 வீடுகளைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் விதமாக, அவர்களுக்கு ஏரியா பிரித்துக் கொடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதியில், கடந்த ஆண்டு ஜூன், ஜூலையில் எடுக்கப்பட்ட வீட்டுப் பட்டியல் சுருக்கம், எல்லாரிடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியலை வைத்து, வீடு வீடாக விவரம் சேகரிக்கின்றனர். யாரேனும் இடம்பெயர்ந்திருந்தால், அதுவும் குறிக்கப்படுகிறது. யாரேனும் புதிதாகக் குடிவந்திருந்தால் அதுவும். பணி நிமித்தமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ, ஒரு குடும்ப உறுப்பினர், வெளியூரிலேயே தங்கியிருந்தால், அவர் பெயர், சொந்த ஊரில் சேர்க்கப்படுவதில்லை.


கணக்கெடுப்பின் முக்கிய அங்கமாகத் திகழ்வது சமையல். "மேன்ஷன்'களில் தங்கியிருப்போர் அல்லது உறவற்றவர்கள் ஒரு குழுவாக சமைத்துச் சாப்பிட்டால், அவர்களில் ஒருவர், குடும்பத் தலைவராகக் கருதப்பட்டு, மற்றவர்களின் விவரம் அதிலேயே பதியப்படுகிறது. அனைவரும் வெளியே சாப்பிட்டால், தனித்தனி குடும்பமாகப் பதியப்படுகிறது. ஒரே குடும்பத்தில் மாமியார், மருமகள் தனித்தனி சமையல் என்றாலும், தனித்தனி குடும்பக் கணக்கு தான். 

ஒரு விண்ணப்பத்தில் மொத்தம், 29 கேள்விகள் இருக்கின்றன. பதியப்பட்ட படிவங்களை கம்ப்யூட்டரில் படியெடுக்கும் விதமாக, அத்தனை பதில்களுக்கும், தனித்தனி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குடும்பத்தில் யாருக்கேனும் ஊனம் இருக்கிறதா? ஆமெனில், கண், காது, வாய், மனநிலை, கை, கால் என அத்தனைக்கும் தனித்தனி எண்கள். இரண்டுக்கு மேல் இருந்தால், அதற்கும் தனி எண். "வீட்டிலிருந்து வேலைக்கு எதில் போகிறீர்கள்?" சைக்கிள், பஸ், பைக், ஆட்டோ, கார் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு எண். ஆண், பெண் மட்டுமின்றி, "வேறு இனம்" என்ற பெயரில், அரவாணிகளும் கணக்கிடப்படுகின்றனர்.


மதத்தைத் தைரியமாகக் குறிப்பிடுபவர்கள், பட்டியலினத்தவரா, இல்லையா எனக் குறிப்பிடுவதில் தயக்கம் காட்டுகின்றனர். ஜாதி, ஊனம், பிறப்பு, இறப்பு பற்றிய கேள்விகள், தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான கேள்விகளுக்கு, குத்து மதிப்பான பதில்கள் சொல்லப்படுவது கவலைக்குரிய விஷயம். வேறு வேறு விதமாக கேள்விகள் கேட்டு, உண்மையான பதிலை யூகிக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான கணவன்களுக்கு, மனைவியைப் பற்றியும், மனைவியருக்கு, கணவன்களைப் பற்றியும் விவரம் (பிறந்த தேதி, பிறந்த ஊர், படிப்பு, பணியின் பெயர்) தெரியவில்லை. 

சராசரியாக ஒரு வீட்டுக்கு, 20 நிமிடம் ஆகிறது. கணக்கெடுப்பு முடிந்ததும், குடும்பத்தில் உள்ள படித்தவர்கள், படிக்காதவர்கள், குழந்தைகள் என, பல்வேறு தகவல்களின் கூட்டுத்தொகையைக் கணக்கிடுகின்றனர். 

28ம் தேதி இரவு, தத்தம் பகுதிகளுக்குச் சென்று, தெருவில் படுத்திருப்போரின் விவரத்தைச் சேகரிக்க உள்ளனர். அவர்கள், இதற்கு முன் கணக்கில் சேர்க்கப்படவில்லை எனில், வீடற்ற நபர்களாக குறிக்கப்படுகின்றனர். அன்று இரவு, துறைமுகங்களில் நிற்கும் கப்பல்களிலும் கணக்கெடுப்பு நடக்கும். 

மக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பது தான், இந்தக் கணக்கெடுப்பின் மிகப் பெரிய சிக்கல். ஓட்டுப்பதிவன்று அரசியல்வாதிகள் கொடுப்பது போல, ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்தால், ஆர்வமாக பதில் சொல்வரோ, என்னவோ...!


கணக்கெடுப்பு ஏன்? இந்தியாவில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மிகவும் துல்லியமானது. இதன் மூலம் தான், ஜனத்தொகை, விகிதாச்சாரம், பொருளாதார நடவடிக்கைகள், எழுத்தறிவு, குடியிருப்பு, வீட்டு சாதனப்பொருட்கள், நகர்மயமாக்கம், பிறப்பு, இறப்பு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மொழி, மதம், இடப்பெயர்ச்சி மற்றும் ஊனம் என சமூக, கலாசாரத் தகவல்கள் கிடைக்கின்றன. 

கடந்த, 1872ம் ஆண்டு, முதல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது மேற்கொள்ளப்படுவது, 15வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு. இதன் அடிப்படையில் தான், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள், கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள், அரசு மட்டுமின்றி, தேசிய, சர்வதேச நிறுவனங்கள், ஆய்வாளர்கள், வர்த்தக அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் என, பல தரப்பினராலும் பயன்படுத்தப்படுகின்றன. சட்டசபை, பார்லிமென்ட் தொகுதிகளின் மறுசீரமைப்பும், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து தான் மேற்கொள்ளப்படுகிறது. 

பத்தாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இக்கணக்கெடுப்பின் மூலம், கடந்த ஆண்டுகளில் நம்மூரில் ஏற்பட்ட வளர்ச்சியையும், வீழ்ச்சியையும், ஆதாரப்பூர்வமாகத் தெரிந்துகொள்ள முடியும்.


தகவல்கள் ரகசியமானதா? கணக்கெடுப்பாளர்கள் அனைவரும் அடையாள அட்டை வைத்திருப்பர். அவர்கள் ஒவ்வொருவருக்கும், பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டிருக்கும். விவரங்களைச் சொல்லும் முன், பொதுமக்கள், தாராளமாக அவற்றைக் கேட்டு வாங்கிப் பார்க்கலாம். மக்கள், தங்களைப் பற்றிய உண்மையான தகவல்களை மட்டுமே சொல்ல வேண்டியது கட்டாயம். அதற்காக, எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டிய அவசியமில்லை. ஆனால், தவறாக தரப்படும் தகவல், சட்ட நடவடிக்கைக்கு இட்டுச் செல்லலாம். சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும், முற்றிலும் ரகசியமாக வைக்கப்படுகின்றன. தான் சொல்லும் பதில்கள், பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நலத்திட்டப் பணிகளுக்காக அரசுக்கு வழங்கப்படும் புள்ளிவிவரங்கள் கூட, ஒட்டுமொத்தமாகத் தான் தரப்படுமே தவிர, எந்தத் தனி மனிதரைப் பற்றியதாகவும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால், இதில் சேகரிக்கப்படும் விவரங்கள், கோர்ட்டால் கூட தருவிக்க முடியாதவை.


உங்கள் வீட்டுக்கு வரவில்லையா? மக்கள் தொகை கணக்கெடுப்பின் தமிழக இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: கணக்கெடுப்பின் அத்தனை பெருமைக்கும், தன்னலமற்று, இந்த நாட்டுக்காக தம்மை வருத்திக்கொள்ளும், முகம் தெரியாத அந்த அத்தனை கணக்கெடுப்பாளர்களும் போற்றப்பட வேண்டியவர்கள். தாங்கள் பட்டியலினத்தவரா எனச் சொல்ல மக்கள் தயங்க வேண்டியதில்லை. அந்தத் தகவல் மூலம் தான், மக்கள் நலத்திட்டங்கள், சரியானவர்களைச் சென்றடையும். ஆசிரியர்களை தொந்தரவு செய்வதற்கு பதிலாக, வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களை ஈடுபடுத்தலாம் என நானும் பரிந்துரைத்தேன். ஆனால், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும், பொறுப்புக்கு உள்ளாக்குவதிலும் சிரமங்கள் இருக்கின்றன. சாதாரண குடும்பம், நிலையற்ற குடும்பம் (சர்ச்சுகள், மடங்கள், ஆசிரமங்கள்), வீடற்ற குடும்பம் (மேன்ஷன்வாசிகள், அனாதரவானவர்கள்) என, மூன்று வகையாகப் பிரித்து கணக்கெடுக்கப்படுகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில், கணக்கெடுப்பு முறையே மாறலாம். காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பே இல்லை. எனவே, இதுவரை உங்கள் வீட்டுக்கு கணக்கெடுப்பாளர் வராவிட்டால், உடனே கவுன்சிலர்கள், உள்ளாட்சி அதிகாரிகள், தலைவர்கள், தாசில்தாரை அணுகலாம். சென்னையில், 1913, மற்ற நகரங்களில், 1800, 345 0111 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைக்கலாம். இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.


எப்படி நடக்கிறது பணி? வீடு வீடாக கணக்கெடுத்து, விவரங்களால் விண்ணப்பங்கள் நிரப்பப்படுகின்றன. அவை, 15 நகரங்களில் அமைந்துள்ள தகவல் சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஐ.சி.ஆர்., எனப்படும் அதிநவீன மென்பொருள் மூலம், விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த மென்பொருள், முதல் முதலில், 2001ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. இன்று உலகமே அதைத் தான் பயன்படுத்துகிறது.


2001 மூலம் என்ன தெரிந்தது?


* அப்போதைய மக்கள் தொகை, 102.8 கோடி.


* பரப்பளவில் உலகின், 2.4 சதவீதம் மட்டுமே உள்ள இந்தியா, மக்கள் தொகையில், உலகின், 16.9 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. சிம்பிளாகச் சொன்னால், உலகின் ஆறு பேரில் ஒருவர் இந்தியர்.


* இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு, 933 பெண்கள் தான் இருக்கின்றனர். எதிர்காலத்தில், கல்யாணத்துக்கு பெண் கிடைப்பது கஷ்டம்.


* படித்த ஆண்கள், 75.2 சதவீதம். பெண்கள், 53.7 சதவீதம்.


* இந்துக்கள் 80.5 சதவீதம் பேர். 13.4 சதவீதம் பேர் முஸ்லிம்கள். மற்ற எல்லா மதத்தினரும் சேர்த்து 6 சதவீதம். மொத்த மதங்களின் எண்ணிக்கை எவ்ளோ தெரியுமா? 2,800!


* இந்திக்காரர்கள் 41 சதவீதம் பேர். அடுத்து பெரிய பங்காளிகளாக இருப்பது வங்காளிகள் (8.1%). தமிழர்களுக்கு, மக்கள் தொகையில் ஐந்தாவது இடம் (5.9%). மொத்த மொழிகள், அதிகமில்லை... 6,661 தான்!


* கடந்த பத்தாண்டின் வேகத்திலேயே பிள்ளை பெற்றால், இந்த ஆண்டு மக்கள் தொகை, 119 கோடியாக இருக்கும். 2026ல், 140 கோடியாகிவிடும். செவ்வாயிலோ, கடலுக்கடியிலோ வீடு கட்ட வேண்டிவரும்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்