தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

22.5.11

சமச்சீர் கல்வி திட்டத்தில் வருகிறது மாற்றம்?

தி.மு.க., அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டுவர, அ.தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அச்சடிக்க வேண்டாம் என்றும், மாவட்ட தலைநகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை, பள்ளிகளுக்கு வினியோகிக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், திடீரென சமச்சீர் கல்வி திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாக உள்ளது.
 
கடந்த 2006ல், நடந்த சட்டசபை தேர்தலில், சமச்சீர் கல்வி திட்டம் குறித்த அறிவிப்பை, தி.மு.க., வெளியிட்டது. ஸ்டேட் போர்டு, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வி திட்டங்கள், சமுதாயத்தில் சரி சமமான, தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கவில்லை என்றும், இந்த குறையை போக்க, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்தில், சமமான பாடத்திட்டங்களை கொண்ட சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, தி.மு.க., அறிவித்தது.அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் நடந்தன. சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஆராய்ந்த பின், சட்டசபையில் இதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, நான்கு வகையான கல்வி வாரியங்களை ஒருங்கிணைத்து, "மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம்' ஏற்படுத்தப்பட்டது.பாடவாரியாக அனுபவம் வாய்ந்த நிபுணர் குழுக்களை வைத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து, சில அமைப்புகள் சுப்ரீம் கோர்ட் வரை சென்றன. ஆனால், "தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டம் செல்லும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது. இதையடுத்து, திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து, கடந்த கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது.
 
வரும் ஜூன் மாதம் துவங்கும் கல்வியாண்டில், இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதற்காக, ஏழு கோடிக்கும் அதிகமாக பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, 85 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்க்கவில்லை. எனினும், தி.மு.க., அரசு உருவாக்கிய பாடத்திட்டங்களில், கருணாநிதி எழுதிய படைப்புகளும், அவரை பற்றிய பல்வேறு தகவல்களும் இடம் பெற்றிருப்பதை, அ.தி.மு.க., அரசு விரும்பவில்லை. இதனால், கருணாநிதி சம்பந்தபட்ட அனைத்து பகுதிகளையும் உடனடியாக நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சமச்சீர் கல்வி திட்டம் தொடருமா, ரத்தாகுமா என்ற கேள்விக்கு, நேரடியாக பதிலளிக்கவில்லை. "மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எந்தவித பாதிப்பும் வராமல் அ.தி.மு.க., அரசு பார்த்து கொள்ளும்' என்று மட்டும் தெரிவித்தார்.
 
ஏற்கனவே 85 சதவீதம் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 15 சதவீத பணிகள், சென்னை, சிவகாசி உள்ளிட்ட நகரங்களில் நடந்து வந்தன. அச்சக அதிபர்களுக்கு, தற்போது நடக்கும் அச்சுப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு, மேலிடத்தில் இருந்து தகவல் தரப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அச்சாகி, மாவட்ட தலைநகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை, பள்ளிகளுக்கு வினியோகிக்க வேண்டாம் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்துள்ளது. 

இது குறித்து, பள்ளி கல்வித்துறை செயலர் சபீதாவிடம் நேற்று காலை கேட்டதற்கு, "சமச்சீர் கல்வி திட்டம் ரத்து செய்வது குறித்து, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை' என்றார்.ஆனால், பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மாவட்ட தலைநகரங்களில் இருந்து இன்னும் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படாததும், நடந்து வந்த அச்சகப் பணிகளை உடனடியாக நிறுத்த கூறியிருப்பதும், பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 

500 கோடி ரூபாய்? சமச்சீர் கல்வி திட்டத்திற்காக, இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாடப் புத்தகங்களை எழுதிய குழுவினருக்கு சம்பளம், பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கான பேப்பர் கொள்முதல், அச்சிடும் செலவு, மாவட்டங்களுக்கு பாடப் புத்தகங்களை அனுப்புவதற்கான போக்குவரத்து செலவு என, பல வகைகளில் அதிகளவில் செலவு செய்யப்பட்டுள்ளது.
 
சிவகாசியில் அதிகாரிகள்: இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் நிலையில், இரு அதிகாரிகள், சிவகாசியில் முகாமிட்டுள்ளனர். காலாண்டு தேர்வு வரையிலான பாடப்பகுதிகளை மட்டும் விரைவாக அச்சிட்டு தரும்படி, அங்குள்ள அச்சக உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அச்சக உரிமையாளர் பேட்டி: சமச்சீர் கல்வி திட்ட நிலவரங்கள் குறித்து, பெயர் வெளியிட விரும்பாத அச்சக நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: சமச்சீர் கல்வி பாடப்புத்கம் அச்சிடும் பணி, பெரும்பகுதி ஏற்கனவே முடிந்து, மாவட்ட தலைநகரங்களுக்கு பாடப் புத்தகங்களை அனுப்பி விட்டோம். மீதமுள்ள பணிகள் நடந்து வந்த நிலையில், திடீரென பணிகளை நிறுத்துமாறு, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். இதனால், பணிகளை நிறுத்திவிட்டோம். பழைய பாடப்புத்தகங்களை அச்சிட்டு தருமாறு அதிகாரிகள் கேட்கின்றனர். காலாண்டு தேர்வு வரையிலான மூன்று மாதங்களுக்கு தேவையான பாடப் பகுதிகளை மட்டும் 60 பக்கங்களில் அச்சிட்டு தருமாறு கேட்கின்றனர். இதை அச்சிட வேண்டும் என்றாலும், அதிக நாட்கள் தேவைப்படும். இதற்கான, "டெண்டர்' அறிவிப்பு, நாளை (இன்று) வெளியாகும் என கூறப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்