சமச்சீர் கல்வி திட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்றும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சூசகமாக தெரிவித்தார். அதே நேரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி, பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை உடனே நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில், சமச்சீர் கல்வி திட்ட அறிவிப்பை, தி.மு.க., வெளியிட்டது. அதன்படி, தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்விக்கென சட்டம் கொண்டு வரப்பட்டு, அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வரும் கல்வியாண்டில், இதர வகுப்புகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு, பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளதால், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் ரத்தாகுமா, பழையபடி ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வி திட்டங்கள் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பள்ளி கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.வி.சண்முகம், டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று, துறை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பாடநூல் கழக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், துறை செயலர் சபீதா, பாடநூல் கழக தலைவர் ஜீவரத்தினம் மற்றும் பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் பள்ளிகள் துறை, தேர்வுத்துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உட்பட, பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் நடந்து வரும் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து, அமைச்சர் கேட்டறிந்தார். குறிப்பாக, விரைவில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் குறித்தும், தனியார் பள்ளிகளுக்கான கட்டண அறிவிப்பு குறித்தும், அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார்.
கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:
* தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் வாபஸ் பெறப்படுமா அல்லது தொடர்ந்து செயல்படுத்தப்படுமா?
பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும் உரிய பாடப் புத்தகங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், இந்த அரசு பார்த்து கொள்ளும்.
* தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டண அறிவிப்பு எப்போது வெளிவரும்?
புதிய கட்டணம் நிர்ணயிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், புதிய கட்டணம் அறிவிக்கப்படும்.
* பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளிவரும்?
பணிகள் இன்னும் முடியவில்லை. பணிகள் நிறைவடைந்ததும், முன்கூட்டியே தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.
சமச்சீர் கல்வி திட்டம் குறித்து, அமைச்சர் சூசகமாக தெரிவித்துள்ள கருத்து மூலம், இத்திட்டம் வரும் கல்வியாண்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படுவது உறுதியாகியுள்ளது. இத்திட்டத்தை வாபஸ் பெற அரசு நினைத்தாலும், செய்ய முடியாத நிலை இருக்கிறது. சமச்சீர் கல்வி திட்டத்தில், ஒன்றரை கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில், திடீரென இத்திட்டத்தை வாபஸ் பெற்றால், மாணவர்களுக்கு வேறு பாடப் புத்தகங்களுக்கு வழங்க முடியாது. பழைய திட்டத்தின் கீழ், தேவையான பாடப் புத்தகங்கள் இருப்பில் இல்லை. அதனால், இந்தாண்டு எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலை, புதிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
கருணாநிதி படைப்புகள் நீக்கம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய பல பகுதிகள், 9, 10ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. செம்மொழி மாநாடு, கவிதை நடை உரைநடை, செம்மொழிப் பாடல், கருணாநிதி பற்றிய குறிப்புகள் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும், நீக்கப்பட்ட பகுதிகளாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. வரும், 2012-13ம் கல்வியாண்டில், புதிய பாடப் புத்தகங்கள் அச்சிடும் போது, கருணாநிதி சம்பந்தப்பட்ட பகுதிகள் முழுமையாக நீக்கப்பட்டு அச்சிடப்படும்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக