அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய உயரதிகாரிகள், இந்த ஆட்சி, அரசு ஊழியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், வதந்திகளை நம்பவேண்டாமென்றும் உத்தரவாதம் அளித்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளை, தமிழக அரசின் பொதுத் துறை செயலர், பணியாளர் நலத்துறை செயலர் அழைத்துப் பேசினர். இதில், தலைமைச் செயலக சங்கம், "சி அண்டு டி' பிரிவு ஊழியர்கள் சங்கம், என்.ஜி.ஓ., சங்கம் உட்பட முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, "அரசு ஊழியர்களுக்கு எதிரான அரசு என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த அரசு, ஊழியர்களுடன் நல்லுறவையே விரும்புகிறது' என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
"முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், ஈட்டு விடுப்பு எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும். சனிக்கிழமைகளை பணி நாளாக அறிவிக்க இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை நம்ப வேண்டாம். எவ்வித எதிரான நடவடிக்கையை எடுக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசின் இந்த கருத்தை தங்களது சங்கத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அரசு ஊழியர்கள் நன்றாக செயல்பட்டால் தான், திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும், அரசு ஊழியர்கள், இந்த அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
அரசு ஊழியர்களது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், கோரிக்கைகள் பற்றி இன்னொரு நாளில் பேசலாம் என்றும், சலுகைகள் குறித்து பட்ஜெட் சமயத்தில் முதல்வர் முடிவெடுப்பார் என்றும் கூறினர். ஊழியர் சங்க நிர்வாகிகளும், தங்களுக்கு இந்த அரசு மீது எவ்வித கசப்புணர்வும் இல்லை என்றும், அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்றும் உறுதியளித்தனர்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக