தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.5.11

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பள்ளிகள் திறக்கும் முன்பே மாணவர்களுக்கு கிடைக்குமா?

அரசுப் பள்ளிகளை திறக்க 10 நாள்களே உள்ள நிலையில் நடப்பாண்டு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பள்ளி திறக்கும் முன்பே மாணவர்களுக்கு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  

கோடை விடுமுறைக்குப் பின், பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1-ல் திறக்க உள்ளன. அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசே இலவச பாடப் புத்தகங்களை வழங்குகிறது. சில ஆண்டுகளாக பள்ளிகள் திறந்து சில நாள்களுக்குப் பின் புத்தகங்கள் மாணவர்கள் கையில் கிடைத்தன. ஆனால் அரசு நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, இரு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் நாளில் புத்தகங்கள் வழங்கப்பட்டன.  

சென்ற ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கும் முன்னரே பாடப் புத்தகங்களை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதற்காக சென்ற ஆண்டு தபால் துறை மூலம் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டன. 

தமிழகத்தில் மாணவர்கள் ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஓரியண்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டங்களில் படித்து வருகின்றனர். இதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கவும், பாடச் சுமைகளை குறைக்கும் நோக்கத்திலும் தமிழக அரசு சமச்சீர்க் கல்வி முறையை அமல்படுத்த முடிவு செய்தது. அதன் முதல்கட்டமாக சென்ற கல்வி ஆண்டில் (2010-2011) முதல் மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு அமல்படுத்தியது.  இதற்கான பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டது. இந்த புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் பொருட்டு அந்தந்த பள்ளிகளுக்கு தபால் துறையினர் மூலம் தமிழ்நாடு பாடநூல் கழகமே நேரடியாக அனுப்பி வைத்தது.  

ஆனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாடநூல் கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தனியார் பள்ளி நிர்வாகிகள், தங்களுக்கு தேவையான புத்தகங்களுக்கு ஏற்ப முதல் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய நான்கு புத்தகங்கள் ஒரு செட் ரூ.190-க்கும், 6-ம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் புத்தகங்கள் ரூ.237.50 என கணக்கிட்டு டி.டி. எடுத்து கொடுத்து குடோனில் புத்தகங்களை பெற்றுக் கொண்டு பாடபுத்தகங்களை எடுத்துவர சில வாரங்கள் கூட ஆகாது.  

நடப்பாண்டில் (2011 - 2012) கல்வியாண்டில் 2-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு அமல்படுத்தியது. அதற்காக பல கோடி ரூபாய் செலவில் பாடப் புத்தகங்கள் விரைவாக தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு மாவட்டம் வாரியாக உள்ள பள்ளி குடோன்களுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டன. பின்னர் அங்கிருந்து அரசு, அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேவைக்கேற்ப பாடப் புத்தகங்களை எடுத்துச் சென்று இருப்பு வைத்துள்ளனர்.  

சென்ற ஆண்டு மே மாத கோடை விடுமுறையிலேயே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால் நடப்பாண்டில் இதுவரை மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. பள்ளிகள் திறக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில் மாணவ மாணவிகள் கையில் பாடப் புத்தகங்கள் வழங்காதது ஏனோ தெரியவில்லை. 

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது: "திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு கடந்த திங்கள்கிழமைதான் பாடப் புத்தகங்கள் வந்து சேர்ந்தன. செவ்வாய்கிழமை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி தகவல் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வந்தது. அதில் தற்போது புதிதாக தயாரிக்கப்பட்டு நடப்பாண்டு மாணவர்களுக்கு வழங்க இருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை எந்த ஒரு மாணவர்களுக்கும் கொடுக்க கூடாது எனவும், பாடப் புத்தகத்தில் அரசு சில பகுதிகளை நீக்கப் போவதாக தகவல் வந்தது. அதையெடுத்து நாங்களும் எந்த மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தங்களை வழங்கவில்லை. எங்களுக்கு மாவட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் கிடைத்தால்தான் மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை கொடுப்போம்' என அவர் கூறினார். 

கத்தரி வெயிலில் தினசரி மாணவர்கள் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை வாங்க வருவதும், ஆசிரியர்கள் பாடப் புத்தகங்களை தற்போது கொடுக்க முடியாது என அவர்களை திரும்பி அனுப்புவதையும் பார்ப்பதற்கு வேதனை அளிக்கிறது. எனவே அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் முன்னரே பாடப் புத்தகங்கள் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்பார்கின்றனர்.

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்