தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.4.12

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய கல்வித்துறை பரிந்துரை

பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீதான பிடியை இறுக்க, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இந்தப் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள், "டிஸ்மிஸ்' செய்யப்படுவர் என, துறை அமைச்சர் சிவபதி, ஏற்கனவே அறிவித்துள்ளார். தற்போது கூடுதலாக சம்பந்தபட்ட ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்யலாம் எனவும், கல்வித்துறை பரிந்துரை செய்ய உள்ளது.

மாணவியரிடம் பாலியல் ரீதியாக பிரச்னைகள் தரும் ஆசிரியர்களால், கல்வித் துறைக்கும், தமிழக அரசுக்கும் அவ்வப்போது தர்மசங்கடமான நிலை உருவாகிறது. இதுபோன்ற புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள், உடனடியாக, "சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர். பின், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கு தடை உள்ளிட்ட, சில நடவடிக்கைகளை கல்வித்துறை எடுக்கும். ஆனாலும், இந்நடவடிக்கைகளால் ஆசிரியர்களுக்கு, பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

அமைச்சர் அறிவிப்பு
இந்த விவகாரம் தொடர்பாக, 18ம் தேதி சட்டசபையில் பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, ""பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கடுமையாக்குவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. அவர்களை, "டிஸ்மிஸ்' செய்யலாமா என்பது குறித்து, ஆலோசித்து வருகிறோம்,'' என்றார்.

அதிரடி நடவடிக்கை:
அமைச்சரின் இந்த அறிவிப்பை, வழக்கம்போல் வெறும், "மிரட்டல்' என்றே ஆசிரியர்கள் கருதினர். ஆனால், தற்போது இந்த விவகாரம், "சீரியசாக' மாறியுள்ளது. பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் மீது, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை ஒரு அறிக்கையை தயாரித்து உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, மாணவியரிடம் தவறாக நடப்பதும், பாலியல் புகார்களில் சிக்குவதும், சமுதாயத்திற்கு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. இதுபோன்று அவ்வப்போது நடக்கும் சில சம்பவங்கள், கல்வித்துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இவர்களை பணியில் இருந்து நீக்குவதுடன், அவர்களின் சான்றிதழ்களை ரத்தும் செய்யலாம். அப்போது தான், வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் நடக்காது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. இதையே, தமிழக அரசுக்கு பரிந்துரை அறிக்கையாக அனுப்ப, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

"டிஸ்மிஸ்' செய்தால், சம்பந்தபட்ட ஆசிரியர்கள், தனியார் வேலைகளிலாவது சேரலாம். ஆனால், அவர்களின் சான்றிதழ்களையே ரத்து செய்வது, அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் உலை வைப்பது போல் ஆகிவிடும். அதிகபட்சமாக, தவறு செய்யும் ஆசிரியர்களை, "டிஸ்மிஸ்' செய்ய அரசு முடிவெடுக்கும் எனவும்; சான்றிதழ்களை ரத்து செய்யும் முடிவை, அரசு எடுக்காது என்றும், கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்