தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.5.11

அரசு துறைத்தேர்வு புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு: ரூ.100 விலையுள்ள புத்தகத்துக்கு வாடகை ரூ.2000

அரசு துறை ரீதியான தேர்வுகளுக்கான பாடப் புத்தகங்கள் விற்பனையில்லாததால், இப்புத்தகங்களை பதுக்கி வைத்திருக்கும் தனியார் கோச்சிங் சென்டர்கள், அவற்றை வாடகைக்கு விட்டு, கொள்ளை லாபம் அடித்து வருகின்றன. இதனால், அரசு அலுவலர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அரசின் அனைத்து துறைகளிலும், பணிபுரியும் அலுவலர்களின் பதவி உயர்வுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுக்கு இரு முறை தேர்வு நடத்துகிறது. பொதுவாக, அரசுப் பணியாளர்கள் அதிக பட்ச பதவி உயர்வுக்கு ஐந்து தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். கல்வித்துறையை பொறுத்தவரை, ஆசிரியர்களுக்கு மூன்று துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, தலைமை ஆசிரியராகவும், மாவட்டக்கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெற முடியும். எனவே, பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் இத்தேர்வை எழுதுவது வழக்கம்.

இத்தேர்வுகளுக்காக, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள், படிப்பதற்கு மட்டுமல்ல, தேர்வெழுதவும் கண்டிப்பாக தேவைப்படும். அதாவது, தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட சம்பந்தப்பட்ட துறை தேர்வு புத்தகத்தை வைத்திருந்தால் மட்டுமே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வை பொறுத்தவரை இப்புத்தகத்தை பார்த்து, அதற்குரிய சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். இப்புத்தகத்துக்கான ஜெராக்ஸ் பிரதிகள் வைத்திருந்தால், தேர்வெழுத அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால், ஒவ்வொரு அரசு அலுவலரும் தேர்வெழுத இப்புத்தகம் மிகவும் அத்தியாவசியமாகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் டிப்போக்களில் இத்துறை புத்தகங்கள் விற்பனை சுத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல கிளைகள் வைத்திருக்கும் ஒரு டுடோரியல் கல்லூரியில் மட்டும், இப்புத்தகங்களை ஆயிரக்கணக்கில் ஸ்டாக் வைத்துள்ளனர். இவர்களும், புத்தகங்களை விற்பனை செய்வதில்லை. 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை தேர்வெழுத வாடகைக்கு விட மட்டும், 2,000 ரூபாய் வசூல் செய்கின்றனர். சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் தேர்வெழுதி முடித்தவுடன், தேர்வறையின் வாசலிலேயே, அப்புத்தகத்தை டுடோரியல் நிறுவனத்தினர் வசூல் செய்து விடுவர். இதனால், ஒவ்வொரு துறை தேர்வுக்கும், தலா, 2,000 ரூபாய் வீதம் டுடோரியல் நிறுவனத்தினரிடம் வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு, அரசுத்துறை பணியாளர்கள் உள்ளாகியுள்ளனர்.

அரசுத்துறை பணியாளர்கள் கூறியதாவது: அரசு அலுவலர்களின் துறை தேர்வுகளுக்கு, அந்தந்த தலைமை அலுவலகம் மூலம் துறைத்தேர்வு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், சில ஆண்டுகளாக தமிழக அரசு மூலம் நடக்கும் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது. தமிழ்நாடு பாடநூல் கழக டிப்போ உட்பட, எங்குமே இப்புத்தகங்கள் விற்பனைக்கு கிடைப்பதில்லை. ஒரே ஒரு தனியார் கோச்சிங் சென்டருக்கு மட்டும், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எப்படி கிடைத்தது என தெரியவில்லை. அதே போல், அவர்கள் கொள்ளையடிப்பதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகமும் ஏன் ஒத்துழைக்கிறது என்பது புரியாத மர்மமாக உள்ளது.

கோடிக்கணக்கில், வருவாய் கொட்டும் இதன் பின்னணியில், பல அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் இருக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, அனைத்துத் துறை தேர்வுகளுக்குமான பாடப்புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நடத்தும் பகல் கொள்ளையை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்