சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிடும் வகையில், அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதாவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் மீது, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன், கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்றது.
இரு தரப்பு வாதங்களை விசாரித்து, நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்து கூறியதாவது:
கடந்த மே 13ம் தேதி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு, புதிய அரசு 16ம் தேதி பொறுப்பேற்றது. பொறுப்பேற்ற பின், 22ம் தேதி முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குறைந்த கால அவகாசத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் உட்பட பல விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின் பழைய பாடத்திட்டத்திற்கான புத்தகங்களை அச்சிட ஒப்பந்தம் கோர, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதிலிருந்து நிபுணர் குழு பரிந்துரையின் அடிப்படையில், சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்படவில்லை என்பது தெரிய வருகிறது. சமச்சீர் கல்வி கைவிடுவதற்கு அரசு எத்தனை காரணங்களைக் கூறினாலும், 2010 - 12ம் கல்வியாண்டிற்கு ஒன்பது கோடி புத்தகங்கள், 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டன என்பதை கோர்ட்டில் மறுக்கவில்லை. மேலும், சமச்சீர் கல்வி குறித்து, நிபுணர் குழு பரிந்துரைத்ததற்கான எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை.
நிபுணர் குழு வைத்து ஆராயாமல், பழைய பாடத்திட்டத்திற்கு போக வேண்டும் என முடிவு எடுத்ததில் உள்நோக்கம் உள்ளது. அட்வகேட் ஜெனரல், சமச்சீர் கல்வி நிறுத்துவது அரசின் நோக்கமல்ல, பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து, ஓராண்டில் ஆராய்ந்து நல்ல பாடத்திட்டத்தை கொண்டு வந்து, சமச்சீர் கல்வி தொடரப்படும் எனக் குறிப்பிட்டார். சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில், சில பக்கங்களில் முந்தைய அரசின் சுய விளம்பரம் இருக்கிறது என கூறிய அட்வகேட் ஜெனரல், புத்தகங்கள் அனைத்துமே சரியல்ல, தவறானது என்பதை நிரூபிக்கவில்லை. பிரிவு 9ல் உயர் அதிகார நிபுணர் குழு வைத்து, சமச்சீர் கல்வியின் தரம் பற்றி ஆய்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதை பார்க்கும் போது, இன்று வரை எந்த கமிட்டியும் அரசு அமைக்கவில்லை. எனவே, அவசர காலத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதை தெளிவுபடுத்துகிறது.
இந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, சமச்சீர் கல்வி சட்டத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர அனுமதிக்க முடியாது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு தவிர, மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில், சட்ட திருத்தத்தை அனுமதித்தால் பல பிரச்னைகள் எழுவதோடு, மாணவர்கள் நலனும் பாதிக்கும். எல்லா நிலைகளிலும் ஆராய்ந்ததில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வியை கைவிடும் சட்டத் திருத்தத்திற்கு தடை விதிக்கிறோம். சமச்சீர் கல்வி மற்றும் பாடப்புத்தகங்கள் குறித்து விரிவான ஆய்வு செய்ய, இந்த உத்தரவு தடையாக இருக்காது. மேலும், பாடத் திட்டங்களில் தேவையற்றதை நீக்க, சேர்க்க, திருத்த, இணைக்க மற்றும் மாற்றுவதற்கு இந்த அரசுக்கு அதிகாரம் உண்டு.
அரசியல் கட்சியின் சாதனையை விளம்பரப்படுத்தும் பகுதிகள் மற்றும் தனிநபர் சாதனையைக் கூறுவது போன்றவற்றை மாற்ற, அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இந்த அரசு, பாடப் புத்தகத்தில் அரசியல் கட்சி பற்றியோ, புகழ் பாடும் பாடங்களையோ சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள், தரமான புத்தகங்களை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. இந்த வழக்கில், ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவுப்படி, அரசு பரிந்துரைத்த, அங்கீகரித்த புத்தகங்களை தனியார் பள்ளிகள் தேர்வு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. அதனால், தனியார் கல்வி நிறுவனங்கள், பாடப்புத்தகம் குறித்த விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதை ஆய்வு செய்து, அரசு முடிவு எடுக்க வேண்டும்.மேலும், இந்த மனுக்களுக்கு அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக