"திருமணமான ஆணுக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்கும் போது, திருமணமான பெண்ணுக்கும் அதை வழங்க மறுக்கக் கூடாது" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்தவர் ஞானவள்ளி. இவரது தாயார், நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றினார். 1997ம் ஆண்டு இறந்தார். அதற்கு முன், ஞானவள்ளிக்கு திருமணம் நடந்தது. தாயாரின் மரணத்துக்குப் பின், விவாகரத்தும் ஏற்பட்டது. கணவரால் கைவிடப்பட்ட பெண் என்கிற அடிப்படையில், தாயாரின் வேலையை கருணை அடிப்படையில் வழங்க, ஞானவள்ளி கோரினார்.
நகராட்சி தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. நகராட்சி நிர்வாக கமிஷனருக்கு, கரூர் நகராட்சி சார்பில், கடிதம் அனுப்பப்பட்டது. தாயாரின் இறப்புக்குப் பின் விவாகரத்து பெற்றதால், கருணை அடிப்படையில் பணி வழங்க முடியுமா என, விளக்கம் கோரப்பட்டது. இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து, கருணை அடிப்படையில், பணி வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் ஞானவள்ளி மனுத் தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கோவர்த்தன், ஞானசேகர், அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் ஆர்.ரவிச்சந்திரன், நகராட்சி தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகினர்.
மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
திருமணமான ஆணுக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்கும் போது, பெண்ணுக்கு திருமணமானால், அதைக் காரணம் காட்டி தகுதியிழப்பாக கருதக் கூடாது எனக் கோரி, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், கருணை அடிப்படையில் பெண்ணுக்கு வேலை வழங்க பரிசீலிக்கும் போது, அந்தப் பெண்ணின் திருமணத்தை தகுதியிழப்பாகக் கொள்ளக் கூடாது என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கிலும், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை கருத்தில் கொண்டு, மனுதாரரின் மனுவை, ஆறு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக