"கோடை விடுமுறை விட்டாச்சு... ஏரியா பசங்க சேர்ந்து ஜாலியா கிரிக்கெட், கால்பந்து எல்லாம் விளையாடலாம் தான். ஆனால் ஒருத்தன்கூட வெளியே வரமாட்டேன்றாங்க. கேட்டால், கம்ப்யூட்டரிலேயே குத்துச்சண்டை, கிரிக்கெட் எல்லாம் விளையாடுறதா சொல்றாங்க,'' - இது கம்ப்யூட்டர் இல்லாத ஒரு அப்பாவி சிறுவனின் ஆதங்க குரல்.
முன்பெல்லாம், பள்ளி விடுமுறை விட்டால் போதும். விளையாட்டு மைதானங்கள் "ஹவுஸ்புல்' ஆகும். (இப்போ நகரில் எங்கே விளையாட்டு மைதானம் இருக்கிறது? என நீங்கள் கேட்பது புரிகிறது) பல்வகை விளையாட்டுகளால் உடலும் வலுவாகும். ஆனால் இன்று கம்ப்யூட்டர்தான் மாணவர்களுக்கு கதி. நண்பர்கள், உறவினர்களை மறந்துவிட்டு, கம்ப்யூட்டர் முன் "தவம்' இருக்கின்றனர். அது அறிவுசார்ந்த தேடுதலுக்காக அல்ல. விளையாட்டிற்காக.
அதற்கேற்ப, விளையாட்டு தொடர்பான வீடியோ "டிவிடி'க்கள் விற்பனை களைகட்டுகிறது. கார், பைக் ரேஸ் எல்லாம் மாணவர்களுக்கு பழசாகிவிட்ட நிலையில், இன்று குத்துச்சண்டை, கிரிக்கெட், துப்பாக்கிச்சூடு, திருடன் - போலீஸ் விளையாட்டு, விமானம், ரயிலை இயக்குவது, பெண்களுடன் பீச் வாலிபால் என விளையாட்டு "டிவிடி'க்களை அதிகம் வாங்குகின்றனர். 510 விளையாட்டுகள் ஒரே "டிவிடி'யில்கூட கிடைக்கிறது. இதனாலேயே "டிவிடி'க்களின் விலை, தரத்திற்கு ஏற்ப ரூ.40 முதல் ரூ.2700 வரை விற்கப்படுகிறது. கடந்தாண்டைவிட இந்தாண்டு, விலை ரூ.20 சதவீதம் அதிகரித்துள்ளது.
கல்வி, பொதுஅறிவு சம்பந்தப்பட்ட "டிவிடி'க்கள் இருந்தாலும், அதை மாணவர்கள் கண்டுகொள்வதில்லை என்பது வருத்தமான விஷயம். உடல் வலிமை, திறமைகளை வெளிப்படுத்தும் கோடை கால பயிற்சிகள் பக்கம் இவர்கள் தலைவைத்துக்கூட படுப்பதில்லை. ""கோடையில் வழக்கமாகவே விற்பனை அதிகரிக்கும். சீசன் இல்லாத போது, தினமும் 10 "டிவிடி' விற்பனையாகும். தற்போது 50 "டிவிடி' விற்பனையாகிறது. விலையை பற்றி மாணவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு தேவை தரமான "டிவிடி'க்கள்தான்,'' என்கின்றனர் விற்பனையாளர்கள்.
"டிவி'க்கள்தான் மாணவர்களை திசை திருப்புகிறது என்றால், இன்று "வீடியோ கேம்ஸ்', மாணவர்களுக்கு நண்பனாக, உறவினராக இருந்து, உடல், மனநலத்தை பாதிக்க செய்கிறது என்பது உண்மை. இனியாவது பெற்றோர் விழிப்பார்களா?
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக