தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.5.11

சமச்சீர் கல்வி விவகாரம்: வருகிறது சட்ட திருத்தம்?

சமச்சீர் கல்வி சட்டம், கடந்த ஆண்டு, தி.மு.க., அரசால் கொண்டு வரப்பட்டது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, 2010-11ம் ஆண்டிலும், இரண்டாம் வகுப்பில் இருந்து, ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 2011-12ம் ஆண்டிலும் அமல்படுத்தப்படும் என, சமச்சீர் கல்விச் சட்டத்திலேயே கூறப்பட்டது.

இச்சட்டத்தின்படி, கடந்த ஆண்டு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இந்த கல்வியாண்டில், மற்ற வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக, 200 கோடி ரூபாய் செலவில் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வினியோகிக்க தயாராக இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறுத்தி வைப்பது என, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளதே தவிர, ரத்து செய்யவில்லை. தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்றும், எனவே, புதிதாக கல்வியாளர்களை நியமித்து ஆராயப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்ததற்கு அரசு தரப்பு கூறும் காரணம் இது தான். தரமான கல்வியை சமச்சீர் கல்வி திட்டம் வழங்கவில்லை என்பது தான் தனியார் பள்ளிகளின் குற்றச்சாட்டு. பாடத்திட்டங்களை வகுத்தது எல்லாம் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் தான் என்பது முந்தைய ஆட்சியாளர்கள் முன்வைக்கும் வாதம்.

முன்னாள் துணைவேந்தர் முத்துகுமரன் தலைமையிலான சமச்சீர் கல்விக்கான குழுவில், தனியார் பள்ளிகள் சார்பில் இடம் பெற்றவர் கிறிஸ்துதாஸ். இவர் பிரைமரி, நர்சரி, மேல்நிலைப் பள்ளி நிர்வாக சங்கத்தின் பொதுச் செயலர். முத்துகுமரன் தலைமையிலான குழு, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், நர்சரி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை பாதிக்கும் என கருதுவதால் அறிக்கையை ஏற்கவில்லை என, ஒரு குறிப்பை, கிறிஸ்துதாஸ் எழுதியுள்ளார்.

சட்டத்தில் கூறியுள்ளபடி, 10ம் வகுப்பு வரையில் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி இருக்க வேண்டும். ஆனால், அமைச்சரவை கூடி இந்த ஆண்டு நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ளது. சட்டம், ஐகோர்ட் உத்தரவு மீறப்பட்டுள்ளது என்பதால், இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடக் கோரி, ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சமச்சீர் கல்விச் சட்டத்தை எதிர்த்து, கடந்த ஆண்டு ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், ஜனார்த்தனராஜா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்', சமச்சீர் கல்வித் திட்டம் செல்லும் என உத்தரவிட்டது. ஆனால், இந்த சட்டத்தில் உள்ள முக்கியமான பிரிவு 14 ஐ, ஐகோர்ட் ரத்து செய்தது. கொள்கை அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவு, பள்ளி கல்விக்கான மாநில போர்டை கட்டுப்படுத்தும் என்றும் அரசின் முடிவு இறுதியானது என்றும் பிரிவு, 14 கூறுகிறது.

அரசுக்கு அதிகாரம் வழங்கும் இந்தப் பிரிவை ஐகோர்ட் ஏற்கவில்லை. இந்தப் பிரிவானது, சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் பள்ளி கல்விக்கான மாநில போர்டின் அதிகாரங்கள், செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் பிரிவுக்கு முரணாக உள்ளது என, ஐகோர்ட் தனது உத்தரவில் கூறியுள்ளது. மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளை அரசியல் மாற்றங்களுக்காக அலைக்கழிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். 

தற்போது, சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசுக்கு நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். தனியார் பள்ளிகள் மற்றும் பள்ளிகளின் சங்கங்கள் சார்பில், அரசுக்கு ஆதரவாக மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது தொடர்பாக, சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் சட்டசபை கூட்டத் தொடரில் இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்