தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.5.11

தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்பு

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அனைவருக்கும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றதுடன், அ.தி.மு.க., 146 இடங்களை பிடித்து, தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்க வருமாறு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, கவர்னர் பர்னாலா அழைப்பு விடுத்தார். அதன் பேரில், ஜெயலலிதா கொடுத்த 33 அமைச்சர்கள் பட்டியலுக்கு கவர்னர் ஒப்புதல் தந்தார்.முதல்வராக ஜெயலலிதா, மூன்றாவது முறையாக பதவியேற்றார். 

இதற்கான விழா, சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு, ஆடம்பரமின்றி அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. காலை 10 மணி முதல், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் ஆயிரக்கணக்கில் வந்தனர்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பத்திரிகையாளர் சோ ராமசாமி, தெலுங்கு தேச கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலர் பரதன், தேசிய செயலர் ராஜா, ராஷ்டிரிய லோக்தளம் கட்சித் தலைவர் அஜித் சிங், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் உட்பட பலர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்றனர்.


நண்பகல் 12.23 மணிக்கு விழா மண்டபத்துக்கு ஜெயலலிதா வந்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் பட்டியலில் இடம்பெற்ற 33 எம்.எல்.ஏ.,க்களும் ஜெயலலிதாவுடன் மேடையில் அமர்ந்தனர். கவர்னர் பர்னாலா 12.40 மணிக்கு மேடைக்கு வந்தார். அவரை பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதா வரவேற்றார். பின், புதிய அமைச்சர்கள் ஒவ்வொருவரின் பெயரை குறிப்பிட்டு, கவர்னரிடம் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார்.


பின், நாட்டுப்பண் சுருக்கமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இதையடுத்து, 12.45 மணிக்கு தமிழக முதல்வராக ஜெயலலிதா மூன்றாம் முறையாக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பர்னாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு படிவத்தில் 12.56 மணி 57 வினாடிகளுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்டார். பின், அமைச்சர்களாக 33 பேர் பதவியேற்றனர். பதவியேற்றோருக்கு, கவர்னர் பர்னாலா கைகொடுத்து வாழ்த்தினார்.மதியம் 1.47 மணிக்கு தேசிய கீதத்துடன் விழா முடிந்ததும், கவர்னர் முதலில் புறப்பட்டார். அவரை வழியனுப்பிய ஜெயலலிதா, மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அனைவரும் ஜெயலலிதாவுக்கு சால்வைகள் போட்டு வாழ்த்து தெரிவித்தனர்.


விழாவில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, ஐகோர்ட் நீதிபதிகள், பல்கலை துணைவேந்தர்கள் திருவாசகம், மன்னர் ஜவகர், டாக்டர் மயில்வாகனன், பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, மகேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சி என்.வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், முன்னாள் டி.ஜி.பி.,க்கள் லஷ்மி நாராயணன், நடராஜ், தேவாரம் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சிகளை தலைமைச் செயலர் மாலதி தொகுத்தளித்தார்.



நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்