பொதுமக்களுக்கான, "கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம்' நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம், அடுத்த ஆண்டு ஜூன் வரை தொடர உள்ளது. அதற்குள், டெண்டர் விடப்பட்டு, புதிய காப்பீட்டு நிறுவனம் இறுதி செய்யப்படும்.
அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே, "தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சுகாதார நிதி திட்டம்' என்ற திட்டத்தின் கீழ், மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் வழங்கப்பட்டு வந்தன. இதன்படி, அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், 2008ல், "புதிய மருத்துவ காப்பீடு திட்டம்' என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதன் காரணமாக, பழைய சுகாதார திட்டம் நிறுத்தப்பட்டது. புதிய திட்டத்துக்காக விடப்பட்ட டெண்டரில், "ஸ்டார் ஹெல்த் அண்டு அலைய்டு இன்சூரன்ஸ் கம்பெனி' குறைந்த விலையை குறிப்பிட்டிருந்தது. எனினும், அதற்கு அடுத்தபடியாக விலை குறிப்பிட்டிருந்த, "ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனத்தையும் அழைத்து அரசு பேசியது. இறுதியில், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமே இத்திட்டம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி, ஆண்டுக்கு 495 ரூபாய் பிரீமியமாக நான்கு ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். இதுதவிர, சேவை வரியை செலுத்த வேண்டும். இதற்காக, அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், பள்ளி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் போன்றோர் இதில் கண்டிப்பாக சேர உத்தரவிடப்பட்டது. ஊழியர்களிடம் இருந்து மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. மீதத் தொகை மற்றும் 12.5 சதவீத சேவை வரியை அந்தந்த துறையே செலுத்த வேண்டும்.
ஊழியரின் மனைவி அல்லது கணவர், குழந்தைகள் (திருமணமாகும் வரை அல்லது வேலையில் சேரும் வரை அல்லது 25 வயது வரை), திருமணமாகாத ஊழியரின் பெற்றோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம்.
மொத்தமாக நான்கு ஆண்டுகளில், 2 லட்சம் ரூபாய்க்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மருந்துகள், அறுவை சிகிச்சை, டாக்டர் கட்டணம், தங்கும் அறை கட்டணம் உட்பட பல்வேறு மருத்துவ செலவுகளுக்கு இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மொத்தமாக நான்கு ஆண்டுகளில், 2 லட்சம் ரூபாய்க்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மருந்துகள், அறுவை சிகிச்சை, டாக்டர் கட்டணம், தங்கும் அறை கட்டணம் உட்பட பல்வேறு மருத்துவ செலவுகளுக்கு இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டம் 2008ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் நான்கு ஆண்டுகள் முடிவடைகிறது. எனவே, அதுவரை, "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனமே இத்திட்டத்தை தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி உயரதிகாரி ஒருவர் கூறும் போது, "அடுத்த ஆண்டு, தமிழக அரசு டெண்டர் விட உள்ளது. அதில், புதிய மருத்துவ காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு ஜூன் முதல் புதிய நிறுவனம் மூலம், இத்திட்டம் தொடர உள்ளது. எக்காரணம் கொண்டும் திட்டம் நிறுத்தப்படாது' என்றார். இதே ஸ்டார் ஹெல்த் நிறுவனம் செயல்படுத்தி வரும், பொதுமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை புதிய அரசு நிறுத்தியுள்ளது. இதனால், தங்களுக்கும் இத்திட்டம் நிறுத்தப்படும் என்ற அச்சம் அரசு ஊழியர்களிடையே நிலவியது. ஆனால், ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு என கணக்கிட்டு, பிரீமியம் செலுத்தப்பட்டு வருவதால், அரசு ஊழியர்களுக்கான திட்டத்தை நிறுத்த தமிழக அரசு விரும்பவில்லை.
எனினும், பொதுமக்களுக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டப்படி, நான்கு ஆண்டுகளுக்குள் ஒரு குடும்பம் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளலாம். தற்போது இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே செலுத்திய பிரீமியத் தொகையில், இந்த மாதம் வரையிலான காலத்தைக் கழித்துவிட்டு, மீதத்தை அந்த நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், நிறுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு பதிலாக, விரைவில் புதிய காப்பீடு திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக