நாட்டில் சாதாரண மக்களும், அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை, வெளிப்படையாக தெரிந்து கொள்ள, மத்திய அரசு 2005ம் ஆண்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இது, தமிழகத்தில், 2007ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. தகவல் பெறும் உரிமைச் சட்டம், அறிமுகம் செய்த போது, அரசு துறைகளில் உள்ள அதிகாரிகள் வழங்க வேண்டிய தகவல்களால், நமக்கு பிரச்னை ஏற்படுமோ என்ற ஒருவித பயத்துடன் காணப்பட்டனர்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, அரசு துறைகளிலிருந்து தகவல் பெற விரும்புவோர், தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் குறித்த கேள்விகளை தாளில் எழுதி, 10 ரூபாய் கட்டணம் அல்லது, 10 ரூபாய் மதிப்புள்ள,"கோர்ட் ஸ்டாம்ப் கட்டணம்' இணைத்து, சம்பந்தப்பட்ட துறையில் உள்ள, பொது தகவல் அதிகாரியிடம் வழங்க வேண்டும். இது தான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முதல் கட்டம்.
பொது தகவல் அதிகாரி, கேள்விகளுக்கான தகவல்களை, 30 நாட்களுக்குள் உரியவரிடம் வழங்க வேண்டும். அவ்வாறு, வழங்காதபட்சத்தில், விண்ணப்பதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின், இரண்டாவது கட்டமான, முதல் மேல் முறையீட்டு அதிகாரியிடம் முறையிடலாம். பெரும்பாலும், சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் உயரதிகாரி தான், இப்பொறுப்பில் இருப்பார். இவர் சம்பந்தப்பட்ட தகவல்களை, விண்ணப்பதாரருக்கு, 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
இரு தரப்பும் தகவல்களை வழங்காதபட்சத்தில், மாநில தகவல் கமிஷனிடம் முறையிடலாம்.
தமிழகத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் இணையதளம், மோசமாக உள்ளது. கோவா, ஒடிசா போன்ற மாநிலங்களில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் இணையதளத்தில், அனைத்து தகவல்களும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. இரண்டாவது மேல் முறையீட்டு ஆணைகள், சரிவர பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய, தனி அலுவலகம் இல்லாதது குறையாக உள்ளது. தமிழக அரசு, தகவல் அறியும் கமிஷனுக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை. இதனால், கமிஷனின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்று தகவல்களை பெற விரும்பும் போது, அது அதற்குரிய அலுவலகம் இல்லையென்றாலும், அவருக்கு சம்பந்தப்பட்ட அலுவலகம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். ஆனால், சில அதிகாரிகள் அவ்வாறு செயல்படாமல், இதற்கான தகவல், இங்கு இல்லை என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர். தமிழகத்தில், தகவல் பெறும் சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கான பயிற்சி பெறாத அதிகாரிகள் பலர், பொறுப்பில் உள்ளனர்.
இதுகுறித்து, ஓய்வு பெற்ற வணிக வரித்துறை, துணை ஆணையர் ராமு கூறியதாவது:
தகவல் பெறும் உரிமைச் சட்டம், வட்டாட்சியர் அலுவலகங்களில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. தகவல் உரிமை பெறும் சட்டம், அரசு அதிகாரிகளிடையே, ஒருவித பயத்தை உருவாக்கியது. இதற்கு, மக்களிடத்தில் அதிக வரவேற்பு காணப்பட்டது. ஆனால், இரண்டாவது மேல் முறையீட்டு அலுவலர், எவ்வளவு நாட்களில் தகவல்களை வழங்க வேண்டும் என, காலம் நிர்ணயிக்கப்படாதது, இச்சட்டம் பற்றிய ஆர்வத்தை குறைப்பதாக உள்ளது.
இவ்வாறு ராமு கூறினார்.
காலியிடம் நிரப்பப்படுமா ? : தமிழகத்தில், மாநில தகவல் கமிஷனின் ஏழு பேர் கொண்ட குழுவில், தலைமை கமிஷனராக ஸ்ரீபதி உள்ளார். இவரைத் தொடர்ந்து, கமிஷனர்களாக பெருமாள் சாமி, சீனிவாசன், சாரதாநம்பி ஆரூரன் ஆகியோர் உள்ளனர். மூன்று இடங்கள் காலியாக உள்ளன. இது, எப்போது நிரப்பப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக